முடிவுரை: அர்ச். போர்ட் மவுரீஸின் லியோனார்ட் ஆற்றிய பிரசங்கம்

இன்று உங்கள் அனைவரையும் உங்கள் இருதயங்களில் தேற்றப்பட்டவர்களாக அனுப்ப நான் விரும்புகிறேன். ஆகவே இரட்சிக்கப்படுவோரின் எண்ணிக்கை பற்றி என் உணர்வு என்ன என்று நீங்கள் கேட்பீர்களானால், அது இதுதான்:

இரட்சிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமோ, குறைவோ அது பிரச்சினையில்லை. யாரெல்லாம் இரட்சிக்கப்பட விரும்புகிறார்களோ, அவர்கள் எல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள் என்று நான் சொல்கிறேன். நரகத்தீர்வை பெற ஒருவன் விரும்பவில்லை என்றால் நான் சொல்கிறேன், இரட்சிக்கப்படுபவர்கள் வெகு சிலரே என்பது உண்மைதான். ஏனெனில் நன்றாக வாழ்பவர்கள் ஒரு சிலர்தான்.

மற்றவர்களைப் பொறுத்தவரை, இந்த இரண்டு கருத்துக்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

அதிக எண்ணிக்கையிலான கத்தோலிக்கர்கள் தண்டனைத் தீர்ப்பிடப்படுகிறார்கள் என்று ஒரு கருத்து சொல்கிறது.

இதற்கு மாறாக, அதிக எண்ணிக்கையிலான கத்தோலிக்கர்கள் இரட்சிக்கப்படுகிறார்கள் என்று மற்றொரு கருத்து பொய்யான விதத்தில் பாசாங்கு செய்கிறது.

முதல் கருத்தை உறுதிப்படுத்தும்படி, ஒரு தேவதூதர் கடவுளால் அனுப்பப்படுவதாக கற்பனை செய்யுங்கள்.

அவர் உங்களிடம் வந்து அதிக எண்ணிக்கையிலான கத்தோலிக்கர்கள் நரகத் தீர்வையடைவது மட்டுமல்ல, மாறாக இங்கே கூடியிருக்கும் அனைவரிலும் ஒரே ஒருவர் மட்டும் இரட்சிக்கப்படுவார் என்று சொல்கிறார். நீங்கள் கடவுளின் கட்டளைக்குக் கீழ்ப்படிபவராகவும், இந்த உலகின் சீர்கேட்டை வெறுப்பவராகவும், தவ உணர்வோடு இயேசு கிறிஸ்துநாதரின் திருச்சிலுவையை அரவணைத்துக் கொள்பவராகவும் இருந்தால், இரட்சிக்கப்படவிருக்கும் அந்த ஒரே ஒருவர் நீங்களாகத்தான் இருப்பீர்கள்.

இப்போது அதே சம்மனசானவர் உங்களிடம் திரும்பி வந்து இரண்டாவது கருத்தை உறுதிப்படுத்துகிறார் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்.

கத்தோலிக்கர்களில் பெருந்தொகையினர் இரட்சிக்கப்படுவது மட்டுமல்லாமல், இங்கே கூடியிருக்கும் எல்லோரிடமும் ஒரே ஒருவன்தான் நரகத் தீர்வையிடப்பட இருக்கிறான். மற்ற எல்லோரும் இரட்சிக்கப்படுவார்கள் என்று அவர் உங்களுக்கு சொல்கிறார். அதன்பிறகும் நீங்கள் அநியாய வட்டி வாங்குவதையும், பழி வாங்குதல்களையும், உங்கள் அக்கிரமச் செயல்களையும் தொடர்ந்து செய்து கொண்டிருப்பீர்கள் என்றால், நரகத் தீர்வையடையவிருக்கும் அந்த ஒரே ஒருவர் நீங்களாகத்தான் இருப்பீர்கள்.

இரட்சிக்கப்படுபவர்கள் பலரா, சிலரா என்று தெரிந்து கொள்வதில் என்ன பயன் இருக்கிறது? "உங்கள் அழைத்தலையும், தெரிந்துகொள்ளுதலையும் உங்கள் நற்செயல்களால் நிச்சயப்படுத்திக் கொள்ளும்படி அதிகம் அதிகமாய் பிரயாசைப்படுங்கள்" என்று புனித பேதுரு நம்மிடம் கூறுகிறார். புனித தாமஸ் அக்குவினாசின் சகோதரி அவரிடம், தான் மோட்சம் செல்ல என்ன செய்ய வேண்டும் என்று கேட்டபோது, "நீ இரட்சிக்கப்பட விரும்பினால் இரட்சிக்கப்படுவாய்" என்று அவர் பதிலளித்தார்.

நானும் அதையே உங்களிடம் சொல்கிறேன். என் பிரகடனத்தின் நிரூபணம் இதோ:

ஒருவன் சாவான பாவம் கட்டிக் கொள்ளா. விடில், அவன் நரகத் தீர்ப்பை அடைவதில்லை . இது நம் விசுவாசம். மேலும் சாவான பாவம் கட்டிக் கொள்வதற்கு, ஒருவன் அதைச் செய்ய விரும்ப வேண்டும். இது மறுக்க முடியாத மறைநூல் போதகமாகும். ஆகவே, எவனும் நரகம் செல்ல விரும்பாவிடில், அங்கே செல்வதில்லை. இதன் விளைவு வெளிப்படையானது. உங்களைத் தேற்ற இது போதாதா?

உங்கள் கடந்த கால பாவங்களைப் பற்றி அழுங்கள், நல்ல பாவசங்கீர்த்தனம் செய்யுங்கள், இனி பாவம் செய்யாதீர்கள். அப்போது இரட்சிக்கப்படுவீர்கள். ஏன் உங்களை இப்படி வதைத்துக் கொள்கிறீர்கள்? ஏனெனில் நரகம் செல்வதற்கு நீங்கள் சாவான பாவம் செய்ய வேண்டியிருக்கும் என்பதும், சாவான பாவம் கட்டிக் கொள்வதற்கு ஒருவன் அதை விரும்ப வேண்டும் என்பதும், இதன் காரணமாக, தானே விரும்பினாலன்றி எவனும் நரகத்திற்குச் செல்வதில்லை என்பதும் உறுதி. இது வெறும் கருத்து அல்ல, மாறாக இது மறுக்க முடியாததும், மிக ஆறுதலானதுமாகிய சத்தியமாகும். இதைப் புரிந்து கொள்ள கடவுள் உங்களுக்கு அருள்வாராக. அவர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.