இப்போது பழமொழி ஆகமத்தில் இரண்டு இறைவார்த்தைகளைப் பார்க்கப் போகிறோம் இரண்டுமே மறைபொருளான இறைவார்த்தைகள்.. ஆனால் இரண்டிற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.. அது அதைவிட நமக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்..
முதலில் ஆண்டவரும் மாதாவும் சம்பந்தப்பட்ட இறைவார்த்தை…
“ தூரத்தினின்று அப்பத்தைக் கொண்டு வருகின்ற கப்பல் போலானாள் “
பழமொழி ஆகமம் ( நீதி மொழிகள்) 31: 14
இதை யாரும் எளிதில் கண்டு பிடித்துவிடலாம்..
தூரத்திலிருந்து வந்த அப்பம் எது?
திவ்ய நற்கருணை ஆண்டவரான வார்த்தையான சர்வேசுவரன்..
அந்த அப்பத்தைக் கொண்டுவந்த கப்பல் யார்?
நம் தேவமாதா மாதா.. “ சிந்தாதிரி மாதா “ “ கப்பல் மாதா “ என்றழைக்கப்படும் இந்த மாதாவும் பைபிளில் இருக்கிறார்கள்.. அது இந்த இடத்தில்தான். (நன்றி வாழும் ஜெபமாலை இயக்கம்).
இப்போது மாதா சம்பந்தப்பட்ட இறைவார்த்தை..
“ வல்லமையுள்ள பெண்ணைக் கண்டுபிடிப்பவன் யார் ? அவள் தூரமாய்க் கடைக் கோடிகளினின்று அடையப்பெற்ற செல்வமாம்”
பழமொழி ஆகமம் ( நீதிமொழிகள்) 31 : 10
வல்லமையுள்ள பெண் யார்?
இதையும் நாம் எளிதாக கண்டுபிடித்துவிடுவோம்..
நம் தேவ மாதா என்று..
இப்போதுதான் இரண்டு இறைவார்த்தைக்கும் உள்ள தொடர்பை பார்க்கப் போகிறோம்..
தூரத்திலிருந்து அப்பம் வந்தது.. அதாவது நற்கருணையாக மோட்சத்திலிருந்து ஆண்டவர் வந்தார் என்று பார்த்தோம்..
இப்போது அந்த அப்பத்தைக் கொண்டுவந்த கப்பலான மாதா எங்கிருந்து வந்தார்கள்? அதை இந்த இரண்டாவது இறைவார்த்தை சொல்லுகிறது..
“ அவள் தூரமாய்க் கடைக் கோடிகளினின்று அடையப்பெற்ற செல்வமாம்”
ஆக மாதா வந்ததும் மோட்சத்திலிருந்துதான்..
நாம் ஏற்கனவே இரண்டாம் பகுதியில் பார்த்த ஒரு இறைவார்த்தை இதோடு ஒத்துப்போவதை பார்க்க முடியும்..
“ உன்னத கடவுள் வாயினின்று புறப்பட்டேன். நானே படைப்புகளுக்கெல்லாம் முன்பே படைக்கப்பட்டேன்”
சீராக் 24 : 5
இப்போது அதன் தொடர்பைப் பார்ப்போம்..
தூரத்திலிருந்து வந்த அப்பமான வார்த்தையான சுதனாகிய சர்வேசுவரன் பிதாவோடும், பரிசுத்த ஆவியோடும் நித்தியத்திற்கும் ஏற்கனவே இருக்கும் கடவுள்.. பிதா சுதன் பரிசுத்த ஆவியான தமத்திருத்துவம்..
இவரே இருக்கிறவராக கடவுள். “ இருக்கிறவர் நாமே “ யாத்திராகமம் (விடுதலைப்பயணம்) 3 : 14
அந்த அப்பத்தைக் கொண்டு வந்த கப்பலான தூரத்திலிருந்து வந்த மாதாவும் எப்போதிருந்து இருக்கிறார்கள் என்பதை சீராக் ஆகமம் தெளிவாக சொல்கிறது..
அப்படியால் அப்பத்தோடு கப்பல் எப்போதிருந்து தொடர்பில் இருக்கிறது..
எத்தனையோ கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்து..
அதனால்தான் நித்திய பிதா முதல் பெற்றோரின் வீழ்ச்சியின் போதே மாதாவைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்.. அதுதான் இந்த இறைவார்த்தை..
“ உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவோம்; அவள் உன் தலையை நசுக்குவாள்; நீயோ அவளுடைய குதிங்காலைத் தீண்ட முயலுவாய் என்றார்.”
ஆதியாகமம் 3 : 15
மாதாவின் படைப்பும், மாதாவின் பிறப்பும் மனித அறிவிற்கு அப்பாற்பட்டது. அதை செய்ய கடவுளால் மட்டுமே முடியும். மனிதனால் இதை கண்டுபிடிக்க முடியாதது என்பது நிதர்சன உண்மை.
இதைத்தான் மாதா புனிதர் புனித லூயிஸ் மரிய மோன்போர்ட் சொல்லுவார்.. மாதா யார் என்று சம்மனசுக்களாலேயே கண்டுபிடிக்க முடியாது என்று..
இப்போது பாருங்கள் கத்தோலிக்கத்தின் சிறப்பை..
மேலே உள்ள விசயத்தைத்தான். பைபிள் படிக்காத பாமர கத்தோலிக்கர்கள் எப்போதிருந்தோ பாடி வருகிறார்கள் இந்த பாடலை..
“ பூலோகம் தோன்றும் முன்னே.. ஓ பூரண (அருள் நிறைந்தவளே) தாயே ! மேலோனின் உள்ளம் தன்னில் நீ வீற்றிருந்தாயே”
சீராக் ஆகமத்தையும், பழமொழி ஆகமத்தையும் படித்தா கத்தோலிக்கர்களாகிய நம் முன்னோர்களும்,நாமும் இந்த பாடலைப்பாடினோம்? அல்ல ஆனாலும் சரியாகப்பாடியுள்ளோம்..
அதுதான் கத்தோலிக்கத் திருச்சபை.. அதன் போதனை ஒரு நாளும், ஒருக்காலும் தப்பாகவோ தப்பரையாகவோ இருக்காது..
நாம் பைபிள் படிக்காவிட்டாலும் திருச்சபை பைபிளிலிருந்து நமக்கு சரியானவைகளையே போதித்து வந்துள்ளது..
உண்மை என்னவென்றால் நாம் பைபிள் படிக்காத காலத்தில் ரொம்ப தெளிவாக இருந்திருக்கிறோம்.. இப்போது பைபிள் படிக்கிறோம் ஆனால் தெளிவில்லாமல் இருக்கிறோம்..ஏன்?
யாரோ சிலர் பைபிளை அறைகுறையாக படித்துவிட்டு குறைமாத பிள்ளைகள் போல் விளக்கம் சொல்ல அதற்கும் நாம் நம் காதுகளை நீட்டினோமல்லவா ? அதனால் வந்த விணைதான் அது.
சம்மனசுக்களாலேயே கண்டுபிடிக்க முடியாத மாதாவை கண்டுபிடிக்க அவர்கள் யார்?
இப்போது மாதா சம்பந்தப்பட்ட இரண்டாம் வார்த்தைக்கு வருவோம்..
“ வல்லமையுள்ள பெண்ணை நான் கண்டுபிடிப்பவன் யார்?”
நாம் இப்போதாவது மாதாவைக் கண்டுபிடித்துவிட்டோமா?
கடவுளுக்கு சித்தமானால் அடுத்த பகுதியில்..
“ ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே.. ஜெபிப்போம் ஜெபிப்போம்.. ஜெபமாலை..
பரிசுத்த ஆவியானவர் போற்றி !
நம் நேசப்பிதா வாழ்த்தப்பெறுவாராக !
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !