சேசுவின் திருஇருதய அரசாட்சி பாகம் - 33

திவ்விய இருதயம் சகல மனிதர்கள் பேரிலும் பொதுவாக வைத்த நேசத்தை ஆராய்ந்து பார்த்தோம். ஆனால் அது நம் ஒவ்வொருவர் மீதும் கொண்ட தனிப்பட்ட அன்பை எவ்விதமாய் எடுத்துரைப்போம்! திரு இருதயம் நமது பேரில் வைத்த நேசத்தைப்பற்றி அர்ச். சின்னப்பரின்: “(கிறீஸ்துநாதர்) என்னை நேசித்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத் தார்” (கலாத்.11:20) என்று எழுதியிருக்கிறார். 

உண்மையாகவே நாம் ஒவ்வொருவரும் நமக்குள் சொல்லிக்கொள்ள வேண்டியது என்னவென்றால், உலகத்தில் வசிக்கும் பிராணி நான் ஒருவன் மட்டுமே என்பது போல் சேசுநாதர் தமது நேசத்தையெல்லாம் என்மீது பொழிந்திருக்கிறார்; எனக்காகவே மரித்திருக்கிறார் என்னிமித்தமே தேவ நற்கருணையில் வீற்றிருக்கிறார்; நான் பயன்பெற வேண்டும் என்பதற்காகவே தமது இருதயத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். 

என் மீது கணக்கற்ற உபகாரங் களைக் குவிக்கிறதற்குக் காரணமென்ன? என் நலத்தைத் தேடியல்லவா? எனக்குப் பல சோதனைகளையும், துன்பங் களையும் அனுப்புவதேன்? என்னை அர்ச்சித்து, பரலோக இராச்சியத்தில் எனக்கு முடிசூட்ட அல்லவா? நான் ஜெபத்தில் மன்றாடும் காரியங்களை எனக்குக் கொடுக்காமல், நான் கேட்டதைவிட அருமையானதும் என் ஆத்துமத்திற்குப் பிரயோசனமானதுமான வரப்பிரசாதங்களை எனக்குக்

கொடுக்கின்றாரே. இவையெல்லாம் என் நேசத்தைப்பற்றி அல்லாது வேறென்ன

ஜீவிய காலத்தில் நீங்கள் செய்த அக்கிரமங்கள் உங்கள் இருதயத்தில் பயத்தை எழுப்புமேயாகில், சேசுவின் திரு இருதயத்தை நோக்கிப் பாருங்கள். அதிலிருந்து வரும் சப்தம் என்ன? நான் முழுவதும் சிநேகமாயிருக்கிறேன் என்பதே நீங்களோ, உங்கள் பாவ ஜீவியத்தால் வெறுத்துத் தள்ளப்பட வேண்டியவர்கள். ஆயினும் சேசுநாதர் உங்களைச் சகோதர வாஞ்சையோடு நேசிக்கிறார். அவரிடமும், அவருடைய பிதாவினிடமும் திரும்பி வர உங்களை வெகுவாய்த் தூண்டுகிறார். இன்னும் சர்வேசுரன் இடத்தில் உங்களுக்காகப் பரிந்த பேசுகிறார்

சேசுவின் அணைகடந்த இவ்வன்பைக் கண்ணுற்றுப் பார்க்கும்போது, நாம் மனங்கசிந்து துயரப்படுவதற்குப் பலத்த காரணங்கள் உண்டு. மனிதர்களில் பெரும்பாலானவர்களும் நாமுமே இவ்விருதயத்தை அறிந்தும் அறியாதவர்களாய் நடப்பதும், அதற்குச் சிநேகத்திற்கும் பதில் சிநேகம் காண்பியாது காலம் போக்குவதும், நமது இருதயத்தில் துயரத்தை உண்டுபண்ண வேண்டும்.

பரலோகத்தில் சம்மனசுக்களும் அர்ச்சியசிஷ்டவர்களும் இவ்விருதயத்தைத் தங்கள் ஆராதனை முயற்சிகளால் புகழ்ந்தேற்றி, நம்மால் கட்டிக்கொள்ளப்படும் நன்றியறியாமையைப் பரிகரிக்க முயலுகிறார்கள். ஓ! இன்று தொடங்கியாவது நாம் நித்தியத்தில் ஜீவிக்கக் காத்திருக்கும் பரிசுத்தமும், சிநேகம் நிறைந்ததுமான ஜீவியத்தை ஜீவிக்கத் தொடங்குவோம்

தொடரும்...