சேசுவின் திருஇருதய அரசாட்சி பாகம் - 66

உலக செல்வங்களைப்பற்றி மக்கள் நடுவில் நிலவிய பொய்க் கொள்கையை மாற்ற முற்படுகிறார் நம் திவ்விய கர்த்தர். உலக சொத்துக்களை அனுபவிக்கிறவர்கள்

யாரும் சர்வேசுரனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், அவர்கள் பாக்கியவான்கள் என்னும் கொள்கை தவறானதென்றும் ஏழைகள் சர்வேசுரனால் சபிக்கப்பட்டவர்கள், இவர்களுக்கு பாக்கியமே கிட்டாது என்கிற கொள்கையும் தவறானதென்றும் அவர் போதிக்கிறார். ஏழைகள் கடவுளின் சாபத்திற்கு ஆளானவர்களல்லர், இவர்களும் பாக்கியவான்களாக இருக்கலாம், அவர்கள் பரலோக இராச்சியத்தில் பங்கு பெற தகுதியுள்ளவர்களென உரைக்கிறார்

இப்போதகத்தைத் தமது தரித்திர வாழ்க்கையில் பிரதி பலிக்கச் செய்கிறார். “அவர் ஐசுவரியராயிருந்தும் அவருடைய தரித்திரத்தால் நீங்கள் ஐசுவர் ஆகும் பொருட்டு அவர் உங்கள் நிமித்தம் தரித்திரரானார்” (2 கொரி. 8:9) என்று அர்ச். சின்னப்பர் கூறுகிறார். 

இம் மாபெரும் பூமியில் அவர் பிறப்பதற்கு உகந்த இடமில்லை. மிருகங்கள் வசிக்கும் மாட்டுக் கொட்டிலில் பிறக்கிறார் தரித்திரரான தாய் தந்தையரோடு எளிமையில் சீவிக்கிறார். கஷ்ட உழைப்பினால் உணவைத் தேடுகிறார். வேதபோதகம் செய்த காலத்திலும் தன்னுடையது என்று சொல்லக்கூடிய ஓர் இருப்பிடம் அவருக்கு இருந்ததில்லை. தன் அன்றாட போசனத்திற்கு பிறர் உதவியைத் தேடுகிறார்.

 “நரிகளுக்கு வளைகளும், ஆகாயப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுமகனுக்கோ தலை சாய்க்க இடமில்லை” (மத். 8:20) என்று சொல்லக்கூடிய அளவில் தரித்திரத்தை ஏற்றுக்கொண்டார். தன் உடைகளையும் மற்றவர்கள் பங்கிட்டுக்கொள்ள, அட்ட தரித்திரத்தில் சிலுவையில் உயிர் துறக்கிறார். அவர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையும் இரவலே.

நம் போதகர் தம் அளவற்ற ஞானத்தின் விளைவாகத் தரித்திரத்தைத் தமது வாழ்க்கையின் சிறப்பாகத் தெரிந்து கொண்டு அதைக் கனப்படுத்திப் பேசியதற்கு பல காரணங்கள் உண்டு. உலக சம்பத்துக்களின் உற்பத்தியையும் அவற்றின் நோக்கத்தையும் மக்கள் அறவே மறந்து போயினர். அவை கடவுளின் அன்புக் கொடைகள், அவரைத் துதிப்பதற்கு அருளப்பட்ட சாதனங்கள் என்பது அடிப்படையான உண்மை. 

நம் திவ்விய கர்த்தருடைய நாட்களில் தனவந்தர்களுடைய வாழ்க்கை முறைதப்பிய வாழ்க்கையாக இருந்தது. ஈகை வள்ளலாகிய கடவுளை மறந்து, உலக செல்வங்களையும் அவற்றால் ஏற்படும் இன்ப சுகங்களையுமே தங்கள் சீவியத்தின் கதியாகவும் முடிவாகவும் கருதி வந்தனர். திரவியம் திரட்டு வதே இவர்களுடைய ஏக நோக்கமாய் இருந்தது. 

அநீத வழிகளிலும் பொருளைப் பெருக்கிக் கொள்ளத் தயங்கினாரில்லை  ஏழைகளுக்கு உழைப்புக்குத் தகுந்த ஊதியம் அளிப்பதில்லை விதவைகளையும் அநாதைகளையும் துன்புறுத்துவர் சர்வேசுரன் தந்தருளிய செல்வங்களை தங்களுடைய உல்லாச சீவியத்திற்காகவே  பயன்படுத்திக்கொள்வர். நூற்றுக்கணக்கான அடிமைகளை விலை பொருளாகக் கொண்டு, அவர்களைத் உங்கள் உல்லாச வாழ்விற்குரிய கருவிகளாக உதவிக்கொள்வர்

தொடரும்...