சேசுவின் திருஇருதய அரசாட்சி பாகம் - 76

இரத்தத்தில் தோய்ந்த ஒரு பணி

ஒரு ஆத்துமமானது என்னுடன் விடாது ஒன்றித்து வாழும் போது, நான் மிக மகிமைப்படுத்தப்படுகிறேன். அந்த ஆத்துமம் மற்றவர்களுக்கு மிகுந்த நன்மையைப் பெற்றுக் கொடுக்கிறது. இவ்விதம் தன்னிலே ஒரு சிறிய பணி என் இரத்தத்தில் தோய்க்கப்படுமானால் அல்லது நான் பூமியில் இருக்கையில் உழைத்த உழைப்புகளுடன் ஒன்றிக்கப்படுமானால், ஆத்துமங்களை இரட்சிப்பதில் அந்த பணி அதிக வல்லமையுள்ளதாகின்றது.

ஒருவேளை, அந்த ஆத்துமம் உலகெங்கும் போய் நற்செய்தி போதித்திருந்தால் விளைந்திருக்கக்கூடிய நன்மையைவிட அதிக நன்மை விளைகிறது. அந்த பணி - பாடம் படிக்கிறது, பேசுகிறது, எழுதுகிறது. பிறர் மனதில் தைக்கிறது, இடத்தை சுத்தம் செய்கிறது, இளைப்பாறுகிறது - இது போல் மிகச் சாதாரணமான காரியமாயிருந்தாலும் பரவாயில்லை. பெரியோருக்குக் கீழ்ப்படிந்து அல்லது தன் கடமைகளில் ஒன்றாய் அந்த ஆத்துமம் அதைச் செய்ய வேண்டும். பெருமைக்காக செய்யக்கூடாது. என்னுடன் ஒன்றித்து நெருக்கமாக என் இரத்தத்தில் தோய்க்கப்பட்டு தூய்மையான கருத்துடன் அது செய்யப்பட வேண்டும்.

எந்த செயலாவது தன்னிலே முக்கியமானதல்ல என்பதை ஆத்துமங்கள் அறிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். என்னுடன் ஒன்றிக்கவும் தூய்மையான எண்ணத்துடன் செய்யப்படவும் வேண்டும் என்பதுதான் முக்கியம்.

நான் எனது வெளிப்படையான வாழ்வில் மக்களுக்குப் போதிக்கையில் கடவுளுக்கு உண்டாக்கிய மகிமையை, என்னை வளர்த்த தந்தையுடைய (அர்ச். சூசையப்பர்) தச்சுப்பட்டறையில் நான் சிறுவயதில் அவருக்கு உதவி செய்து அதைச் சுத்தம் செய்கையிலும் உண்டாக்கினேன்.

உலகத்தாரின் முன் முக்கியமான பதவிகளில் இருந்து என் இருதயத்துக்கு உண்மையாகவே பெரும் மகிமை கொடுக்கிற பலர் இருக்கின்றனர். ஆனால், என் திராட்சைத் தோட்டத்தில் வெகு தாழ்மையான வேலையாட்கள் நிறைய பேர் இருக்கின்றனர். ஏனெனில் அவர்கள் தூய்மையான அன்புடன் உழைத்து, தங்கள் சாதாரண செயல்களையும் என் விலையேறப்பெற்ற இரத்தத்தில் தோய்த்து அவற்றை மோட்சத்தின் செல்வங்களாக்கும் வழியை அறிந்திருக்கிறார்கள்.

தொடரும்...