சேசுவின் திருஇருதய அரசாட்சி பாகம் - 34

கத்தோலிக்கக் குடும்பங்கள் எல்லாம் இத்திரு இருதய பக்தியை அதிகமதிகமாக நாடித் தொழுவது எவ்வளவோ சந்தோஷத்தைத் தரும். இவ்விருதயத்தின் மீது தாங்கள் வைத்த அன்பின் அறிகுறியாக ஒரு திரு இருதயச் சுரூபத்தையோ அல்லது படத்தைத் உங்கள் வீட்டில் பகிரங்கமாக ஸ்தாபிப்பார்களாகில்

அவர்கள் எவ்வளவோ பாக்கியவான்களாவர்! 

பெற்றோரும் பிள்ளைகளும் கூடிச் சேர்ந்து இந்தச் சொரூபத்தின் அல்லது படத்தின் முன்னால் தங்கள் அனுதின ஜெபங்களை ஜெபிப் பார்களேயாகில், தாங்கள் உத்தம கிறீஸ்தவர்கள் ஆவதையும் வேத காரியங்களைச் சிறப்பாய்ச் செய்து முடிப்பதையும், குடும்ப ஜீவியத்தில் புண்ணியங்களில் வளர்வதையும், நசரேத்தூரின் பரிசுத்த குடும்பத்தின் நன்மாதிரிகையைக் கண்டுபாவிக் கத் துவக்குவதையும் பார்த்து மகிழ்ச்சியடைவர். 

அடிக்கடி அவர்கள் இந்தப் படத்தை உற்றுநோக்கினால், தங்கள் துன்பங் களில் ஆறுதலையும், சோதனைகளில் தேவ உதவியையும் தாங்கள் கட்டிக்கொண்ட பாவங்களைப் பரிகரிக்க அவசிய மான வரப்பிரசாதங்களையும், இன்னும் கடைசியாய் தங்கள் நினைவு, சொல், செயல்களில் சர்வேசுரனுக்குப் பிரியமற்றவை களை முற்றிலும் விலக்க வேண்டிய உதவியையும் அவர்கள் கண்டடைவார்கள். 

மேலும் இவ்வுலக காரியங்களின் மீதும் சிற்றின்பங்களின் மீதும் தங்களுக்குள்ள பற்றுதலைக் களைந்து விடவும், தங்கள் வாழ்நாளின் இறுதியில் தங்களை எதிர்கொண்டழைக்கும் நித்தியத்தைப்பற்றி நினைக்கவும், தங்கள் நற்செய்கைகளால் வரும் ஞானப் பலன்களை மோட்சத்திற்கென்று சேர்த்து வைக்கவும் திரு இருதயத்தின் இந்நேசச் சாயல் அவர் களுக்கு உதவி செய்யும்

தற்சமயத்தில் பிரான்ஸ் தேசத்தில் கத்தோலிக்கக் குடும்பங்கள் ஒன்றுசேர்ந்து தங்களை சேசுவின் திரு இருதயத்திற்கு ஒப்புக்கொடுக்க வெகு முயற்சி எடுத்து உழைக்கும் ஓர் அமைப்பை நமது பரிசுத்த பாப்பரசர் 15-ம் ஆசீர்வாதப்பர் அன்பாய் ஆசீர்வதிக்கிறதாகவும், அதில் முன்னேற்றத்தை ஆசிக்கிறதாகவும் அறிவித்திருக்கிறார். பரிசுத்த பிதாவின் விருப்பங்கள் இந்தியக் கத்தோலிக்கக் குடும்பங்களிலும்

நிறைவேறும் என்பது நமது தளராத நம்பிக்கை.

வீட்டின் முதன்மையான இடங்களில் திரு இருதயச் சுரூபத்தை அல்லது படத்தை ஸ்தாபிக்க முயலும் சகல இந்திய மக்களும் சிம்மாசனங்களுக்கு ஒப்பான தங்கள் இருதயங்களில் இவ்விருதயத்தை வைத்து வணங்குவார்களேயாகில், சேசுவின் திரு இருதயம் தமது வரப்பிரசாதங்களைத் தாராளமாய் அவர்கள்மீது பொழியும். மாரிபோலப் பெய்யும் இவ்வரப்பிரசாதங்கள் குடும்பங்களில் சமாதானத்தையும், மனமகிழ்ச்சியையும் உண்டுபண்ணி, சகல புண்ணியங்களும், விசேஷமாய் சேசுவின் மனமும் உயிரும் அவைகளில் ஒங்கி வளரச் செய்யும் என்பதற்குச் சந்தேகமில்லை

தொடரும்...