அர்ச். போர்ட் மவுரீஸின் லியோனார்ட் பற்றிய அறிமுகம்

அர்ச். போர்ட் மவுரீஸின் லியோனார்ட் உரோமையில் உள்ள அர்ச். பொனவெந்தூர் துறவற மடத்தில் வாழ்ந்த மிகப் பரிசுத்தமான ஒரு பிரான்சிஸ்கன் துறவி ஆவார். அவர் திருச்சபை வரலாற்றில் மிகவும் புகழ் பெற்ற வேதபோதகர்களில் ஒருவர். அவர் ஓர் ஊரில் பிரசங்கம் செய்கிறார் என்றால், அங்குள்ள கோவிலில் மக்கள் ஆயிரக்கணக்கில் குவியத் தொடங்கி விடுவார்கள். இவ்வளவு பெரிய கூட்டத்தைத் தாங்கக் கூடிய அளவுக்கு கோவிலில் போதிய இடமில்லாத நிலையில், அவர் அந்த ஊரில் அல்லது நகரத்திலுள்ள சதுக்கத்தில் அவர்களுக்குப் பிரசங்கம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவருடைய போதகத் திறமை எவ்வளவு அற்புதமானதாகவும், பரிசுத்தமானதாகவும் இருந்தது என்றால், ஒருமுறை உரோமையில் அவர் இரண்டு வாரத் தொடர் பிரசங்கங்கள் செய்தபோது பாப்பரசரும், கர்தினால்மாரும்கூட அவர் பேசுவதைக் கேட்க வந்தார்கள். திவ்விய கன்னிகையின் அமல உற்பவமும், திவ்விய நற்கருணை ஆராதனையும், இயேசுவின் திரு இருதய பக்தியும் அவர் தம் பிரசங்களுக்கு எடுத்துக் கொண்ட முக்கியக் கருத்துக்களாக இருந்தன. அவருடைய மரணத்திற்குப் பின் நூற்றுக்கும் சற்று அதிக ஆண்டுகள் கழித்து, அமல உற்பவம் ஒரு விசுவாச சத்தியமாக வரையறுக்கப்பட்டதில் அவருடைய பங்கு நிச்சயமாக முக்கியமானது. அவர்தான் நற்கருணை ஆசீர்வாதத்தின் முடிவில் பாடப்படும் தேவஸ்துதிகளை நமக்குத் தந்தார். ஆனால் இவை அனைத்தையும்விட அர்ச்.லியோனார்ட் தமது சிலுவைப்பாதை பக்திக்காக அதிகப் புகழ் பெற்றவராக இருந்தார். இருபத்து நான்கு ஆண்டுகள் இடைவிடாமல் போதகப் பணியாற்றிய பிறகு அவர் தமது எழுபத்தைந்தாம் வயதில் பாக்கியமான மரணமடைந்தார்.

“இரட்சிக்கப்படுவோரின் மிகச் சிறிய தொகை” அவருடைய பிரசங்கங்கள் அனைத்தும் பிரசித்தி பெற்றதாகும். பெரிய பாவிகளை மனந்திருப்ப அவர் இந்த நரகம் என்னும் பயங்கர உண்மையைத்தான் சார்ந்திருந்தார். நரகத்தைப்பற்றி அடிக்கடி பிரசங்கம் செய்வதன் மூலம் அவர் ஏராளமான ஆத்துமங்களை மனந்திருப்பினார். அவருக்குப் புனிதர் பட்டம் வழங்குவதற்கான விசாரணையின்போது, அவரது மற்ற எழுத்துக்களைப்போலவே, இந்த பிரசங்கமும் திருச்சபை சட்ட ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்தப் பிரசங்கத்தில் அவர் கிறிஸ்தவர்களின் பலதரப்பட்ட வாழ்வின் அந்தஸ்துகளை ஆழ்ந்து ஆராய்ந்து, இவ்வளவு அதிகமான மனிதர்களில் ஒரு சிலர்தான் இரட்சணியம் அடைகிறார்கள் என்று தம் உரையை முடிக்கிறார்.

இந்த அற்புதமான கட்டுரையை வாசித்து தியானிக்கிற வாசகர்கள் அதில் முன் வைக்கப்படுகிற வாதங்களின் உறுதியான, நம்பகத்தன்மையைப் புரிந்து கொள்வார்கள். இந்த வாதங்கள் திருச்சபையின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.