பாத்திமா காட்சிகள் பகுதி- 7

இணை பிரியாத மூன்று உள்ளங்கள்..

லூசியா வீட்டுப்பக்கத்தில் ஒரு நல்ல தண்ணீர்க் கிணறு உண்டு. அதனுள் ஒலிவ மர இலைகளும், காய்களும் விழாமல் இருக்க பெரிய படலைக் கற்களால் கிணற்றை மூடி இருந்தார்கள். அந்தக் கல்லின் மேல் உட்கார்ந்து கொண்டோ, அல்லது படுத்துக்கொண்டோ மூன்று குழந்தைகளும் மகிழ்ச்சியாக பேசி சிரித்துக் கொண்டிருப்பார்கள். மாலையில் வானத்தில் நட்சத்திரங்கள் தோன்றுவதை ஜஸிந்தா ஒவ்வொன்றாக எண்ணுவாள். எண்ண முடியாமல் போகும்வரை ஒன்று, இரண்டு, மூன்று என்று எண் சொல்லிக்கொண்டிருப்பாள். நட்சத்திரங்களுக்கு சம்மனசுகளின் விளக்கு என்று பெயர். சூரியன் ஆண்டவருடைய விளக்கு. சந்திரன் தேவதாயின் விளக்கு. பிரான்சிஸ் “ எனக்கு ஆண்டவருடைய விளக்குதான் பிடிக்கும் “ என்பான். “ எனக்கு அது பிடிக்காது. அது பார்க்கிறவர்கள் கண்ணைக் கூசும். எனக்கு நம் அம்மாவின் விளக்குதான் பிடிக்கும் “ என்பாள் ஜஸிந்தா. இப்படி வாக்குவாதம் எல்லையில்லாமல் நீண்டுகொண்டே இருக்கும்.

லூசியா எப்போது ஆடுகளுடன் திரும்பி வருவாள் என்று எதிர்பார்த்துக் கொண்டேயிருப்பார்கள் பிரான்சிஸும், ஜஸிந்தாவும். பிரான்சிஸ்  எதிர்பார்ப்பான்; ஆயினும் ஜசிந்தாவைப் போல் அவ்வளவு தீவிரமாயிருக்க மாட்டான். லூசியா வந்ததும் ஜஸிந்தா அவனை நோக்கி ஓடிப்போவாள். காலையிலிருந்து அதுவரை நடந்த செய்திகளை ஒன்றுவிடாமல் சொல்லி முடித்துவிடுவாள்.

லூசியாவுடன் தன்னையும் ஆடு மேய்க்க அனுப்பும்படி ஜஸிந்தா தன் தாயிடம் மீண்டும் கேட்டுப்பார்த்தாள். அவளுக்கு அனுமதி கிடைக்கவில்லை. அவளுக்கு அதுவே பெரிய வேதனையாயிருந்தது. அவள் இவ்வாறு தூரமாயிருக்கும் நாட்களில் மேகம் கூடி மந்தாரம் விழுந்து விட்டால் அவளுக்கு மகிழ்ச்சியே இருக்காது. “ இன்று சம்மனசுகள் தங்கள் விளக்குகளைக் கொளுத்த மாட்டார்கள் போலும் ! “ என்பாள். நம் அம்மாவின் விளக்கில் எண்ணெய் இல்லை போலும் என்று வருத்தமாகக் கூறுவாள்.

ஜஸிந்தாவுக்கு அவள் விரும்புவதெல்லாம் கிடைத்து விட வேண்டும். லூசியாவுடன் தானும் ஆடு மேய்க்க செல்ல வேண்டும் என்று அவள் எவ்வளவோ முயற்சி செய்தாள். ஆனால் அவள் தாய் ஒலிம்பியாவும் இறுக்கமானவள். எளிதில் இளகி விட மாட்டாள். தான் விரும்பியது கிடைக்கவில்லையென்றால் அதை நினைத்துக் கொண்டே துக்கப்படும் குணம் ஜஸிந்தாவிடம் கிடையாது. அதை மறந்துவிட்டு அடுத்த காரியத்தில் ஈடுபட்டு விடுவாள்..

பிந்தி... ஒரு நாள் ஜஸிந்தா மிகுந்த மகிழ்ச்சியோடு லூசியாவைத் தேடி ஓடினாள். பிரான்சிஸ் மெதுவாக அவள் பின்னே சென்றான். “ உனக்குத் தெறியுமா? நாங்கள் ஆடுகளை மேய்க்க எங்கள் அம்மா சம்மதித்து விட்டார்கள் “ என்று கூறினாள் ஜஸிந்தா.

அன்று முதல் மூன்று குழந்தைகளும் ஆனந்தமாக ஆடுகளை மேய்த்து வந்தார்கள். லூசியா முந்திப் புறப்பட்டால் ஆடுகள் தண்ணீர் குடிக்கும் குளத்தருகே தன் நண்பர்களுக்காக காத்திருப்பாள். இவர்கள் முந்தி விட்டால் அதே இடத்தில் அவர்களுக்காகக் காத்திருப்பார்கள். மூவரும் சேர்ந்ததும், மொத்தம் ஏறக்குறைய இருபத்தைந்து ஆடுகளையும் ஓட்டிக்கொண்டு தங்களுக்கு விருப்பமான இடத்திற்குச் செல்வார்கள்.

நன்றி : பாத்திமா காட்சிகள் நூல், புனித சூசை அச்சகம், ரோசா மிஸ்திக்கா, சகாயமாதாப்பட்டனம், தூத்துக்குடி-628 002, Ph. 0461-2361989, 9487609983, 9894398144

சிந்தனை : குழந்தைப் பருவம் என்பது எவ்வளவு முக்கியமான பருவம்; கவலைகள் இல்லாத பருவம்; மகிழ்ச்சி நிறைந்த பருவம்; பரிசுத்தமான பருவம்; பேசாமல் குழந்தையாகவே இருந்திருக்கலாமோ... இப்போது கூட ஒன்றும் கெட்டுப்போவதில்லை.. நம் இயேசு தெய்வம் சொல்லியது போல் நாமும் குழந்தைகளாக மாறிவிடுவோம்...

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !