சேசுவின் திருஇருதய அரசாட்சி பாகம் - 60

அபிஷேகத்தால் “மறு கிறிஸ்து" ஆன குருக்கள் சர்வேசுரனுக்கு உகந்த தேவ ஆராதனை நிறைவேற்றும்போது கிறிஸ்தவ மக்களும் அத்திருப்பணியில் பங்கு பெறுகிறார்கள். பழைய ஏற்பாட்டுக் குருக்களும், மற்ற மதங்களின் குருக்களும் மக்களின் சார்பாக பிரார்த்தித்தார்கள் பலி செலுத்தினார்கள். மக்களோவென்றால் தங்கள் சார்பாக நிறைவேற்றப்பட்ட பூசை வழிபாடுகளில் நேரடியாகப் பங்கு கொள்ளவில்லை. அவைகள் திரையிடப்பட்ட பரிசுத்த ஸ்தலத்திலும், பொது மக்கள் அணுக இயலாத மூலஸ்தானத்திலும் குருக்களால் நிறைவேற்றப்பட்டன. 

அப்படிப்பட்டதல்ல கிறீஸ்துநாதர் ஏற்படுத்தின தெய்வ வழிபாடு. குருக்கள் ஆற்றும் திருப்பணியிலே விசுவாசிகளும் பங்குகொள்கின்றனர். இவர்கள் பங்குகொள்ளக்கூடிய முறையிலே கிறிஸ்தவ கோவில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பங்குகொள்ள வேண்டுமென்றே மணியடித்து அழைக்கப்படுகிறார்கள். ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்தவர்கள் எல்லோரும் கிறீஸ்துநாதருடைய ஞான சரீரத்தின் உறுப்புகளாகி விட்டதால், அவரோடு ஒன்றாகி, அவருடைய இராஜரீக குருத்துவத்தில் பங்கடைந்திருக்கிறார்கள் (1இரா. 2:9)

மக்களின் மத்தியஸ்தராகப் பிரார்த்திக்கவும் பீடத்தின்மேல் பலி செலுத்தவும் விசுவாசிகள் ஆற்றலும், அதிகாரமும் பெற்றிராமல் போனாலும், அவ்வாறு குருக்கள் நிறைவேற்றும் தேவாராதனைப் பணியில் பங்குகொள்ளும் அளவுக்கு - அதாவது குருவானவரோடு சேர்ந்து ஜெபிக்கவும் பூசைப் பலி ஒப்புக்கொடுக்கவும் கிறீஸ்துநாதரின் குருத்துவத்தில் பங்கு அடைந்திருக்கிறார்கள். ஆதலால் செயலற்ற பங்காளிகளைப்போல் இராமல், திருப்பணியில் கத்தோலிக்க மக்கள் அனைவரும் பங்குகொள்ள முற்பட வேண்டும்

இது எவ்வாறு நிகழ முடியுமென்றால், முதலாவதாக பங்குகொள்ளும் கருத்து வேண்டும். இதற்கு குருக்கள் திருப் பணி நிறைவேற்றும் இடத்திலிருக்க வேண்டும். ஒரு காரியம் நடைபெறும் இடத்திற்குப் போகாமல், அது நடைபெறுவதில் பங்குகொள்ள எண்ணுவது அர்த்தமற்றது. மேலும், அங்கு நடைபெறும் நிகழ்வுகளில், அதாவது செபங்கள், சடங்குகளில் கவனம் வேண்டும். பராக்கு, பேச்சு, உறக்கம் முதலியவை கவனத்தை குறைப்பதால் பங்குகொள்வதில் அளவையும் குறைக்கும். சில சமயம் கருத்தும்கூட விட்டுப் போகக் காரணமாகலாம். இரண்டாவது, விசுவாசிகளுக்கு அனுமதிக்கப்பட்ட கிரியைகளைச் செய்ய வேண்டும்

குறிப்பிட்ட செபங்களைச் சொல்லுதல், கீதங்களைப் பாடுதல், சிலுவை வரைந்துகொள்ளுதல், தலைவணங்குதல் முழந்தாட்படியிடுதல், பிழை தட்டிக்கொள்ளுதல் முதலிய கிரியைகளைப் பக்தி ஆசாரத்துடன் செய்ய வேண்டும் இதற்குப் பூசைப் புத்தகமும், திருமுறை புத்தகங்கள் உபயோகிப்பதும் மிகவும் உதவியானது. இன்று இவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கின்றன.

 தேவதிரவிய அநுமானங்களையும் அவைகளுக்கடுத்தவைகளையும் தமிழ் மொழியை உபயோகித்து நிறைவேற்ற பரிசுத்த பாப்பரசர் அனுமதித்திருக்கிறார். மேலும், செபங்களின் கருத்தையும் சடங்குகளின் பொருளையும் விளக்கும் நூல்கள் வெளிவந்து இருக்கின்றன. அந்த விளக்கங்கள் நம் கத்தோலிக்கப் பத்திரி கைகளிலும் கட்டுரைகளாகத் தரப்படுகின்றன. இவைகளைப் படிப்பதும், ஞானோபதேச வகுப்பிற்கு வந்து இவ்விளக்கங்களைக் கேட்டு அறிவதும் சிறந்த பயனளிக்கும்

தொடரும்...