தேவமாதா யார்? பகுதி-32 : விசுவாச தூண் மாதா!

“ அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது “

லூக்காஸ் 1 : 33

கபரியேல் தூதர் மாதாவிடம் சொல்லியதும், நடந்ததும் ஒரு ஒப்புமை..

கரியேல் தூதர் : “ அவர் மேன்மை மிக்கவராயிருப்பார். உன்னதரின் மகன் எனப்படுவார் “ – லூக்காஸ் 1 : 32

நடந்தது : “ இவர் தச்சன் மகன் அல்லரோ” – மத்தேயு 13 : 54

உன்னதரின் மகன் தச்சன் மகனாக எண்ணப்பட்டார். மாதா கலங்கவில்லை.

கபரியேல் தூதர் : “ அவருடைய தந்தையான தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார் “ – லூக்காஸ் 1 :32

நடந்தது : “ அவர்கள் அவரை சிலுவையில் அறைந்தார்கள் “

தாவீதின் அரியணையில் அமர வேண்டியவர் அவமானத்தின் சின்னமான சிலுவையில் அமர்ந்தார்.. மாதா கேள்வி கேட்கவில்லை..

கபரியேல் தூதர் : “ அவர் மேன்மை மிக்கவராயிருப்பார்”  “ உன்னதரின் மகன் எனப்படுவார் “ -லூக்காஸ் 1 : 32

அந்த மேன்மைமிக்கவர் எப்படி நடத்தப்பட்டார்.

நடந்தது 1 :  அனைவரும் வெகுண்டெழுந்து, அவரை ஊருக்கு வெளியே தள்ளி, அவ்வூர் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிடக் கொண்டு சென்றனர்.

லூக்காஸ் 4 : 29

நடந்தது 2 : இதைக் கேட்டு அவர்கள் அவர் மேல் எரிய கல் எடுத்தனர்.

அருளப்பர் 8 : 59

நடந்தது : 3.‘மண்டை ஓடு’ எனப்படும் இடத்திற்கு வந்தபின் அவரையும், அவரது வலப்பக்கத்தில் ஒருவனும், இடப்பக்கத்தில் ஒருவனுமாக அக்குற்றவாளிகளையும் சிலுவையில் அறைந்தனர்.

மேன்மை மிக்கவர் குற்றவாளிகள் ஒருவராக, பாவியாக கருதப்பட்டார்.. இந்த இரண்டு சம்பவங்களாலும் மாதாவின் விசுவாசத்தை துளி கூட அசைக்க முடியவில்லை..

கபரியேல் தூதர் : “ யாக்கோபின் குலத்தின் மீது என்றென்றும் அரசாள்வார் “ – லூக்காஸ் 1 : 33

சிலுவையில் அறையப்பட்டு தொங்குகிறார்..

நடந்தது : “ மற்றவர்களைக் காப்பாற்றினான். இவன் கடவுளின் மெசியாவும், தேர்ந்தெடுக்கப் பெற்றவருமானால் தன்னையே காப்பாற்றிக்கொள்ளட்டும்” என்று அவரை ஏளனம் செய்தனர்.

“ நீ யூதரின் அரசனானால் உன்னையே காப்பாற்றிக்கொள் “ என்று எள்ளி  நகையாடினர்.

லூக்காஸ் 23 : 35-37

இப்போது வருவதுதான் சிகரம்..

கபரியேல் தூதர் : “ அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது “

நடந்தது : இயேசு , “ எல்லாம் நிறைவேறிற்று “ என்றார். பின்பு தலை சாய்த்து ஆவியைக் கையளித்தார்.

இயேசு சுவாமியினுடைய ஆட்சி சிலுவையில் முடிந்து விட்டது என்றுதான் எல்லாரும் நினைத்தார்கள்..

(நன்றி : வாழும் ஜெபமாலை இயக்கம்)

மூன்று வருடம் பாடம் நடத்தி அவர்களோடு வாழ்ந்த இயேசு சுவாமி தன் சீடர்களுக்கு மூன்று முறை சொன்னார், “ மனுமகன் பாடுகள் பல படுவார். சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படுவார்; ஆனால் மூன்றாம் நாள் உயிர்த்தெழுவார்”. ஆண்டவரின் சிலுவைப்பாடுகளின் போது எங்கே சென்றார்கள் அந்த சீடர்கள்..? (ஓருவரை தவிர்த்து).

அற்புதங்கள், அதியசங்கள் கண்ட சீடர்கள் எங்கே போனார்கள்?

இறையாட்சியில் பங்கு கேட்ட சீடர்கள் இப்போது எங்கே?

அவர்கள் மட்டுமா இயேசு சுவாமியின் பெண் சீடப்பட்டாளம் என்ன செய்தது..?

அவர்களுக்கும்தான் சொன்னார், “ நான் பாடுபட்டு மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுவேன் “ என்று.. அவர்கள் என்ன செய்தார்கள்.. இறந்து போய் அடக்கம் செய்யப்பட்டிருந்த ஆண்டவர் திருவுடலுக்கு வாசனை தைலங்கள் பூசி அதை பக்குவப்படுத்தி வைக்க சென்றார்கள்..

அவர்களுக்கும் நம்பிக்கை இல்லை.. ஆண்டவர் உயிர்த்தெழுவார் என்று..

ஆண்டவரைக் கண்ட, அவரது மாட்சியைக் கண்ட, அவரது வல்லமையைக் கண்ட, எத்தனையோ புதுமைகளைக் கண்ட, ஏன் இறந்த லாசரை நான்கு நாட்கள் கழித்து உயிர்ப்பித்த ஆண்டவரைக் கண்டவர்களுக்கு ஆண்டவர் மரித்ததும்.. அவர்கள் விசுவாசம் காணாமல் போனது..

இத்தனை வருடங்கள் அவரோடு பழகியும், வாழ்ந்தும் ஆண்டவரை அறிந்துகொள்ளவில்லை.. மொத்தத்தில் 99% பேர் அவுட்.. பரிட்சையில் பெயில்..

ஆனால் ஒரே ஒரு ஆள் மட்டும் நம்பினார்…அவர்கள்தான் மாதா… மாதா.. மாதா மட்டும்தான்..

 “ என் மகன் சொன்னபடி மூன்றாம் நாள் உயிர்த்தெழுவான். என் மகன் கடவுள்.. அவனுக்கு அழிவே கிடையாது. சாவால் அவனைத் தன் பிடிக்குள் வைக்க முடியாது.. வார்த்தையான முடிவில்லாத சர்வேசுவரனை ஒரு சிலுவையில் அடக்கி அழித்துவிட முடியாது.”

என்று கடைசிவரை நின்றது மாதா மட்டும்தான்..

மாதாவுக்கு நிகர் மாதாவேதான்..

கபரியேல் தூதர் கொண்டு வந்த சொல் யாருடைய சொல்.. அந்த செய்தி யாருடைய செய்தி..  நம் நேசப்பிதாவின் செய்தியல்லவா? பிதாவாகிய சர்வேசுவரனின் செய்தியை அவரின் பிரிய மகள் விசுவசிக்காமல் இருப்பாரா என்ன?

 “ உனக்கும் பெண்ணுக்கும் பகைதான் ( ஆதியாகமம் 3 :15). அவளை ஒரு நாளும்… ஒருக்காலும் உன்னால் ஜெயிக்க முடியாது “ என்று சொன்னரே தெய்வ பிதா? அந்த வாக்குறுதி.. தீர்க்க தரிசனம் வீணாக போகுமா என்ன?

“ ஆண்டவர் சொன்ன வாக்கு நிறைவேறும் என்று விசுவசித்தள் பேறு பெற்றவளே! “ லூக்காஸ் 1 :45 என்று சொல்லிய பரிசுத்த ஆவியின் வாக்கு பொய்க்குமா என்ன?

“யார் என் தாய் ?” என்று சொல்லி  “என் தாய் தெரியுமா என்று சுட்டிக்காட்டி “ இதோ உன் தாய் “ – அருளப்பர் 19 :27 என்று சொல்லிய சுதனின் வாக்கு பொய்க்குமா என்ன?

மூவொரு கடவுளால், மாதா பிறக்கும் முன்பே.. மேலும் மீட்புத் திட்டம் ஆரம்பிக்கும் முன்பே.. மீட்புத் திட்டம் முடியும் முன்பே.. மாதா யார் என்றும், மாதாவின் விசுவாசம் எப்படிபட்டது என்றும் சொல்லப்பட்டது என்றால்..

மாதா யாராக இருந்தார்கள்… மாதா எப்படிப்பட்டவர்களாக இருந்தார்கள்.. இருக்கிறார்கள்… இனிமேலும் இருப்பார்கள்..

மாதாவின் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தது தூய தமத்திருத்துவம்.. அதுவும் மாதா பிறக்கும் முன்பே.. மீட்பின் திட்டம் தொடங்கப்படுவதற்கு முன்னே..

இது எப்பேர்ப்பட்ட நம்பிக்கை..

ஆனால் பாருங்கள் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு பிரிவினர் மாதாவின் மேல் நம்பிக்கை வைக்கத் தயாராக இல்லை.. சான்றிதழ்கள் கேட்கிறார்கள். இது எத்துனை வேதனையான விசயம்..

கத்தோலிக்க கிறிஸ்தவர்களாகிய நாம் மாதாவை நேசிக்கிறோம். அவர்களைத் தாயாக கொண்டிருக்கிறோம். ஆனாலும் நாம் இன்னும் மாதாவைக் கண்டுபிடிக்கவில்லை. அவர்களை எப்படி பயன்படுத்துவது என்று தெரியவில்லை.. உலகக் காரியங்களுக்காகவே பயன்படுத்துகிறோம். பெட்டிசன் போடவே பயன்படுத்துகிறோம்.. 

மாதாவின் வேலையே தனி.. மாதா நமக்கு எதற்காக தேவை என்பதை அறிந்து அவர்களை நம் வாழ்க்கையில் பயன்படுத்த ஆரம்பித்து விட்டால் நாம் எங்கேயோ போய்விடுவோம்.. நம்முடைய நிலையே வேறு..

அந்த வல்லமையுள்ள பெண்ணை கண்டு பிடிப்பவன் எவன் பார்ப்போமோ அடுத்த பகுதியில் கடவுளுக்கு சித்தமானால்..

“ ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே.. ஜெபிப்போம் ஜெபிப்போம்.. ஜெபமாலை..

பரிசுத்த ஆவியானவர் போற்றி !

நம் நேசப்பிதா வாழ்த்தப்பெறுவாராக !

இயேசுவுக்கே புகழ் !   மரியாயே வாழ்க !