தேவமாதா யார்? பகுதி-38 : இரெபேக்காள் மாதாவின் நிழல்!

இரெபேக்காள் மாதாவின் நிழல்!

தகுதியவற்றவனுக்கும் கடவுளின் ஆசீரைப் பெற்றுத்தரும் மாதா..

“மகனே! என் பேச்சைத் தட்டாமல் நீ போய் நான் சொல்லியவற்றைக் கொண்டு வா “ என்றாள்

ஆதியாகமம் 27 : 13

யாக்கோபு தன் தாய் மூலமாக தன் தந்தையின் ஆசீரைப் பெற்றது ஒரு சுவாரசியமான சம்பவம்..

அண்ணனுக்கு கிடைக்க வேண்டிய ஆசீர் தம்பிக்கு கிடைத்தது எப்படி?

“ யாக்காபோ கபடற்ற மனிதனாய்க் கூடாரங்களில் வாழ்ந்து வந்தான்.”

“ இரெபேக்காளோ, யாக்கோபின் மீது அன்பு பாராட்டி வந்தாள் “

ஆதியாகமம் 25 : 28 

அதற்கு முதல் காரணம் தாயின் நேசம்தான். யாக்கோபு தாய்க்கு செய்த பணிவிடைதான்..

எதையும் எதிர்ப்பார்க்காமல் நேசிப்பது தாயன்பு. ஆனால் அந்த தாயின் அன்புக்கு பிரதி நன்றியாக தாய்க்கு உதவி செய்தால் அந்த தாயின் அன்பு இரட்டிப்பாகும். அதுதான் உண்மை.

யாக்கோபு தகுதியற்றவர்தான். ஆனாலும் அவருக்கு இருந்த இரண்டு தகுதிகள், 

1. கபடற்றவர்

2. தாயால் நேசிக்கப்பட்டவர்.

மூன்றாவது ஒரு தகுதியும் இருந்தது. அதைப் பின்னால் பார்க்கலாம்..

தந்தை ஈசாக்கால் நேசிக்கப்பட்டவர் ஏசாயு. ஏனென்றால் எசாயு காட்டில் வேட்டையாடி கொண்டு வந்த மிருகங்களின் கறி அவருக்கு வாய்க்கு ருசியாய் அமைந்தது. அதனால் ஈசாக் அவனை நேசித்தார் என்று வேதாகமம் சொல்கிறது. ஆனால் இரெபேக்காள் யாக்கோபை நேசித்தற்கு காரணம் பைபிளில் கூறப்படவில்லை. அதுதான் தாயின் அன்பு. சுய நலமில்லாத அன்பு. இப்படியும் நாம் எடுத்துக்கொள்ளலாம். யாக்கோபு கபடற்றவனாக இருந்ததால் தாயால் நேசிக்கப்பட்டார் என்று கூட நாம் எடுத்துக்கொள்ளலாம்.

இப்போது யாக்கோபுக்கு இருந்த மூன்றாம் தகுதியைப் பார்ப்போம்.. எசாயு தின்பண்டத்திற்கு ஆசைப்பட்டு தன்னுடைய தலைமகன் என்ற உரிமையை யாக்கோபிடம் இழந்துவிட்டான்/விற்றுவிட்டான். அது எசாயுவின் தவறு. அந்த தின்பண்டத்தை சாப்பிடாமல் இருந்திருக்கலாம். அல்லது அம்மாவிடம் சென்று கேட்டிருக்கலாம். அல்லது அம்மாவின் பரிந்துரையையாவது நாடியிருக்கலாம். அப்படி செய்திருந்தால் அந்த தின்பண்டத்தில் பாதியோ அல்லது வேறு தின்பண்டமோ அவனுக்கு கிடைத்திருக்கும். ஏனென்றால் கண்டிப்பாக அந்த தின்பண்டம் அவன் தாயாரால்தான் செய்யப்பட்டு யாக்கோபிற்கு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

அம்மாவிடம் நேசமில்லாத காரணத்தால் எசாயு இழந்த முதல் இழப்பு ‘தலைமகன் என்ற உரிமை’

எப்படியிருந்தாலும் ஈசாக் தன்னுடைய ஆசீர்வாதத்தை எசாயுவிற்கு கொடுக்கவே ஆசைப்படுகிறார். அது அவருடைய பாசம் மற்றும் நீதி. இதைப் பற்றி யாக்கோபு கவலைப்பட்டதாகவோ, அது தனக்குத்தான் கிடைக்க வேண்டும் என்று போராடியதாகவோ தெரியவில்லை. அதற்குக் காரணம் யாக்கோபின் கபடற்ற குணமாக இருக்கலாம்.

ஆனால் இதில் தாயின் பாசம், அக்கறை, நீதி குறுக்கிடு செய்து அதை யாக்கோபிற்குப் பெற்றுத் தருகிறது.. உலகத்தின் அடிப்படையில்/ பார்வையில் இப்போதும் யாக்கோபு தகுதியற்றவனே..

ஆனால் தாயின் பார்வையில் யாக்கோபுதான் தந்தையின் ஆசீர்வாதத்தைப் பெற தகுதியுள்ளவனாகத் தெரிகிறான்.

இங்கே பார்வை உலகத்தின் பார்வையும், தாயின் பார்வையும் வேறுபடுகின்றன.

இந்த இடத்தில் மாதாவின் பிள்ளைகளான நாம் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொள்ளலாம்..

நாம் மோட்சம் என்ற நித்திய பேரின்பத்தை, பிதாவின் நித்திய ஆசீர்வாதத்தைப் பெற நாம் தகுதியற்றவர்கள். ஏனென்றால் நாம் பாவிகள். ஆனாலும் நாம் நம் தாயை நேசிப்பதால், தகுதியில்லாத நம்மை தகுதி உள்ளவர்களாக மாற்றி நமக்கு மோட்சத்தை நம் மாதா எப்படியும் பெற்றுத்தந்து விடுவார்கள் என்று நிச்சயமாக நம்மலாம் நிம்மதி பெரு மூச்சு விடலாம்..

இங்கே பாருங்கள் இரெபேக்காலும் ஈசாக்கிடம் சென்று வாதாடவில்லை. அவன்தான் தலைமகன் உரிமையை யாக்கோபிடம் இழந்துவிட்டானே என்று கூறி சண்டை போடவில்லை. மாறாக யாக்கோபைத் தயாரிக்கிறாள்.

யாக்கோபிற்கு இருந்த சிரிய தகுதியைப் பயன்படுத்தி அவனை ஈசாக்கிற்கு முழுவதும் பிடித்தமாதிரி தயாரிக்கிறாள். இந்த தயாரிப்பு இதில் முக்கிய இடம் வகிக்கிறது..

இதில் ஒரு ரிஸ்க் இருந்தது.  யாக்கோபு மாட்டிக்கொண்டால் ஆசீர்வாதத்திற்கு பதிலாக தந்தையின் சாபத்தை வாங்க வேண்டியது வரும். அதனால் யாக்கோபு தயங்குகிறார். அப்போது இரெபாக்காள் சொல்லிய உறுதியான, திடமான வாக்குறுதிதான் யாக்கோபை அந்த ரிஸ்க் எடுக்க வைத்தது.

“ அந்தச் சாபம் என் மேல் வரட்டும். மகனே ! என் பேச்சைத் தட்டாமல் நீ போய் நான் சொல்லியவற்றைக் கொண்டு வா “ என்றாள்.

ஆதியாகமம் 27 : 13

எத்தகைய மேலான அன்பு தாயின் அன்பு. தகுதியற்ற மகனுக்கு ஆசீர்வாதத்தைப் பெற்றுத்தர, சாபத்தையும் பெற்றுக்கொள்ள தயாராகிறாள் அந்தத் தாய்..

கல்வாரியில் ஆண்டவரின் சிலுவையடியில், முழுத் தகுதியான தன் ஒரே பிள்ளையின் சொல்லுக்கு இசைந்து எந்த விதத்திலும் தகுதியில்லாத பாவிகளான நம்மை தன் அடுத்த பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டு நம்மையும் முழுத்தகுதியான தன் முதல் பிள்ளைபோல் மாற்றி மோட்சத்திற்கு தகுதியாக்கி நம் நேசப்பிதாவின் நித்திய ஆசீர்வாதத்தை பெற்றுத் தருவேன் என்று அந்த இடத்தில் ரிஸ்க் எடுக்கிறார்கள் நம் தெய்வீகத்தாய் நம் நேச மாதா.

ஆனால் அன்று தன் தாயின் சொல்லுக்கு இசைந்தார் யாக்கோபு. ஆசீரைப்பெற்றார்..

நம்மிடமும் நம் நேசத்தாய் “ என் மகனே ! என் மகளே ! நான் சொல்வதைத் தட்டாமல் செய்யுங்கள். உங்களுக்கு நான் நித்திய பிதாவின் கண்டிப்பாக ஆசீரை என் தலைமகன் வழியாகப் பெற்றுத்தருகிறேன் “ என்று சொல்கிறார்..

நம்மிடம் என்ன கேட்கிறார்கள் நம் நேச மாதா..

“ ஜெபம், தவம், பரிகாரம் “

இதைத் தட்டாமம் செய்ய நாம் தயாரா?

நன்றி : வேதாகம மேற்கோள்கள், விளக்கம். வாழும் ஜெபமாலை இயக்கம் மற்றும் புனித லூயிஸ் மரிய மோன்போர்ட் எழுதிய ‘ மரியாயின் மீது உண்மை பக்தி’ நூல்.

கடவுளுக்கு சித்தமானால் யாக்கோபு- எசாயு சுவாரஸ்ய சம்பவம் தொடரும்..

“ ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே.. ஜெபிப்போம் ஜெபிப்போம்.. ஜெபமாலை..

பரிசுத்த ஆவியானவர் போற்றி !

நம் நேசப்பிதா வாழ்த்தப்பெறுவாராக !

இயேசுவுக்கே புகழ் !   மரியாயே வாழ்க !