சேசுவின் திருஇருதய அரசாட்சி பாகம் - 32

ஆகவே, இவ்விருதயப் பக்தி அர்ச். மர்க்கரீத் மரியம்மாளுக்கு அறிவிக்கப்பட்ட விதமானது, மனிதரின் அசட்டைத் தனத்தை ஜெயிக்கவும், அவர்கள் இருதயங்களிலே சிநேக சுவாலையை பற்றியெரியப் பண்ணவும் சேசுநாதர் மறைத்து வைத்திருந்த ஒரு கடைசி வழியாகத் தென்படுகிறது. 

மேலும் மனிதருக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேச வல்லமையுடையவர் சேசுநாதர் ஒருவரே. எனினும், அர்ச். மர்கரீத் மரியம்மாள் திரு இருதயத்தை ஒரு புது மத்தியஸ்தரென்று அழைக்கிறாள். அதாவது, சேசுநாதர் தமது திரு இருதயத்தை நமக்கு ஒப்படைப்பதில், தம்மைப் புதிதாய்ப் பரித்தியாகம் செய்கிறார். இப்பரித்தியாகம், சாத்தானின் பிடியிலிருந்து மனிதர்களை மீட்கவும், அவர்களின் இருதயங்களைத் தேவ அக்கினியால் பற்றியெரியச் செய்யவும் நமது இரட்சகர் எடுத்துக்கொண்ட கடைசி முயற்சி என்பதற்கு சந்தேகமில்லை

சகல கிறீஸ்தவர்களும் சேசுவின் திரு இருதயத்திற்கு தங்களை ஒப்புக்கொடுக்க வேண்டுமென்ற 13-ம் சிங்கராயர் இவ்விருதயத்தைத் தற்காலத்தின் ஜெயக்கொடி என்று அழைக்கிறார். 

இதனால் எக்காலத்திலும் சேசுநாதருடையவும் திருச்சபையினுடையவும் விருதுக்கொடியாயிருந்த சிலுவைக்குப் பதிலாய் திரு இருதயத்தைக் காட்ட வேண்டுமென்பது பாப்பரசரின் கருத்தல்ல. வெற்றிக்கொடி என்றழைக்கப்படும் இவ்விருதயம், உலகத்தின் இரட்சணியம் கருவியாயிருந்து வந்த சிலுவையை நாமறியவும், மனிதர்களின் ஈடேற்றத்திற்காகப் பலியான சேசுவின் அளவற்ற அன்பை நாம் ஆழ்ந்து சிந்திக்கவும் உதவியாயிருக்கிறது என்பதே அவரது கருத்து திருச்சிலுவையும் தேவ நற்கருணையின் சேசுவின் திரு இருதயத்தை அறிய உதவியாயிருப்பது போல, திரு இருதயமும், திருச் சிலுவையையும் தேவநற்கருணையையும் அறிவதற்கு மேலான வழியாயிருக்கிறது. இப்பல சாயல்களிலும் காணப்படுவது சேசுவின் சிநேகம் மட்டுமே

இப்போது சேசுவின் திரு இருதயத்தின் சுபாவ தத்துவம் என்னவென்று பார்ப்போம். இவ்விருதயம் தனது சுயமான குணங்கள் பலவற்றையும் மறைத்து அன்பை மாத்திரம் வெளிப் படுத்தும் திவ்விய வார்த்தை. சிநேகமும் நன்மைத்தனமும் கூடி வாழும் இருதயம். மாட்டுத் தொழுவத்திலிருந்து சிலுவை மரணம் வரையில் சிநேகத்தை மட்டுமே காட்டும் இருதயம் 

கல்வாரி மலையிலும், திவ்விய பலிபீடத்திலும் நேசப் பலியாகி தமது அன்பை வெளிப்படையாகத் காட்டும் ஆண்டவர் வீரத்திலும், ஆத்துமத்திலும் நன்கு மதிக்கப்படும் குணாதிசயங்களையும், நேச அடையாளங்களையும் கொண்ட சேசுவின் திரு இருதயம். இவ்விருதயத்திற்குத் தோத்திரமாக நாம் கொண்டாடும் திருநாளும் இந்நேசத்தையே குறிக்கிறது

தொடரும்...