சேசுவின் திருஇருதய அரசாட்சி பாகம் - 36

2வது: குருக்கள். 

அர்ச். மர்க்கரீத் மரியம்மாள் திரு இருதயத்தின்மீது பக்தி வைக்கும் குருக்களைக் குறித்துச் சொல்லியதைக் கேளுங்கள்: “எனது நேச எஜமான் எனக்கு அறிவித்தது என்னவென்றால், அவருடைய திரு இருதயத்தின் மீது விசேஷ பக்தி வைத்து, அப்பக்தியை எங்கும் ஊன்றி நிலைநிறுத்தப் பிரயாசைப்படும் குருக்கள் ஆத்தும ஈடேற்ற அலுவலை பலனோடு செய்ய உதவி ஒத்தாசையும் என்னைப் போல் கடினமான இருதயங்களை உருக்கத்தக்க வரப்பிரசாதங்களையும் கண்டடைவார்கள்” என்பது

திரு இருதயப் பக்தர்களாகிய நல்ல குருக்கள் சகலரும், நமது கர்த்தர் மர்க்கரீத் மரியம்மாளின் வழியாய் தெ லா கொலம்பியர் சுவாமியாருக்கு அறிவித்த விஷயத்தைத் தங்களுக்கும் கூறுவதாக எண்ணிக்கொள்ள வேண்டும். அதாவது, “என் ஊழியனாகிய கொலம்பியரிடம் போய், என் பெயரால் அவர் இவ்விருதய பக்தியை நிலைநிறுத்துவதில் தன்னை முழுவதும் செலவழிக்க வேண்டுமென்றும், 

அப்படிச் செய்வதால் என் திரு இருதயத்திற்கு மிகுந்த சந்தோஷத்தை உண்டுபண்ணுவார் என்றும் சொல்." உண்மையாகவே திரு இருதயத்திற்கு வணக்கம் செலுத்தும் குருக்கள் யாவரும் ஆத்தும இரட்சணிய விஷயமாய்த் தாங்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளை யெல்லாம் சர்வேசுரன் ஆசீர்வதிப்பதைக் கண்டு மகிழ்வார்கள்

3வது: இல்லறத்தோர்.

இல்லறத்தோரே! சேசுவின் திரு இருதயத்தின் பேரால் அர்ச். மர்க்கரீத் மரியம்மாள் உங்களுக்குச் சொல்வதைக் கேளுங்கள்: "உலக வாசிகள் சேசுவின் திரு இருதய பக்தியை அனுசரித்தால், தங்கள் அந்தஸ்திற்கு. அவசியமான சகல வரப்பிரசாதங்களையும் பெறுவதோடு கூட தங்கள் குடும்பத்தில் சமாதானத்தையும், துன்ப வருத்தங்களில் ஆறுதலையும் அடைவார்கள். 

அவர்கள் துவக்கும் அலுவல்கள் எல்லாம் தேவ அநுக்கிரகத்தால் கைகூடும். ஜீவிய காலத்திலும் விசேஷமாய் மரண சமயத்தில் இந்தத் திரு இருதயமே அவர்களின் தஞ்சமும் ஆதரவுமாயிருக்கும். இவ் வன்பு நிறைந்த இருதயத்தை நோக்கி மன்றாடும் பாவிகளோவென்றால், தங்கள் பாவங்களுக்கு நிச்சயமாய் மன்னிப்பை அடைவார்கள் என்பதற்குத் தடையில்லை. 

ஏனெனில் இவ்விருதயம் இரக்கத்தின் கரைகாணா சமுத்திரமாயிருக்கிறது.”

இவ்விதமாக, சந்நியாசிகளும் கன்னியர்களும் அப்போஸ்தலிக்க நற்குருக்களும், சகல கிறீஸ்தவர்களும் தங்கள் அந்தஸ்திற்குத் தகுந்த புண்ணிய வாழ்வைக் கைக்கொள்ள விரும்பினால், சேசுவின் திரு இருதய பக்தி அவர்களுக்கு நிச்சயமும், எளிதானதுமான இராஜ பாதை. நமது துர்க்குணங்களை வெல்வதற்கு இப்பக்தி முயற்சியைச் செய்துவந்தாலே போதும். நித்திய ஜீவியத்தை அடைவதற்கு அவசியமென சுவிசேஷத்தில் எடுத்துக் காட்டப்படும் புண்ணியங்களைத் தேடி சம்பாதிக்கத் தேவையில்லை என்று சொல்லலாம் ஒருபோதுமில்லை. அப்படி நினைப்பவர்களும் சொல்கிறவர்களையும் இப்பக்தியின் மெய்யான நோக்கத்தையும், மாட்சிமையையும் அறியாதவர்கள்

தொடரும்...