சேசுவின் திருஇருதய அரசாட்சி பாகம் - 67

ஐசுவரியவான்களைப் பல முறைகளில் நேர்முகமாகவும் உவமைகளாலும் நம் இரட்சகர் கண்டிக்கிறார் ஊசியின் கண் வழியாக ஒட்டகம் புகலாம். ஆனால் தனவந்தர் பரலோக இராச்சியத்தில் பிரவேசிப்பது கடினம் என்கிறார்

உலக சொத்துக்களைத் தீய முறையில் பயன்படுத்தும் தனவந்தர்களைக் கண்டிக்கவே பணக்காரன், ஏழை லாசர் இவர்களைப்பற்றிய உவமையைக் கூறுகிறார். இவ்வுவமையில் குறிக்கப்பட்ட தனவந்தன் விலை உயர்ந்த உடைகளை உடுத்திக்கொண்டு தினமும் வயிறார உண்டான். உல்லாச சீவியமே இவனது வாழ்க்கையின் நோக்கமாய் இருந்தது தேவனை மறந்தான்; அவருக்குச் செலுத்த வேண்டிய கடமைகளையும் மறந்தான்;

 தன் அழியாத ஆன்மாவைப் பற்றிய யோசனையே அவன் கனவிலும் எழவில்லை. தனக்கு அருளப்பட்ட சொத்துக்கள் தேவனுடைய இலவசக் கொடைகள் இவற்றை அவருடைய ஊழியத்தில் செலவிட வேண்டுமென அவன் கருதவில்லை. உலக சொத்துக்களும், அவற்றைக் கொண்டு நடத்தும் உல்லாச வாழ்வும் நிலையற்றவை. தான் ஒரு நாள் சாகவேண்டும், அப்பொழுது இவையெல்லாம் தன்னைவிட்டு அகற்றப்படும் என்பதை அவன் யோசிக்க வில்லை. அவன் இறந்தான், நரகத்தில் புதைக்கப்பட்டான். தன் சொத்துக்களைத் தீய வழியில் உபயோகித்ததனால் இவன் கெட்டான்

இன்னொரு ஐசுவரியவானைப் பற்றி நம் இரட்சகர் பின்வரும் வரலாற்றைக் கூறுகிறார். 

ஒரு தனவந்தனுக்கு நில புலன்கள் நிறைய இருந்தன. ஒரு ஆண்டில் பருவ கால மழை குறைவின்றிப் பெய்தமையால் நிலங்கள் ஏராளமாகப் பலனளித்தன. தானியக் குவியல்களைப் பார்த்தான். தன் களஞ்சியங்கள் இவற்றைக் கொள்ளாதென உணர்ந்தான் ஆதலால் அந்தக் களஞ்சியங்களை இடித்தெறிந்து வேறு களஞ்சியங்களைப் பெரிதாகக் கட்டி, அவற்றைத் தானியங்களால் நிறைத்து “என் ஆன்மாவே மகிழ்ச்சிக் கொள், இன்னும் பல வருஷங்களுக்கு உனக்குக் குறை ஒன்றும் இராது என்று சொல்வேன்” என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போது:

 மதியற்றவனே, இன்று இரவே உன் ஆன்மாவைப் பறிப்பார்கள் என்று அவனுக்குச் சொல்லப்பட்டது. இத் தனவந்தன் இப்பூமியில் முடிவில்லா வாழ்வைச் சுகிக்கப் போவதாக எண்ணியிருந்தான்; உலக பொருட்கள் அளிக்கும் இன்பத்தை நுகரவே அவன் படைக்கப்பட்டுள்ளதாகக் கருதியிருந்தான். முடிவு இவ்வளவு விரைவில் வருமென்று அவன் எண்ணவில்லை

தொடரும்...