சேசுவின் திருஇருதய அரசாட்சி பாகம் - 74

என் அன்பின் இரகசியங்களை நான் உனக்கு அறிவிப்பேன். என் இரக்கத்துக்கு ஓர் உயிருள்ள அத்தாட்சியாக நீ இருப்பாய். பேரன்புக்கு இன்னும் தகுதியுள்ளவனாக ஆகாத உன்னுடனேயே நான் சகிப்புடன் நடந்து கொள்கையில், அதிக தாராள குணமுள்ள ஆத்துமங்களுக்கு நான் என்னதான் செய்ய மாட்டேன்?

என் இருதயத்துக்குள் நுழைவாயாக. ஒன்றுமில்லாமை - யானது இந்த அன்புக் கடலில் மூழ்கி மறைந்து போவது எளிது.

நான் உன்னிடம் சொல்லும் இந்த வார்த்தைகளால் எத்தனையோ ஆத்துமங்களுக்கு உயிரளிக்கப்படும்! தங்களுடைய உழைப்பின் பலனைப் பார்த்ததும் எத்தனையோ பேர் தைரியம் பெறுவார்கள்! சற்று தாராள குணத்துடன், பொறுமையுடன் அல்லது வறுமையில் செம்மையாய் நடந்து கொள்வார்களானால், பெரும் எண்ணிக்கையான ஆத்துமங்களைக் காப்பாற்றக்கூடிய வரப்பிரசாதங்கள் சேர்க்கப்படுகின்றன.

என் இருதயமானது அன்புக் கடல், இரக்கத்தின் ஊற்று. என்னுடைய உற்ற நண்பர்களும் மனித பலவீனம் என்னும் விதிக்கு விலக்கானவர்கள் அல்ல என எனக்குத் தெரியும். அவர்களுடைய ஒவ்வொரு சாதாரண செயலும் உலக இரட்சிப்பின் பணியில் அளவற்ற வல்லமை பெறக் கூடியதாகும்படி செய்வேன்.

தொலைவிலுள்ள நாடுகளுக்குச் சென்று எல்லோரும் மக்களுக்குப் போதிக்க முடியாது. ஆனால், என் இருதயத்தை பிறர் அறியச் செய்யவும் நேசிக்கச் செய்யவும் முடியாதவர்கள் ஒருவருமே இல்லை. ஒருவருக்கொருவர் உதவி செய்வதால், ஆத்துமங்கள் பாதிக்கப்படுவதை தடுக்கலாம். ஏனெனில் நேசமும் இரக்கமும் உள்ள நான் அவர்களுடன் ஒத்துழைப்பேன். எல்லாவற்றையும் எனக்காக தியாகம் செய்யும் அவர்களுடைய தாராள குணமானது பாவ வழியினின்று பாவிகளை மனம் திருப்ப பெரும் உதவியாய் இருக்கும்.

அவர்களுடைய சாதாரண சிறு செய்கைகளுக்கும் தெய்வீக வல்லமை கொடுத்து அவர்களுடைய அன்றாட வாழ்க்கையை நான் பயன்படுத்துவதுடன் அவர்களின் பலவீனத்தையும் தவறுதல்களையும், குற்றங்களையும் கூட உலக மீட்புக்காகப் பயன்படுத்துவேன்.

தான் எவ்வளவு பாக்கியமில்லாமல் இருக்கிறோம் என்பதை ஒரு ஆத்துமம் நன்கு உணர்ந்து பார்க்கையில், நன்மையான எதையும் தன்னுடையதாக்க வேண்டுமென அது கூறாது; தாழ்ச்சியுள்ளதாகவே நடந்து கொள்ளும்.

தொடரும்...