சேசுவின் திருஇருதய அரசாட்சி பாகம் - 27

ஞான வாழ்நாள் முழுவதும் சிறுபிள்ளைகளாகவே வாழ்வதில் திருப்தி அடைந்து விசுவாசத்தால் வாழும் எளிய உள்ளங்களின் நிலை ஓர் நிலை; சிலுவை அடியில் அறிவின் தீபங்களை ஏற்றி இருண்ட உலகில் தொடர்ந்து ஒளியேற்றும் அர்ச். அகுஸ்தீனார், அக்குயினாஸ் போன்ற கற்றுத் தேர்ந்த உள்ளங்களின் நிலை மற்றொரு நிலை. 

இந்த இரு எதிர் நிலைகளுக்கு இடையில் நடுநிலை கிடையாது. எளிய ஆயர்கள் வானவனின் வாய்மொழி கேட்டு தங்களுடைய செம்மறிப் புருவையைக் கண்டனர்; பேரறிஞரோ நட்சத்திரத்தின் சிற்றொளியைக் கண்டு தங்களுடைய பேரொளியைக் கண் டடைந்தனர். ஆனால் பேரரசன் ஏரோது ஆயர்களை அடுத்து பன்னிரு கல்களுக்கு அப்பால்தான் வசித்தான். திருக்குகையை தேடிச் சென்ற அப்பேரறிஞர் வழியில் அவ்வரசனை பேட்டியுங் கண்டனர். எனினும், ஏரோது, தன்னுடைய சிசுக் கொலையின் சதித் திட்டத்திலும் கடவுளைக் கண்டானில்லை 

அந்நாள் தொடங்கி இந்நாள் மட்டும் இறுமாந்து வாழும் ஏரோதுகளின் வர்க்கம் முழுவதும், தாங்கள் அறிஞர் என்று அவர்கள் நினைப்பதால், கடவுளை காணாது இழந்து வருகின்றனர். ஏனென்றால், ஒன்றில் இடையர்களின் எளியச் செய்தியை அறிந்துகொள்வதற்கு ஏற்ப அவர்களின் உள்ளம் பக்குவமற்று இருந்திருக்க வேண்டும் 

அல்லது பேரறிஞர் கொணரும் பயன் தரும் ஒரே உண்மையை ஏற்க இயலாது அவர்களது உள்ளம் பயனற்ற கல்வியால் நிரம்பியிருக்க வேண்டும். இன்றைய உலகத்திற்கு வெளிப்படையாக உள்ள குறை திருத்தங்களை ஏற்கும் மனநிலை இல்லா குறையேயாகும் ஆகையால்தான் கடவுள் விடுக்கும் வெளியீடுகளால் தங்கள் அறிவை அதிகரிக்கக் கூடும் என்ற கருத்தை நிராகரிக்கின்றனர் 

சிலர் தங்களின் அகந்தையை மறைக்க, பழைய பல்லவியையே பாடி காலத்திற்கு பின்னால் நிற்கும் ஒரு சமூகம் என்று திருமறையை எதிர்க்கும் தொலைவுக்குச் செல்கின்றனர். நமது திருச்சபையை எதிர்த்துப் பேசி வசை மொழியை வீசும் உரிமையை இவர்களுக்கு நாம் மெய்யாகவே மறுக்க வேண்டும்

ஏனெனில், அவ்வாறு எதிர்க்கவோ அல்லது தீர்ப்புக் கூறவோ இவர்களிடம் போதிய அறிவுத் திறனும் இல்லை, திருமறையைப் பற்றிய எத்தகைய அறிவும் கிடையாது

தொடரும்...