சகருடைய சீடர்களின் எண்ணிக்கை சிறியதாக இருந்தாலும், அவர்கள் மீது வெற்றிபெற கொடியவர்களாகிய திருச்சட்ட வல்லுனர்களாலும், பரிசேயர்களாலும் இயலவில்லை. திருச்சட்ட வல்லுனர்களும், பரிசேயர்களும் கிறிஸ்துநாதரின் மாசற்றதனத்தைப் பற்றிய அவதூறுகளை மக்களிடையே பரப்ப முயன்றார்கள். நம் ஆண்டவரின் போதனைக்கும், அவரது நற்குணத்திற்கும் களங்கம் வருவிக்கும் நோக்கில், தங்கள் வஞ்சகமான போலி வாதங்களைக் கொண்டு மக்கள் கூட்டங்களை ஏமாற்றப் பாடுபட்டார்கள். இவ்வாறு அவர்கள் சூரியனிலேயே கறைகளைக் கண்டுபிடிக்க முயன்றார்கள் என்றாலும் அநேகர் அவரை உண்மையான மெசியாவாக அடையாளம் கண்டு கொண்டார்கள்.
பரிசேயரின் தண்டனைகளுக்கோ அச்சுறுத்தல்களுக்கோ அஞ்சாமல், பகிரங்கமாக அவரோடு சேர்ந்து கொண்டார்கள். அவருடைய போதனைகளை ஏற்றுக் கொண்டார்கள். அப்படி கிறிஸ்துநாதரைப் பின் சென்ற அனைவரும் மோட்சம் சென்றார்களா? ஓ, இந்த இடத்தில் இவ்வளவு பெரிதான ஒரு காரியத்தில், ஒரு அவசர முடிவுக்கு வருவதற்குப் பதிலாக, நான் தெய்வீக நியமங்களின் ஆழ்ந்த பரம இரகசியத்தை வணங்குகிறேன், அதன் பாதாளங்களை மௌனமாக ஆராதிக்கிறேன்!
இன்று நான் கையாள இருக்கிற கருத்து மிகக் கடுமையானது; அது திருச்சபையின் தூண்களைக்கூட அதிரச் செய்தது. மிகப்பெரும் புனிதர்களையும் கடும் அச்சத்தால் நிரப்பியது. இந்த அச்சத்தின் - காரணமாக, வனவாசிகள் பாலைவனங்களைத் தேடி ஓடி தங்கள் வாழ்நாட்கள் முழுவதையும் தவத்தில் கழித்தார்கள். இந்தப் பிரசங்கத்தின் நோக்கம் இரட்சிக்கப்படுகிற கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை, நரகத்திற்குத் தீர்ப்பிடப்படும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையைவிட அதிகமா? அல்லது குறைவா? என்பதைத் தீர்மானிப்பதுதான்.
இது கடவுளின் தீர்ப்புகளைப் பற்றிய ஒரு பயனுள்ள பயத்தை உங்களில் ஏற்படுத்தும் என நான் நம்புகிறேன்.
சகோதரர்களே! நான் உங்கள்மீது கொண்டுள்ள அன்பின் காரணமாக "நீங்கள் நிச்சயமாக மோட்சத்திற்குச் செல்வீர்கள்; பெரும் எண்ணிக்கையிலான கிறிஸ்தவர்கள் இரட்சிக்கப் -படுகிறார்கள். ஆகவே நீங்களும் இரட்சிக்கப்படுவீர்கள்" என்று உங்கள் ஒவ்வொருவரிடமும் சொல்லத்தான் நான் விரும்புகிறேன். அதன்மூலம் நித்திய பேரின்பமாகிய மாபெரும் வெற்றியின் நம்பிக்கையில் உங்களை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் விரும்புகிறேன். ஆனால் நீங்கள்தான் உங்கள் மிக மோசமான எதிரிகள் என்பதுபோல, கடவுளின் சட்டங்களுக்கு எதிராக நீங்கள் கலகம் செய்யும்போது இந்த இனிமையான உறுதிப்பாட்டை நான் எப்படி உங்களுக்குத் தர முடியும்?
உங்களை இரட்சிக்க வேண்டும் என்ற ஓர் உண்மையுள்ள ஆசையையும், ஏக்கத்தையும் நான் கடவுளில் காண்கிறேன். ஆனால் அதற்கு நேர்மாறாக, நித்திய தண்டனை தீர்ப்பை அடைந்தே தீர வேண்டும் என்ற ஒரு தீர்மானமுள்ள நாட்டத்தை நான் உங்களில் காண்கிறேன். அப்படியிருக்க, இன்று நான் என்ன சொல்வேன் என்று நினைக்கிறீர்கள்? நான் பேசப்போவது உங்களுக்குப் பெரும் அதிர்ச்சியைத் தரலாம். ஆனால் இதை நான் பேசாவிடில், கடவுளை கோபம் கொள்ளச் செய்பவனாக நான் இருப்பேன்.
ஆகவே, இந்த தியானக் கருத்தை நான் இரண்டாகப் பிரித்துக் கொள்ளப் போகிறேன்.
முதல் பகுதியில் நான் உங்களை கடும் அச்சத்தால் நிரப்பப் போகிறேன். இதை திருச்சபையில் மறை நூல் வல்லுனர்களும், திருச்சபை தந்தையரும் இந்தக் காரியத்தை அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்து, வளர்ச்சி பெற்ற கிறிஸ்தவர்களில் அதிகமானவர்கள் நரகத்திற்குத்தான் தீர்ப்பிடப்படுகிறார்கள் என்று அறிக்கையிடுவதை எடுத்துக் காட்டுவேன். அந்த பயங்கரமுள்ள பரம இரகசியத்தை மௌனமாக ஆராதித்தபடி, இது பற்றிய என் சொந்த உணர்வுகளை நான் எனக்குள்ளேயே புதைத்துக் கொள்வேன்.
இரண்டாம் பகுதியில் கடவுளற்ற மனிதர்களுக்கு எதிராக கடவுளின் நன்மைத்தனத்தை வெளிப்படுத்த நான் முயற்சி செய்வேன். நரகத் தீர்ப்படைபவர்கள் தங்கள் சொந்த துர்க்குணத்தின் காரணமாகவே அந்தத் தீர்ப்புக்கு உள்ளாகிறார்கள். ஏனெனில் அவர்களே அந்தத் தீர்ப்புக்கு உள்ளாக விரும்புகிறார்கள் என்பதை உங்களுக்கு நிரூபிப்பதன் மூலம் இதை நான் செய்வேன். ஆகவே, இப்போது இங்கே இரண்டு மிக முக்கியமான உண்மைகள் இருக்கின்றன.
முதலாவது உண்மை உங்களை அச்சுறுத்துகிறது என்றால், ஏதோ நான்தான் மோட்சத்திற்கான பாதையை உங்களுக்கு அதிக ஒடுக்கமானதாக ஆக்கிவிட்டேன் என்பதுபோல, கோபத்தை என் பேரில் திருப்பாதீர்கள். ஏனெனில் இந்தக் காரியத்தில் நான் நடுநிலையில் இருந்து கொள்ளவே விரும்புகிறேன். அதைவிட அறிவு பூர்வமான வாதத்தைக் கொண்டு உங்கள் இருதயத்தில் இந்த சத்தியத்தை பதிக்கும் திருச்சபையின் மறை நூல் வல்லுனர்கள் மற்றும் தந்தையருக்கு எதிராக அதைத் திருப்புங்கள். |
இரண்டாவது உண்மை உங்கள் கண்களை மறைக்கிற மாயையில் இருந்து உங்களை விடுவிக்கும் என்றால், அதற்காக கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் நீங்கள் உங்கள் இருதயங்களை முழுமையாக தமக்கும் தர வேண்டும் என்ற ஒரே ஒரு காரியத்தை மட்டும்தான் அவர் விரும்புகிறார். இறுதியாக, நான் என்ன நினைக்கிறேன் என்பதைச் சொல்லும்படி என்னை வற்புறுத்துவீர்கள் என்றால் உங்கள் ஆறுதலுக்காக நானும் என் கருத்தை எடுத்துரைப்பேன்.