“ அம்மா ! இதோ உம்மகன் “ – அருளப்பர் 19 : 26
மாதா தன்னுடைய தாய்மைப் பணியை கடவுளுக்கு செவ்வனே செய்ததால்.. அதாவது கடவுளின் தாயாக தன்னுடைய தாய்மைப் பணியை செவ்வனே செய்ததால் கடவுளால் கொடுக்கப்பட்ட பரிசு “ உயிர் வாழ்வோர் எல்லோருக்கும் தாய் “. இந்த பொறுப்பு ஒருவரிடமிருந்து பிடுங்கப்பட்டு நம் தாயாருக்கு கொடுக்கப்பட்டது.. அதாவது ஏவாளுக்கு கொடுக்கப்பட்ட தகுதியைப் (ஆதி 3:20) பிடுங்கி சுதனாகிய சர்வேஸ்வரன் மாதாவுக்கு கொடுக்கிறார்.. இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால் பழைய ஏவாள் மாற்றப்பட்டு அந்தப் பொறுப்பு தகுதி புதிய ஏவாளான மாதாவுக்கு கொடுக்கப்படுகிறது..
முதலில் படைக்கப்பட்ட மாசில்லாப் படைப்புகள் அதாவது அமல உற்பவ படைப்பான ஆதாமும், ஏவாளும் மாசில் (பாவத்தில்) விழுந்ததால் இரண்டாவதாகவும் கடைசியாகவும் படைக்கப்பட்ட அமல உற்பவ படைப்பான தேவமாதாவுக்கு புதிய ஏவாளாக உயிர் வாழ்வோர் எல்லோருக்கும் தாயாக உங்களுக்கும் எனக்கும் தாயாக மாதாவை ஏற்படுத்துகிறார் நம் இயேசு தேவன்.
“ அம்மா ! இதோ உம்மகன் “ என்று இயேசு ஆண்டவர் சொன்னதும் தாழ்ச்சியோடு உடனே தன் பொறுப்பை எடுத்துக் கொள்கிறார்.. அவர் பணி ஆரம்பமாகிவிட்டது.. அதுவரை கடவுளுக்கு மட்டுமே தாயாக இருந்தவர் கள்வனுக்கும் தாயாகி விட்டார்.. பாவிகளான நமக்கும் தாயாகி விட்டார்.. மத்தேயு நற்செய்தியிலும், மாற்கு நற்செய்தியிலும் அவரோடு அறையப்பட்ட கள்வர்கள் பழித்தது மட்டும் இருக்கிறது.. ஆனால் அதற்கு அடுத்து நடந்த நல்ல கள்ளனின் மனம் மாற்றம் இல்லை..
கண்டிப்பாக சிலுவையில் அறையப்பட்ட உடன் பழித்திருப்பார்கள்… ஆனால் நேரம் செல்ல செல்ல… ஆண்டவர் பொறுப்பை மாதாவிடம் கொடுத்ததும் மாதா கண்டிப்பாக இரு கள்வர்களையும் ஒரே பார்வையில்தான் நோக்கியிருப்பார்கள்.. ஒருவன் மாதாவை தன் தாயாக ஏற்றுக் கொள்ளவில்லை.. ஒருவன் ஏற்றுக்கொண்டான்.. மாதாவை நோக்கி தன் பார்வையால் மன்றாடினான். மாதாவும் அவனுக்காக விண்ணகத் தந்தையிடமும் தன் மகனிடமும் மன்றாட அவனுக்கு அடித்தது லக்கி பிரைஸ்.. மனமாற்றம்.. சிலுவைச் சாவை தன் பாவத்திற்கு பரிகாரமாக ஏற்றுக் கொண்டான்.. அடுத்த லக்கி பிரைஸ் மோட்சம்.
“ நீ இன்றே என்னோடு வான் வீட்டில் இருப்பாய் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன் “ லூக்காஸ் 23: 43.. தாய்மையின் சக்தி தாய்மையின் மந்திரம்.. அதனால்தான் அந்த செயலை செய்ய முடிந்தது.. முதல் மகன் பரிசுத்தர்.. கடவுள்.. அவருக்கு தாயாய் இருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம்.. எவ்வளவு பெரிய பெருமை.. அடுத்த மகன் அருளப்பர், கள்ளன் மற்றும் பாவிகள்.. பாவிகளுக்கு தாயாய் இருக்கவும் மாதா தயங்கவில்லை… வெட்கப்படவில்லை.. அசிங்கப்படவில்லை.. ஏனென்றால் மாதாவிற்கு கடவுள் எந்த பொறுப்பைக் கொடுத்தாலும் மாதாவிடமிருந்து வரும் ஒரே பதில், “ நான் ஆண்டவருடைய அடிமை உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும் “ என்ற ஒரே சொல்தான்..
மாதா கடவுளின் தாய்… மாதா பாவிகளின் தாய் எப்படி இருக்கிறது முரன்பாடு.. ஆனால் அது தன்னால் எல்லாம்.. எதுவும் சாத்தியமானது என்று எந்த சூழ்நிலையில் நிரூபித்தார்கள்.. தன் ஒரே மகன் கடவுள்.. கொஞ்ச கொஞ்சமாக செத்துக்கொண்டிருக்க.. அவர் இரத்தமெல்லாம் சிலுவையில் இருந்து வடிந்துகொண்டிருக்க.. அவர் வேதனையில் துடித்துக் கொண்டிருக்க நம் தெய்வீக வியாகுலத்தாயின் இதயத்தை வாள் ஊடுறுவி குத்திக் கிழித்துக்கொண்டிருக்க.. கண்களில் கண்ணீர்கடல் அணைதாண்டி வடிந்து கொண்டிருக்க உடலாலும், உள்ளத்தாலும் வேதனை உச்சத்தில் இருக்கும்போது.. ஒரு மனமாற்றம் சாத்தியமா? அந்த நிலையில் கேட்பது என்பது எனக்கு சாத்தியம்தான் என்று மாதா சொல்ல.. அதே போல் பலமடங்கு வேதனையில் செத்துக்கொண்டிருக்கும் வேலையிலும் அந்த மன்றாட்டை கேட்பது எனக்கும் சாத்தியமே என்று இயேசுவும் சொல்ல.. சாத்தியமானது.. சாதித்தார்கள் சாதனைசாலிகள்..
இப்போது.. மாதாவை இணை மீட்பர் என்று அழைத்தால் அது யாருக்கு வலிக்கிறது.. யாருக்கு பொறாமை வருகிறது.. யாருக்கு முடியாமல் போகிறது..
யாருக்கு வேண்டுமானாலும்.. எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்… மீட்புத்திட்டத்தில் மாதாவின் பங்கை தியானித்து ஜெபமாலை ஜெபித்து கடவுளுக்கு மகிமை சேர்ப்போம்..
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !