மனுமகன் இயேசு -27: மாமுனி சூசையின் மகத்துவம்..
“ இவர் தச்சன் மகன் அல்லரோ?”
மத்தேயு 13 :55, மாற்கு 6 : 3
“ இவர் சூசையின் மகனன்றோ?”
லூக்காஸ் 4 : 22
இந்த வார்த்தை சாதாரன ஒரு வார்த்தையே அல்ல..
இதற்குப் பின் ஒருவருடைய சரித்திரம், பரித்தியாக வாழ்க்கை, தியாக வாழ்க்கை, கடவுளுக்காக தரித்திர வாழ்க்கை, தாழ்ச்சியான வாழ்க்கை அடங்கியிருக்கிறது..
அவர்தான் மாமுனி புனித சூசையப்பர்..
நம்மூர்களில் ஒருவரை தாழ்வாக பேசப் பயன்படுத்தப்படும் வார்த்தையைத்தான் அன்று அந்த நாசரேத் மக்களும் பயன்படுத்தினார்கள்..
“ இவன் சுமை தூக்கும் கூலி அந்தோணி மகன்தானே.. இவன் மீன் விற்கும் யாகப்பன் மகன்தானே.. “
இதுபோன்ற வார்த்தைகள் தந்தையின் தொழிலைப் மையமாக வைத்து மகனை மட்டம் தட்டி பேச பொதுவாக எல்லா ஊர்களிலும் நிறைய பேர் பயன்படுத்தப்படுகிற வார்த்தைகள்தான்.
அதைச் சொல்லி “ இவன் என்ன பெரிய அறிவாளியா? இவன் புத்தி சொல்ற அளவுக்கு நம்ம ஆகிவிட்டோமா? என்ன ?” என்று கேட்பதுண்டு..
அன்று நாசரேத் மக்களும் அதே போன்றுதான் பேசினார்கள்.. “இவன் தச்சன் மகன்தானே? “ “ இவன் சூசையின் மகன்தானே ? “ என்று,
ஆனால் அவர்கள் பேசிய வார்த்தைகளைத்தான் நாம் தியானத்திற்கு எடுத்துக் கொள்ளப் போகிறோம்..
“ இவர் தச்சன் மகன் அல்லரோ? “
கடவுளுக்கே கார்டியனாக, வளர்ப்புத்தந்தையாக, கடவுளையே தூக்கி வளர்த்த புனித சூசையப்பர் எந்த அளவுக்கு தாழ்ச்சி உள்ளவராக, ஒரு அடிமைபோல் ஒரு தரித்திர வாழ்க்கை வாழ்ந்திருந்தால் அவர்கள் இப்படிப் பேசியிருக்க வேண்டும்..
“கடவுள் என் வீட்டில் இருக்கிறார்.. கடவுளுக்கு நான் வளர்ப்புத்தந்தை” என்று எந்த ஒரு பெருமை எங்குமே அவர் பேசியதில்லை.. அதன் மூலம் அவர் எந்த சலுகையையும் (Advantage) அவர் பெறவில்லை..
கடவுளைக் காப்பாற்ற, கடவுளுக்கு சோறு போட எத்தனை வீட்டுகளின் படி ஏறியிருப்பார்..
“தச்சு வேலை ஏதும் உங்கள் வீட்டில் இருக்கிறதா?
உங்கள் வீட்டில் பழுது பட்ட மரச்சாமான்கள் இருக்கிறதா?
புதிதாக மர சாமான்கள் ஏதும் செய்து தர வேண்டுமா?
என்று கேட்டு அந்த தொழிலை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து கடவுளையும், கடவுள் தாயாரையும் காப்பாற்றி இருக்கிறார்..
அவரைப் பார்த்து எத்தனை பேர் இப்படி பேசியிருக்க வேண்டும்..
“ ஏய் சூசை, என் வீட்டுல ஒரு நாற்காலிக்கு கால் ஒடிஞ்சி கிடக்கு.. அதை வந்து சரிபார் “
“ என் வீட்டு மேசை கிடு கிடுன்னு ஆடுது.. அதை சரி செய் “
“ சூசை என் மகன் படிக்கிறதுக்கு ஒரு மேசை செஞ்சி கொடு “
“ எங்க வீட்டுல கட்டுலுக்கு கால் சரியில்லை அதை மாற்றிக்கொடு “
இன்னும் எத்தனையோ வேலைகள்.. மேலும் தங்கள் வீட்டு பல மர பொருட்களை திருக்குடும்ப வீட்டிற்கு வந்து போட்டு அதைச் சரிசெய்யவும் சொல்லியிருக்க வேண்டும்..
அவரின் தரித்திர, ஏழ்மை வாழ்க்கையை முன்னிட்டு பொது இடங்களில் அவரை தாழ்வாக நடத்தப்பட்டிருக்க வேண்டும்..
புனித சூசையப்பரின் ஒரு தாழ்ச்சியான, கடவுளுக்கான அடிமைத்தன வாழ்க்கை இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது..
புனித சூசையப்பரைப் பற்றி வேதாகத்தில் “ இவர் ஒரு நீதிமான் “ என்று மட்டுமே சொல்லப்பட்டதாக நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம்..
இந்தப் பகுதியானது.. புனித சூசையப்பரின் எளிய, ஏழ்மை வாழ்க்கைக்கு ஒரு மிகப்பெரிய சான்றாகும்..
கடவுளும், கடவுளின் தாயும் வீட்டில் இருக்க எப்பேற்பட்ட ஒரு தாழ்ச்சியான வாழ்க்கையை அவர் வாழ்ந்திருக்கிறார்..
அதற்கு ஒரே ஒரு காரணம்தான்..
“கடவுளின் மீட்புத்திட்டத்திற்காக இந்த அடியேனையும் அவர் தேர்ந்து கொண்டார்.. அந்த திட்டம் வெற்றிகரமாக நடக்க என்னால் எவ்வளவு உழைக்க முடியுமோ அவ்வளவு உழைப்பேன்.. எத்தகைய பிரமாணிக்கமாக இருக்க வேண்டுமோ அவ்வளவு பிரமாணிக்கமாய் இருப்பேன்.. அதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் கஷ்ட்டப்படுவேன். தேவைப்பட்டால் என் உயிரையும் கொடுப்பேன் “
இத்தகைய எண்ணத்தில் அவர் உடல், பொருள், ஆவி அத்தனையையும் கடவுளுக்காக அர்ப்பணித்து வாழ்ந்திருக்கிறார்..
ஆண்டவர் இயேசு கோபப் பட இன்னொரு காரணமும் இருந்திருக்கலாம்..
தன் தந்தையைப் பார்த்து,
“ இவன் தச்சன் மகன் அல்லரோ?
என்று அவர்கள் எப்படிச் சொல்லலாம்..?
அவர் யார் என்று இவர்களுக்குத் தெரியுமா?
அவர் எப்பேர்பட்ட மகிமைக்குச் சொந்தக்காரர் என்று இவர்களுக்குத் தெரியுமா?
அவரின் கற்பு நிலை இவர்களுக்குத் தெரியுமா?
அவரின் பரிசுத்தம் இவர்களுக்குத் தெரியுமா?
அவரின் புனிதத்துவம் இவர்களுக்குத் தெரியுமா?
பிதாவின் முன்பு அவரின் உன்னத நிலை இவர்களுக்குப் புரியுமா?
என் பிதா இவர் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை இவர்களுக்குத் தெரியுமா?
தன் பிரிய மகளையும், தன் ஏக சுதனையும் என் தந்தையிடம் கொடுத்து அவர்களை பாதுகாத்து, பராமரிக்க சொன்னதின் நம்பிக்கை புரியுமா?
தெய்வீக பரிசுத்த ஆவியானவர் தன் ஏக பத்தினியை இவரிடம் ஒப்படைத்து பாதுகாக்க சொன்னதில் அவரின் நம்பிக்கை எத்தகையது என்பது இவர்களுக்குப் புரியுமா?
ஏப்பேர்பட்ட உத்தமரை இவர்கள் இப்படி தாழ்வாக பேசிவிட்டார்களே? என்ன தைரியம் இவர்களுக்கு என்றும் கூட ஆண்டவர் கோபப்பட்டிருக்கலாம்..
அவரின் கோபம் அவர் பொருட்டல்ல அவர் தந்தையின் பொருட்டு கூட வந்திருக்கலாம்..
ஆக “ இவன் தச்சன் மகன் அல்லரோ”
என்று அவர்கள் கூறியதில் புனித சூசையப்பரின் வாழ்க்கை இருக்கிறது.. அது வெளிப்படையாகத் தெரிகிறது..
அத்தகைய மான்பு மிக்கவரை, மேன்மை மிக்கவரை, மகத்துவம் மிக்க பிதாப்பிதாவான மாமுனி அர்ச். சூசையப்பரை எந்த அளவுக்கு நாம் நேசிக்கிறோம்.. எந்த அளவு அவருக்கு மகிமை கொடுக்கிறோம்.. எந்த அளவு அவரைத் தேடுகிறோம்.. எந்த அளவு அவர் துணையை நாடுகிறோம்..
நிறைய இடங்களில் அவர் ஆலயங்கள் இருக்கின்றன..
ஆனால் அவர் மீது போதுமான அன்பையும், நம்பிக்கையையும், மகிமையையும் மக்கள் கொடுப்பதில்லை என்பதே உண்மை..
அவரை ஒரு சாதுவான ஆள்.. ஒரு அப்பாவி என்பதுபோல்தான் பார்க்கிறார்கள்..
மோட்சத்தில் தேவ மாதாவுக்கு அடுத்த மகிமையும், வல்லமையும் அவருக்கே கொடுக்கப்பட்டுள்ளது என்பதை மக்கள் அறியாமலிருக்கிறார்கள்..
குறிப்பாக நரக சத்துருக்களை.. பிசாசுக்களை நடு நடுங்கச் செய்பவர்..
கற்பின் பாதுகாவலர்..
கத்தோலிக்க திருச்சபையையே அவர் பாதுகாப்பில்தான், பொறுப்பில்தான் திருச்சபை கொடுத்திருக்கிறது..
திருக்குடும்பத்தின் தந்தை, உழைப்பாளிகளின் பாதுகாவலர், கன்னியர்களின் மடங்களின் பாதுகாவலர் இன்னும் எத்தனையோ மகிமைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்..
மாமுனி புனித சூசையப்பரின் வாழ்க்கையையும் நாம் தியானிக்க வேண்டும்.. அவரைப்போல வாழ வேண்டும்.. அவரை நம் வாழ்க்கையில் முன்மாதியாகக் கொள்ளவேண்டும்..
சூசையப்பர் சாதாரனமாவர் அல்ல.. மிக மிக அசாதாரனமாவர்.. வல்லமைமிக்கவர்.. அவரை நாம் பயன்படுத்துவோம்..
பரிசுத்த ஆவியானவர் போற்றி !
சுதனாகவும், வார்த்தையாகவும் இருந்து மனுவுருவான இயேசுவுக்கே புகழ் !
மனுவுருவாக, கடவுளுக்கு தன் சரீரத்தைக் கொடுத்த மா மரியாயே வாழ்க !