சேசுவின் திருஇருதய அரசாட்சி பாகம் - 75

சீடத்துவப் பணியில் அல்லது அதன் கடமைகள் ஒன்றில் ஈடுபட்டிருக்கையில் தாங்கள் ஒன்றும் சாதிக்க முடியாதவர்கள் என்ற எண்ணத்துக்கு வரும்போது அல்லது தாங்களே புனிதர்களாய் இல்லாதிருக்கையில் மற்ற ஆத்துமங்களை புனிதத்தின் பாதையில் நடத்துவது எங்கனம் என அவர்கள் பின்வாங்குகையில், இவ்விதம் நடத்தி உதவுகின்ற ஆத்துமங்கள் தரைமட்டும் தங்களை தாழ்த்துவார்களாக. 

தங்களுடைய அசட்டைத்தனத்தைப் பற்றி அவர்கள் வெட்கப்பட்டு என் பாதத்தில் வந்து தங்களுக்குத் தேவையான பலமும் தைரியமும் கேட்டு என் இருதயத்திடம் கெஞ்சி மன்றாடுவார்களானால், எவ்வளவு அன்புடன் என் இருதயம் அவர்களுக்கு உதவி செய்து, அவர்களுடைய உழைப்புகளுக்கு எவ்வளவு ஆச்சரியத்துக்குரிய பலன் கொடுக்கிறது என்பதைக் கண்டு பிடிப்பது கடினம்.

தாராள குணமில்லாத ஆத்துமங்கள் தாங்கள் திரும்பத் திரும்ப மேற்கொள்ளும் உறுதியான தீர்மானங்கள் பலன் கொடாமல் போகின்றன என்பதை அறிய வருவார்கள்.

முயற்சிப்பதாக வாக்களித்து, பின் தங்கள் வாக்குறுதியின்படி நடக்காதவர்களுக்கு நான் சொல்வதாவது: "இந்த பயனற்றவைகள் யாவும் நெருப்புக்கு இரையாகி ஒரு வினாடியில் காற்றில் அடித்துச் செல்லப்படும்".

ஆனால் மற்றொரு பிரிவினர் உண்டு. இவர்களைப் பற்றியே நான் இப்பொழுது சொல்கிறேன். இவர்கள் மிகுந்த நல்ல மனதுடன் நாளைத் துவக்குகின்றனர். தங்கள் நல்ல மனதை உறுதிப்படுத்தும்படி இன்னின்ன நேரங்களில் தங்களை ஒறுத்து தாராள குணத்துடன் நடக்க விரும்புகிறார்கள். ஆனால் அதற்கான வாய்ப்பு வரும்போது சுய விருப்பம், உடல் இன்பம் அல்லது இது போன்ற ஒரு காரணத்தை முன்னிட்டு தாங்கள் சற்றுமுன் செய்யத் தீர்மானித்ததை செய்யாது விடுகிறார்கள். 

எனினும் விரைவில் அவர்கள் தங்கள் நிலையற்ற தன்மையை ஏற்றுக் கொண்டு, மன்னிப்புக் கேட்டு, தங்கள் உறுதியைப் புதுப்பித்து, தாராள குணத்துடனும் நேசத்துடனும் நடந்து கொள்வதாக வாக்களித்து, திரும்பவும் நம்பிக்கையுடன் தங்களை என் இருதயத்தினிடம் ஒப்படைக்கிறார்கள். இந்த ஆத்துமங்கள் என்னை வெகுவாக மகிமைப்படுத்துகிறார்கள். இவர்கள் தவறாதிருந்தால் செய்திருக்கக்கூடிய நன்மைகளைவிட நாளடைவில் அதிக நன்மைகளைச் செய்கிறார்கள்.

ஓர் ஆத்துமத்தை நான் அழைத்ததும் உடனே அதன் குறைகளும், பாக்கியமில்லாத நிலையும் மறைந்தொழிகின்றன என நான் சொல்வதில்லை. இந்த ஆத்துமம் இன்னும் தவறலாம், தவறும்; ஆனால் அது தன்னை தாழ்த்துமானால், தன் ஒன்றுமில்லாமையை ஏற்றுக்கொள்ளுமானால், தாராள குணத்துடனும் நேசத்துடனும் நடந்து, தன் குற்றங்களுக்கு பரிகாரம் செய்ய முயற்சிக்குமானால், என் இருதயத்தின் மீது நம்பிக்கை வைத்து தன்னை முழுதும் என் இருதயத்திடம் ஒப்படைக்குமானால் .. அது என்னை அதிகமாய் மகிமைப்படுத்தும், அது ஒருபோதும் தவறாதிருந்தால் செய்யக்கூடிய நன்மையைவிட ஆத்துமங்களுக்கு அதிக நன்மை செய்யும்.

அந்த ஆத்துமம் எவ்வளவு பாக்கியமிழந்த நிலையிலிருந்தாலும் அது என்னை மிக நேசிக்கும். எனினும் தவறுதலாக பலவீனத்தால் செய்யும் குற்றங்களைப் பற்றியே சொல்கிறேன்; வேண்டுமென்று முழுமனதுடன் செய்யும் குற்றங்களைப் பற்றி நான் பேசவில்லை .

என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆத்துமங்கள் யாவும் தங்களுடைய சாதாரண செயல்களாலும், அன்றாட அலுவல்களாலும் செய்து முடிக்க வேண்டியிருக்கும் ஆச்சரியத்துக்குரிய வேலையை உணரும்படி உன்னுடைய வாழ்க்கையில், அது எவ்வளவு குற்றம் குறைகள் உள்ளதாயிருந்தபோதிலும் எனக்கு ஒப்புக் கொடுப்பாயாக.

தொடரும்...