சேசுவின் திருஇருதய அரசாட்சி பாகம் - 68

உலக சொத்துக்களை நிறையப் பெற்றிருந்த ஓர் வாலிபனைப்பற்றி சுவிசேஷத்தில் படிக்கிறோம். கிறீஸ்துநாதருடைய உயரிய போதகங்களைக் கேட்ட ஓர் இளைஞன் அவரை அணுகி “போதகரே பரலோக இராச்சியத்தில் பிரவேசிக்க நான் செய்ய வேண்டியது என்ன” என்று அவரை வினவினான். 

நம் திவ்விய கர்த்தர்: “கற்பனைகளை அனுசரி என்று பதிலுரைத்தார் அதற்கு அந்த வாலிபன் “நான் கற்பனைகளைச் சிறு வயதிலிருந்தே அனுசரித்துக்கொண்டு வந்திருக் கிறேன்” என்றான். “நீ உத்தமனாய் இருக்க விரும்பினால், உன் இல்லம் சென்று, உனக்குச் சொந்தமான அவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு; உனக்குப் பரலோகத்தில்  சம்பாவனை கிட்டும். பிறகு வந்து என்னைப் பின்செல்' என்று ஆண்டவர் உரைத்தார்.

 வாலிபன் வருத்தத்துடன் வீடு திரும்பினான். ஏனெனில் அவனுக்குச் சொத்துக்கள் ஏராளமாக இருந்தன. இந்த வாலிபன் உலக பொருட்கள்மேல் கொண்டிருந்த அணைகடந்த பற்றினால் கிறீஸ்துநாதரைப் பின்பற்றும் பாக்கியத்தை இழந்தான். மேலான சீவியத்தைத் தெரிந்துகொள்ள சொத்துக்கள் இவனுக்கு இடறலாயிருந்தன

சொத்துக்களை முறையற்ற வழிகளில் பயன்படுத்தும் தனவந்தர்களைப்பற்றி அர்ச். யாகப்பர் கூறுகிறார் “வாருங்கள், ஐசுவரியவான்களே, உங்களுக்கு வரப்போகிற துன்பங்களை நினைத்து இப்போது புலம்பி அழுங்கள். இதோ உங்கள் திரவியங்கள் அழுக, உங்கள் ஆடைகளும் பூச்சிகளால் அரிக்கப்பட்டிருக்கின்றன. உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடிக்க, அவற்றின் மீது ஏறிய துரு உங்களுக்கு எதிர் சாட்சியாய் இருந்து அக்கினியைப்போல உங்கள் சரீரங்களைச் சுட்டுப் புசிக்கும். கடைசி காலத்துக்குத் தேவ கோபத்தைத் தேடிக் குவிக்கிறீர்கள்.

 இதோ உங்கள் வயல்களை அறுத்த வேலையாட்களுடைய கூலி உங்களால் வஞ்சிக்கப்பட்டமையால் அது கூக்குரலிடுகின்றது. அக்கூக்குரல் சேனைகளின் கர்த்தரது செவிக்குள் புகுந்தது. பூமியில் விருந்துண்டு, உங்கள் இருதயங்களைக் கொலையுண்ணும் நாட்களுக்காகக் கொழுக்க வைத்தீர்கள். நீதிமானைக் குற்றவாளியாகத் தீர்வையிட்டுக் கொலை செய்தீர்கள். அவனோ உங்களை எதிர்த்து நிற்கவில்லை” (இயாகப்பர்-. 5:1-6)

பிற மத சாஸ்திரிகளும் புலவர்களும் அறிவினரும் உங்களுக்கு கடவுள் அளித்துள்ள இயற்கை ஞானத்தால் உலக பொருட்கள் மீது அளவுகடந்த பற்றுதல் வைத்தல் தகாதென்று உணர்ந்து கூறியுள்ளார்கள். “உன் ஆஸ்திகள் பெருகப் பெருக உன் ஆசையும் வளருகிறது” என்கிறார் ஜுவனால். “சிறிதளவு பொருளால் மனநிறைவு கொள்பவனே பெரிய தனவந்தன் என்று கூறுகிறார் சோக்கிராட்டஸ். 

“உனக்கு சம்பத்துக்கள் இல்லையேல் கவலை கொள்ளாதிருப்பதும், அவைகள் உளவாயின் அவற்றை நல்வழிகளில் செலவிடுவதுமே புகழத் தக்க விஷயம்” என்கிறார் சிசரோ. செனக்கா என்பவர் சொல்கிறார்: “உலக பொருட்கள் மேல் நீ அரசு செலுத்து அவைகளுக்கு அடிமையாய் இராதே. அவற்றை பயன்படுத்தும் விதம் உனக்குத் தெரியுமாகில் நீ அவற்றின் எஜமானாய் இருப்பாய், தெரியாவிடில் அவற்றின் அடிமையாய் இருப்பாய்

தொடரும்...