துயி பட்டணத்தில் லூஸியாவுக்கு தமதிரித்துவக் காட்சி

லூஸியா கூறுகிறாள்: எங்கள் மடத்தின் சிற்றாலயத்தில் சங். கொன்சால்வெஸ் சுவாமி அடிக்கடி பாவ சங்கீர்த்தனம் கேட்க வருவார்... இச்சமயத்தில்தான் ரஷ்யாவை மரியாயின் மாசற்ற இருதயத்துக்கு (பாப்பரசர் ஐக்கிய அர்ப்பணமாய்) ஒப்புக்கொடுக்க வேண்டுமென்பதையும், அந்நாட்டை நமதாண்டவர் மனந்திருப்ப வாக்களித்திருப்பதைப் பற்றியும் பரிசுத்த திருச்சபைக்கு நான் அறிவிக்க வேண்டும் என அவர் விரும்பும் தருணம் வந்துவிட்டதாகவும் சேசு என்னிடம் தெரிவித்தார்.

வியாழக்கிழமைகளில் இரவு 11 முதல் 12 மணி வரை திருமணி செய்ய என் ஞான அதிகாரிகளிடம் நான் உத்தரவு கேட்டுப் பெற்றிருந்தேன். ஒரு நாள் அப்படி நான் தனியே இருக்கையில், கோவில் நடுவிலிருக்கும் கிராதியின் மத்தியில் சம்மனசின் செபத்தை சாஷ்டாங்கமாக செபிப்பதற்காக முழந்தாளிட்டேன். களைப்பாக இருந்ததால் எழுந்து கைகளை விரித்தபடி அச்செபத்தைச் சொன்னேன். அங்கிருந்த ஒரே வெளிச்சம் வாடாவிளக்குத்தான். 

அப்போது திடீரென கோவில் முழுவதும் பரலோக வெளிச்சம் போல் பிரகாசமாயிற்று. பீடத்தின் மீது ஒளியால் ஆன ஒரு சிலுவை காணப்பட்டது. அது மேற்கூரை வரையிலும் உயர்ந்து நின்றது. மிகத் தெளிவான இந்த வெளிச்சத்தில் சிலுவையின் மேல் பாகத்தில் ஒரு மனிதனின் உருவம் இடுப்பு முதல் சிரசு வரையிலும் காணப்பட்டது. 

அம்மனிதனின் மார்பில் ஒளிவீசும் ஓர் புறா இருந்தது. சிலுவையில் அறையப்பட்டவராக இன்னொரு மனிதன் காணப்பட்டார். அவரது விலாவின் சற்றுக் கீழ் ஒரு பூசைப் பாத்திரமும் அதன்மேல் ஒரு பெரிய ஓஸ்தியும் ஆகாயத்தில் நிற்பதாகத் தெரிந்தது. சிலுவையில் அறையப்பட்டவருடைய கன்னங்களிலிருந்து வழிந்த சில இரத்தத்துளிகளும் அவர் மார்பின் காயத்திலிருந்து பாய்ந்த இரத்தமும் அந்த ஓஸ்தியில் பட்டு, பின் பாத்திரத்துள் விழுந்தன. 

சிலுவையின் வலது கரத்தினடியில் மாதா நின்றார்கள். அது பாத்திமா மாதா தான். தன் மாசற்ற இருதயத்தை இடது கரத்தில் வைத்திருந்தார்கள். அதில் வாளோ ரோஜா மலர்களோ இல்லை. முள்ளாலான முடியும் சுவாலையும் இருந்தன.

சிலுவையின் இடது கரத்தினடியில் படிகத் தண்ணீர் பெரிய எழுத்துக்களாகப் பாய்ந்து “வரப்பிரசாதம்”, “இரக்கம்” என்ற வார்த்தைகளாக உருவெடுத்தது.

மகா பரிசுத்த தமதிரித்துவத்தின் பரம இரகசியம் எனக்குக் காண்பிக்கப்பட்டதாக நான் கண்டுபிடித்தேன். அதைப் பற்றிய விளக்கத்தை நான் பெற்றுக் கொண்டேன். அதை வெளியிட எனக்கு உத்தரவில்லை.”

இது எப்படிப்பட்ட காட்சி! சத்திய கத்தோலிக்க வேதமே கட்டப்பட்டிருக்கிற பரிசுத்த தமதிரித்துவ சத்தியத்தை அதன் பொருளுடன் தத்ரூபமாக ஒரு மானிட ஆன்மா பெற்றுக் கொண்டுள்ளது! சொல்லப் போனால் உண்மையும் சத்தியமும் மெய்யும் எதார்த்தமான இருத்தல் என்பதெல்லாமாயிருக்கிற தேவாதி தேவனாகிய சர்வேசுரனையே இக்காட்சி வெளிப்படுத்துகிறதே! இவ்வரிய காட்சியைக் காண்பித்த இந்த மகா பூஜிதமான, மிகுந்த பரிசுத்த மான சமயத்தில் கீழ்வரும் செய்தி கொடுக்கப்படுகிறது. -

"உலகிலுள்ள சகல மேற்றிராணிமாருடன் பாப்பரசர் ரஷ்யாவை என் மாசற்ற இருதயத்துக்கு ஒப்புக் கொடுக்கும்படி அவரைக் கடவுள் கேட்கும் தருணம் இது. இதன் வழியாக கடவுள் ரஷ்யாவைக் காப்பாற்றுவதாக வாக்களிக் கிறார்" என்று மாதா லூஸியாவிடம் கூறுகிறார்கள்.

“பாவம் செய்கிற உலகத்தின் தண்டனைக் கருவியாக” இருக்கிற ரஷ்ய நாடு ஒருகாலத்தில் சர்வேசுரனுக்கும் மாதாவுக்கும் எவ்வளவு பிரியமாயிருந்தது! அதை கடவுள் மறக்கவில்லை. அதன்பின் பிரிவினை வந்தது. ரஷ்யா திருச்சபையை விட்டுப் பிரிந்தது. அதை மீண்டும் மனந்திருப்ப ஆண்டவருக்குள்ள ஆவல் இதிலே வெளிப்படுகிறது. ஆனால் அதை இனி மாதா வழியாக மட்டுமே அவர் செய்வார். ரஷ்யாவின் மனந்திரும்புதல் உலகத்தின் அமைதிக்கும் இரட் சண்யத்திற்கும் எவ்வளவு தேவைப்படுகிறது என்பதையும் நாம் உணரலாம். ரஷ்யாவை மாதாவுக்கு ஒப்புக்கொடுக்கும்படியாக நாம் வேண்டிக் கொள்ள மறக்கவே கூடாது.

மாதா மேலும் தொடர்ந்து லூஸியாவிடம்: "எனக்கெதிராகக் கட்டிக் கொள்ளப்படும் பாவங்களுக்காக தேவ நீதியால் தண்டிக்கப்படுகிற ஆன்மாக்களின் தொகை மிகப் பெரிதாயிருக்கிறது. அதற்குப் பரிகாரம் செய்யும்படி நான் கேட்கிறேன். இக்கருத்துக்காக உன்னையே பலி யாக்கு. ஜெபி” என்று கூறினார்கள். 

மாதாவின் இந்த வார்த்தைகளின் ஆழத்தை நாம் சிந்தித்து உணர வேண்டும். மாதா தன் மாசற்ற இருதயத்திற்குப் பரிகாரம் செய்யும்படி நம்மை அழைக்கிறார்கள். போன்றவேட்ரா எனுமிடத்தில் 1925, டிசம்பர் 10-ம் நாள் காட்சியில் “நீயாவது எனக்கு ஆறுதலளிக்க முயற்சி எடு” என்று முள் நிரம்பிய தன் மாசற்ற இருதயத்தைக் காட்டி கேட்டார்கள். அந்த விண்ணப்பத்தை பரிசுத்த தமதிரித்துவமே அங்கீகரிக்கிறது என்று காட்ட இத்திரித்துவ காட்சிக்குப்பின் தன் மாசற்ற இருதயத்துக்குப் பரிகாரம் செய்யும்படி கேட்கிறார்கள். இவ்விரு விண்ணப்பங்களிலும் பாத்திமா செய்தி முழுவதையும் நாம் காணலாம். பரிகாரம் செய்யும்படி லூஸியா வழியாக நம் ஒவ்வொருவரையும் மாதா அழைப்பதையும் அறியலாம்.

இது மட்டுமா? “இக்கருத்துக்காக நீ உன்னைப் பலியாக்கு. ஜெபி” என்று மாதா லூஸியாவுக்குக் கட்டளையிட்டதுபோல் பேசுகிறார்கள். உண்மைதான். லூஸியா அந்த அளவுக்கு மாதாவுடன் அந்நியோந்நியமாய் அன்பு கொண்டிருந்தாள். அதனால் மாதாவும் அப்படி பலியாகும்படி அன்புக் கட்டளையிட முடிந்தது.

மாதாவின் அப்போஸ்தலர்களே! நம்மிடமும் மாதா இப்படிக் கட்டளையிட முடியுமா? அதை நாம் ஏற்போமா? அந்த அளவிற்கு நம்மிடம் மாதா மீது பாசமுள்ள அன்பு இருக்கிறதா? -

இருக்க வேண்டும். மாதா நம் தாயானால் அப்படிப்பட்ட அன்பை நாம் மாதாவுக்குக் காட்ட வேண்டும். பலி ஆன்மாக்களாக நாம் ஆக வேண்டும். தனியாகவும் சில மாதா அப்போஸ்தலர்கள் சேர்ந்தும் நாம் நம் அன்புத் தாயை நம் உயிரைவிட அதிகமாய் நேசிக்கிற பிள்ளைகள் என்று காட்ட முன்வர வேண்டும். இதுவே மாதா அப்போஸ்தலர்களின் உண்மையான அழைப்பு. மாதாவை நேசிப்பதிலே பரிசுத்த தமதிரித்துவம் நேசிக்கப்படுகிறார்கள். நமக்கு மாதா வழியாகவே அனைத்து தொடர்புகளும் கடவுளுடன் ஏற்படுவதால் மாதாவை நாம் நேசிக்கிற அளவு கடவுளை நேசிப்போம்.

இவ்வுண்மை திருச்சபையின் வேதபாரகர்கள் பலரால் கூறப்பட்டுள்ளது.

இதன் முடிவு என்ன? நாம் நம் அனைத்தையும் மாதாவிடம் விட்டுக் கொடுத்து ஒப்படைத்து இழந்து விட்டு மாதாவை முழுவதும் பெற்றுக்கொள்வோம். மாதாவை பெற்றுக் கொள்வதால் நமதாண்டவரும் இரட்சகருமாகிய சேசுவையும் அவரிலே பரிசுத்த தமதிரித்துவ சர்வேசுரனையே பெற்றுக் கொள்வோம்.