தேவமாதா யார்? பகுதி-39 : இரெபேக்காள் யாக்கோபுவை தயாரிக்கும் நிகழ்வு!

“ ஆண்டவர் அருளால் நான் விரும்பியது உடனே எனக்குக் கிடைத்தது “ என்று மறுமொழி சொன்னான்.

ஆதியாகமம்  27 : 21

இந்தப் பகுதியில் ஒரு மிகப்பெரிய மறையுண்மை இருக்கிறது.. அதற்கு செல்லும் முன் எசாயுவைப் போல இரெபேக்காள் யாக்கோபுவை தயாரிக்கும் நிகழ்வைப் பார்ப்போம்..

இரண்டு விதமாக தயாரித்தாள்,

1. மூத்த மகனின் உடைகளில் நல்லவற்றை எடுத்து அணிவித்தாள்.

2. கரங்களிலும், கழுத்திலும் வெள்ளாட்டுத் தோலைக் கட்டுவித்தாள்.

அப்போதுதான் யாக்கோபு மூத்த மகனைப்போல தோன்றினான்.

இப்போது தேவமாதாவின் தயாரிப்பைப் பார்ப்போம்..

தலைமகனான இயேசு சுவாமியின் ஆடையை அதாவது பரிசுத்தம் என்னும் ஆடையை மாதாவின் அடுத்த தகுதியற்ற பிள்ளைகளான நமக்கு அணிவிக்கிறார்கள்.

அடுத்து ஆட்டு மயிர் என்னும் மயிராடை எதைக்குறிக்கிறது என்றால் நாம் பாவம் செய்து தகுதியிழந்து, கடவுளின் சாயலை இழந்து வேற்று உருவில் இருக்கும் நம்மை செம்மறியின் தோலை நமக்கு அணிவிப்பதன் மூலமாக இழந்து போன கடவுளின் சாயலைப் பெற்றுத்தருகிறார்கள்..

ஆக பரிசுத்தம் மற்றும் கடவுளின் சாயலை (பரிசுத்தமும் கடவுளின் சாயலே) நமக்கு அளித்து நம்மை தலைமகனான, மூத்த மகனான இயேசுவைப்போன்று  மாதாவின் அடுத்த பிள்ளைகளான நம்மை உருமாற்றி தயார் செய்து இயேசுவாக நம்மை மாற்றுகிறார்கள்..

நம்மைப் பார்க்கும் நம் நேசப்பிதா நம்மில் அவரின் ஏக சுதனின் சாயலைப் பார்க்கிறார். பார்த்து அக மகிழ்கிறார்..

அப்போது நம்  நேசப் பிதா,

“ அட இவர்கள் என் ஒரே மகனான சுதனைப்போலல்லவா இருக்கிறார்கள். முன்பு கெட்டுப்போன பாவிகளாகி மனித உருவின் சாயலை இழந்து அதாவது என் சாயலை இழந்து மிருகங்கள் போலல்லவா இருந்தார்கள். அவர்களை அழிக்கவும், நரகத்தில் தூக்கிப்போடவும் அல்லவா எண்ணியிருந்தோம். இப்போது அவர்களைப்பார்க்கும்போது என் மகன் மனுமகன் இயேசுவைப்போலல்வா இருக்கிறார்கள். இனி அவர்களை அழிக்க மாட்டேன். அவர்கள் என் மக்கள். என் பிள்ளைகள். அவர்கள் அழிவுறமாட்டார்கள். வாழ்வார்கள். நித்தியத்திற்கும் வாழ்வார்கள். அதுவும் என்னோடு மோட்சத்தில் வாழ்வார்கள். நித்திய பேரின்பத்தை சுவைப்பார்கள்..”

“ இவனே என் அன்பார்ந்த மகன் “ “ இவளே என் அன்பார்ந்த மகள் “ “ இவர்களிடம் நான் பூரிப்படைகிறேன்” என்று நம்மை நிறைவாக, ஈசாக்கின் ஆசீரை விட பல மடங்கு அதிகமாக நம்மை ஆசீர்வதிப்பார்.

“ ஆமாம்.. எப்படியோ இருந்த இவர்களை என் பிள்ளையைப் போல இவ்வளவு அழகாக மாற்றியது யார் ? “ என்று மாதா பக்கம் திரும்பி இப்படிச்சொல்வார்..

“ நான் அப்போதே நினைத்தேன். இது என் பிரிய மகளின் வேலையாகத்தான் இருக்கும் என்று, ஏற்கனவே என்னுடைய வெறுப்பை சம்பாதித்து நரகத்திற்கு செல்ல இருந்த இவர்களை என் மகனைப்போல மாற்ற அவளால் மட்டுமே முடியும். அதுபோலவே இருக்கிறது.”

“ என் பிரிய மகளே ! நீயே என் அன்பார்ந்த ஒரே மகள் ! உன்னிடம் ஒவ்வொரு நாளும் பூரிப்படைகிறேன்/ பூரிப்படைகிறோம் “ என்று சொல்லியிருப்பார்.

இதற்கு ஒரே ஒரு காரணம்தான்.. நாம் மாதாமேல் வைத்திருக்கும் நேசமும், மாதா நம்மேல் வைத்திருக்கும் பாசமும்தான் காரணம்..

மாதாவின் பாசத்திற்கும், நேசத்திற்கும், அன்பிற்கும் சக்தி அதிகம்.

ஈசாக் யாக்கோபை ஆசீர்வதிக்க மனமுவந்தன் கடைசி காரணம்/இரகசியம் கடவுளுக்கு சித்தமானால் அடுத்த பகுதியில்.. 

“ ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே.. ஜெபிப்போம் ஜெபிப்போம்.. ஜெபமாலை..

பரிசுத்த ஆவியானவர் போற்றி !

நம் நேசப்பிதா வாழ்த்தப்பெறுவாராக !

இயேசுவுக்கே புகழ் !   மரியாயே வாழ்க !