சேசுவின் திருஇருதய அரசாட்சி பாகம் - 70

சத்திய மறை ஐரோப்பாவில் வியக்கத்தக்க முறையில் வெகு விரைவில் பரவிய காலத்தில் அரசர்களும் அரசிகளும் வேத வளர்ச்சிக்கு அவசியமான ஆலயங்கள், குறும்படங்கள், துறவற நிலையங்களைக் கட்டவும், ஏழைகளையும் அநாதைகளையும் பேணுவதற்கு அவசியமான விடுதிகளை நிறுவவும் தங்கள் செல்வங்களைத் தாராளமாக வழங்கினர். 

பிரபுக்கள் குலத்தில் உதித்த ஆண்களும் பெண்களும் தங்கள் செல்வத்தை ஏழைகளுக்குத் தானம் செய்து, சேசுவின் நேசத் திற்காக உலகைத் துறந்தனர். ஆனால் வேத போதக நாடுகளில் கடவுளின் மகிமைக்காக ஆலயங்கள் நிறுவப்பட்டன மருத்துவமனைகளும், வயோதிகர் விடுதிகளும் அநாதை இல்லங்களும் அமைக்கப்பட்டன.

 இவ்விதமே இந்நாட்களிலும் நடைபெறுவதை நாம் பார்க்கிறோம். இங்ஙனம் அழிந்து போகிற உலக சம்பத்துக்களைக் கொண்டு அழியாத மோட்ச செல்வங்களைத் தேடிக்கொண்டவர்களே சிறந்த ஞானிகள்

பரலோக இராச்சியத்தை இப் பூமியின்கண் நிலை நாட்டுவதற்கே வார்த்தையானவர் மனிதாவதாரம் செய்தார் இந்த அலுவலை நிறைவேற்றுவதற்கு உலக செல்வங்கள் அவசியம், படைபலம் வேண்டும், ஆயுத வலிமையும் அவசியம் என்று நாம் கருதுகிறோம் ஆனால் நம் திவ்விய கர்த்தருடைய எண்ணங்கள் வேறு இவர் தரித்திரத்தையும் பலவீனத்தையுமே இதற்குச் சாதனங்களாகக் கையாளுகிறார் 

இதற்குச் சில காரணங்களை அர்ச். தோமாஸ் அக்குவினாஸ் கூறுகிறார். உலக சம்பத்துக்களும், அவற்றின்மீது பற்றுதலும் அவற்றால் ஏற்படக்கூடிய கவலைகளும் தமது போதக அலுவலுக்குத் தடையாய் இருக்குமென அவர் நன்கு அறிந்து இருந்தார். சிதறிப்போன ஆடுகளைத் தேடிவந்த நல்லாயன் தங்க இடமின்றிப் பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி ஆடுகளைத் தேடி திரிந்த இவருக்குப் பணத்தைப்பற்றி நினைக்க நேரமேது.

தமக்குப்பின் தம்முடைய அலுவலைத் தொடர்ந்து நடத்த வேண்டிய அப்போஸ்தலர்களுக்கும், இவர்களைப் பின்தொடர்ந்து வரவிருக்கும் மேற்றிராணிமார் களுக்கும் குருக்களுக்கும் வேத போதக அலுவலில் முன்மாதிரிகையில் இருக்கவுமே தரித்திரத்தைத் தெரிந்து கொண்டார் நம் இரட்சகர். 

அவர் வேத போதக அலுவலுக்காக அப்போஸ்தலர்களை அனுப்பிய போது அவர்களுக்குச் சொல்லியதாவது உங்கள் மடியில் பொன்னையாவது, வெள்ளியையாவது வைத்துக்கொள்ள வேண்டாம். வழிக்காகப் பையையாவது இரண்டு அங்கிகளையாவது, பாதரட்சைகளையாவது, தடிக் கம்பையாவது வைத்துக்கொள்ளாதேயுங்கள்” என்கிறார் (ம 10). 

அப்போஸ்தல அலுவலில் ஈடுபட்டவர்களுக்கு உலக செல்வங்கள்மீது பற்றுதல் ஆபத்துக்கிடமான. அப்போஸ்தலர் கூட்டத்தில் சேர்ந்து நம் திவ்விய கர்த்தருடைய பிரசங்கங்களைக் கேட்டு அவருடன் நெருங்கிப் பழகிய யூதாஸ் பண ஆசையால் கெட்டான். தரித்திரத்தில் வாழ்ந்த போது திருச்சபை புண்ணியத்திலும் உத்தமதனத்திலும் மிளிர்ந்தது. அதில் உலக செல்வங்கள் பெருகிய போது புண்ணிய சீவியம் மங்கியது 

செல்வத்தால் ஏற்படும் செல்வாக்கினால் கிறீஸ்துநாதர் தம்முடைய அரசாட்சியை நிலைநாட்டினார் என்று மனிதர் எண்ணாதபடி தரித்திரத்தையே தெரிந்து கொண்டார். மேலும் உலக பொருள்களையே நோக்கமாகக் கொண்டு மக்கள் இவ்விராச்சியத்தில் பிரவேசியாதபடி தரித்திரத்தை அரவணைத்தார். உலக செல்வாக்கில்லாத ஏழைச் செம்படவர்கள் தமது இராச்சியத்தின் தலைவர்களாகத் தேர்ந்தெடுத்தார் கடவுளின் அருளும் அநுக்கிரகமுமே இவர்களுடைய செல்வாக்காயிற்று

இன்னும் தம்முடைய தரித்திரத்தாலும் தியாகத்தாலும் நம்மைத் தனவந்தர்களாக்கும்படி அவர் தரித்திரத்தையே தன் ஆயுதமாகக் கொண்டார். “நம்மைத் தனவந்தர்களாக்கும்படி அவர் வறுமையைத் தெரிந்து கொண்டார்” என்கிறார் அர்ச். சின்னப்பரின்

கடவுளின் ஞானத்தாலும் வல்லமையினாலுமே இந்த இராச்சியம் உருப்பெற்றது என்று மக்கள் அறிந்துகொள்ளும் படியாகக் கிறீஸ்துநாதர் தரித்திரத்தையும் பலவீனத்தையும் இவ்விராச்சியத்தை நிறுவ சாதனங்களாகத் தெரிந்து கொண்டார். உலக அதிகாரிகள் இவ்விராச்சியத்தை அழிக்க எடுத்த முயற்சிகள் எல்லாம் வீணாயின என்பதற்கு திருச்சபை சரித்திரமே சான்று.

தொடரும்...