போர்த்துக்கல் நாடு மரியாயின் நிலம் என்று அழைக்கப்படுகிறது. “அமல உற்பவ மாமரி“யை இந்நாடு தங்கள் பாதுகாவலியாகக் கொண்டுள்ளது. இந்நாட்டு அரசர்களும், பிரபுக்களும் கன்னி மாமரியை தங்கள் பாதுகாவலியாகக் கொண்டிருந்தார்கள். சேசுவின் சிலுவை போர்த்துக்கல் நாட்டின் சின்னமாக விளங்கி வந்தது.
1634-ம் ஆண்டு போர்த்துக்கல் அரசரால் அந்நாடு அமல உற்பவ அன்னைக்கு அர்ப்பணம் செய்யப்பட்டது. இவ்வன்னையை ஒருபோதும் மறத்தலோ, மறுத்தலோ கூடாது என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டது. இவ்வாக்குறுதியை அங்கீகரிக்கும்படி பாப்பரசரிடம் தூதுவர்கள் சென்று விண்ணப்பித்துக் கொண்டார்கள். இதன் பின்னர் போர்த்துக்கல் மன்னர்கள் தங்கள் கிரீடத்தை மாமரி அன்னைக்கு காணிக்கையாக்கி விட்டார்கள். அன்று முதல் (1634) போர்த்துக்கல் அரசர்கள் யாரும் அரச மகுடத்தை தங்கள் தலையில் சூடியதே இல்லை. போர்த்துக்கல் நாட்டில் எல்லா மேற்றிராசன தேவாலங்களும் விண்ணேற்படைந்த “ பரலோக மாதாவிற்கு “ அர்ப்பணம் செய்யப்பட்டன.
போர்த்துக்கல் தேசிய பல்கலைக்கழகம் கொயிம்பிரா நகரில் உள்ளது. அம்மாபெரும் கல்லூரியின் சார்பாக மாமரி ஜென்மப்பாவமின்றி உற்பவித்த சத்தியத்தை எவ்வகையிலேனும் பாதுகாப்பது என ஆணையிட்டு கூறப்பட்டது. அதுவும் இச்சத்தியம் விசுவாச உண்மையாக அறிவிக்கப்படுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே!
இந்நாட்டு போர்வீரர்கள் யாவரும் தங்களுடன் ஜெபமாலையை வைத்திருக்க வேண்டும் என்பது அரசாங்க கட்டளை. போர்வீரர்களிடம் ஜெபமாலையைப் பார்த்துவிட்டு அவர்களுடைய ஆங்கிலத்தளபதிகள் ஆச்சரியப்பட்டார்கள்.
போர்த்துக்கல்லின் சமூக மேல்மட்டத்தில் இப்படியென்றால், சாதாரண மக்களிடம் மரியன்னை மீது அன்பு இதைவிட அதிகமாயிருந்தது.“ ஐயா இன்ன ஊர் இங்கிருந்து எவ்வளவு தூரம் ? என்று யாரும் கேட்டால், “ இரண்டு ஜெபமாலைத்தூரம் என்று நாட்டுப்புற மக்கள் பதில் கூறுவார்கள்.
மாலை மணி ஆறு ஆகிவிட்டால், தெருவோரமிருக்கும் தன் வீட்டு ஜன்னலைத் திறந்து வைத்து கையைத் தட்டுவாள். கைத்தட்டு கேட்டதும் அந்த தெருவில் உள்ள எல்லா ஜன்னல்களும் திறக்கப்படும்.அத்தோடு “தெரு ஜெபமாலை” ஆரம்பிக்கப்படும். தெருவின் ஒரு பக்கத்தில் உள்ள வீட்டார், “ அருள் நிறைந்த மரியாயே வாழ்க...“ என்ற முதல் பகுதியைச் சொல்ல, தெருவின் மறுபக்கத்து வீட்டார்கள், “ அர்ச்சிஷ்ட்ட மரியாயே...” என்ற இரண்டாம் பகுதியைச் சொல்வார்கள். குடும்பத்திலுள்ள பெண் குழந்தைகள் ஏறக்குறைய எல்லோருக்குமே “ மரியாள் “ என்ற பெயர் இருக்கும்.
இப்படிப்பட்ட நாடு “ மரியாயின் நிலம் “ என்று அழைக்கப்பட்டதில் ஆச்சரியம் என்ன?
நன்றி : பாத்திமாக் காட்சிகள் நூல்
இயேசுவின் இரத்தம் ஜெயம் ! இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !