சேசுவின் திருஇருதய அரசாட்சி பாகம் - 35

திரு இருதய பக்தியால் வரும் பலன்கள்

நமது திவ்விய இரட்சகர் அவ்வப்போது மனுக்குலத்திற்குக் கொடுத்த வாக்குறுதிகளின்படி, துறவறத்தோருக்காவது, குருக்களுக்காவது, இல்லறத்தோருக்காவது சேசுவின் திரு இருதய பக்தியைவிட உயர்ந்ததும், நலம் கொடுக்கக்

கூடியதும் வேறொன்றுமில்லை. பின்வரும் பக்திகளில் திரு இருதய பக்தியால் இந்த மூன்று வகுப்பாருக்கும் வரும் பலன்களை முறையே ஆராய்ந்து பார்ப்போம்

1வது: துறவறத்தார் (சந்நியாசிகள், கன்னியர்கள்) 

சேசுவின் திரு இருதயப் பக்தியை எப்பக்கங்களிலும் பரவச் செய்ய வெகுவாய் முயன்று வந்த குருவாசே என்னும் சுவாமியாருக்கு முத். மர்க்கரீத் மரியம்மாள் எழுதி அனுப்பிய செய்தியாவது: சந்நியாசிகள், கன்னியர்கள் சகலரும் இவ்வுந்நத பக்தியைக் கைக்கொள்ள முயற்சி செய்யுங்கள். இதைத் துறவறத்தோர் கைக்கொள்வதால் சொல்லொண்ணா உதவிகளைக் கண்டடைவார்கள். 

சீர்குலைந்து, ஒழுங்கற்றுபோன, பெரிய மடங்களில் மேலான பக்திப் பற்றுதல்களை எழுப்புவதற்காக என்றாலும் சரி, சட்டதிட்டங்களை ஒழுங்காக அனுசரித்து புண்ணிய நெறியில் நடக்க முயலுவோரை அதன் உந்நதக் கதிக்குக் கொண்டு சேர்ப்பதற்காக என்றாலும் சரி, சேசுவின் திரு இருதய பக்தியே உந்நத வழியாகும். துறவறத்தார் புண்ணியத்தை அதிசீக்கிரத்தில் கைக்கொள்ள வேண்டும் தங்கள் ஆத்தும இரட்சணியத்தின் தப்பாத அடையாளம் அவர்களுக்குத் தேவையா?

அவர்கள் சேசுவின் திரு இருதயத்திற்குத் தங்களை முழுவதும் ஒப்புக்கொடுக்கட்டும். தங்களால் கூடிய வரைக்கும் அதைப் புகழ்ந்தேற்றி, மகிமைப்படுத்தி சிநேகித்து வரட்டும். சேசுவின் திரு இருதயம், தனக்கு விசேஷ விதமாய்ச் சங்கை புரியும் மடங்களையும், சபைகளையும் ஆசீர்வதித்தும், அவைகளில் வாசம் செய்யும், அன்போடு அவைகளைக் கண்காணித்து வரும் என்பதில் சந்தேகமில்லை

அர்ச். மர்க்கரீத் மரியம்மாள் நவகன்னியாஸ்திரியாய் இருந்த காலத்தில், தனக்குப் பிரியமில்லாத ஒரு விஷயத்தில் அவர்கள் தன்னை ஜெயிக்க வேண்டியதாயிருந்தது. அப்போது தன் சுபாவ நாட்டத்தின் காரணமாய்த் தன்னை வெல்ல முடியாமல் தத்தளிக்கலானார். அத்தறுவாயில் நமதாண்டவர் அவர்களுக்குத் தரிசனையாகி, காயங்கள் நிறைந்துள்ள தமது திரு இருதயத்தைக் காண்பித்து, இரத்த மயமாகக் காணப்படும் அவ்விருதயத்தின் முன் அவர்களுடைய துர்மனப் போக்குகளும் அவைகளை வெல்ல முடியாத தைரியக்கேடும் எப்படிப் பட்டவை என்று சொல்லி மனம் நொந்தார்.

இதைக் கேட்ட கன்னியாஸ்திரி ஆண்டவரைப் பார்த்து, “சுவாமி, என் மனது என்னைவிட பலமுள்ளதாகத் தோன்றும் போது, நான் எப்படி என் மன நாட்டங்களைச் சீர்திருத்த முடியும்? வெற்றி பெற என்னிடம் சக்தியில்லையே” என்று மொழிந்தார். இதற்கு மறுமொழியாக, “உனது மனதைத், திறக்கப்பட்டுள்ள நமது திரு இருதயக் காயத்தில் வை. இனிமேலும் அது அடங்கி நடக்கப் பின்வாங்காது” என்று சேசுநாதர் உரைக்க,

பதிலுக்கு அர்ச். மர்க்கரீத் மரியம்மாள் கூறுவாள்: 

“ஆண்டவரே, கட்டுக் கடங்காத என் மனம் எப்போதும் சிறைப்பட்டிருக்கும் வகையில், நீரே உமது கையால் அரணுக்கு ஒப்பான உமது திரு இருதயக் காயத்தில் வைத்து முற்றுகையிட்டருளும்." நமது ஆண்டவரும் அவளுடைய வேண்டுகோளுக்கு இணங்கி அவளுடைய இருதயத்தைக் கையிலெடுத்து, அதைத் தமது திரு இருதயக் காயத்தின்மீது அன்பாய்ப் பதிக்கலானார். 

அக்கணம் முதல் அர்ச். மர்க்கரீத் மரியம்மாள் தன்னை ஜெயிப்பதில் எவ்விதக் கஷ்டத்தையும் அனுபவிக்கவில்லை. தன்னை வெல்ல வேண்டிய சமயங்களில் கொஞ்சமும் பின்வாங்க

வில்லை. “பக்தியுள்ள ஆத்துமங்கள் வெகு சீக்கிரத்தில் புண்ணிய நெறியை அடைவார்கள்” என்னும் திரு இருதய வாக்குத்தத்தம் அவளிடம்தான் முதலாவதாக நிறைவேறியது

தொடரும்...