சேசுவின் திருஇருதய அரசாட்சி பாகம் - 20

ஏன் வெகு சில ஆத்துமங்களே கிறீஸ்துவைக் கண்டடைகின்றன? தோன்றி மறைந்திடும் நவீன கொள்கைகளுக்கு ஏன் இத்தனை ஆதரவாளர்கள்? ஆனால் தேவ இரட்சகருக்கு மட்டும் ஏன் மிக சொற்பப்பேரே உள்ளனர்? மதத்தைப்பற்றி சிந்தனை செய்ய கவலை கொண்ட எந்த உள்ளமும் இத்தகையானை கேள்விகளை கேட்கிறது. 

சிறந்த சகோதரத் தன்மையைப் போதிக்கும் சாந்தமூர்த்திதான் கிறீஸ்து அல்லது கடவுளின் உதவியின்றி மனித சுபாவத்தைக் கொண்டே வாழ்க்கை தரத்தை உயர்த்தக்கூடும் என்ற கொள்கைகளைப் பரப்பும் சமூக சீர்திருத்தவாதிதான் அவர் என்றும் அநேகர் கருதி வருகின்றனர். ஆனால் வெகு சிலரால்தான் அவரை மக்களிடை வந்த மாதேவன் என்றும், உலகின் வெளிச்சமும் வாழ்வும் என்றும் காண முடிகிறது 

மனித உள்ளத்தை மாற்றி அமைப்பதால் உலகையே மீண்டும் மாற்றி அமைக்க வந்த அந்த ஒருவர்பால் ஏன் இத்தகைய மனப்பான்மை நிலவிவருகிறது? காரணம் இதுவே 

கிறீஸ்துவைத் தேடிநிற்கும் உள்ளங்கள், ஒன்று போதிய எளிமை யைக் கொண்டிருக்கவில்லை அல்லது போதிய அளவிற்கு கற்று தேர்ந்திருக்கவில்லை. தொன்றுதொட்டு நம் ஆண்டவரை இரு வகுப்பினரே கண்டடைந்து வருகின்றனர் - அறிஞரும் அறியாதாரும். ஆனால் தாங்கள் அறிவதாக உணர்ந்த எவரும் அவரை இதுகாறும் கண்டடைந்தது இல்லை. 

கடவுள் தன்மை எவ்வளவு ஆழ்ந்த அறிவுக் களஞ்சியம் என்றால் அதனை இரு எதிர் உச்சநிலையாகிய எளிமையாலும் கூரறிவாலும் தான் கண்டு உணர முடியும். அறிஞர்க்கும் பாமரர்க்கும் இடையில் ஒரு வகைத் தொடர்பு இருக்கிறது அதுதான் தாழ்ச்சி. 

தான் எவ்வளவுதான் கடவுள் தன்மையை ஆழ்ந்து ஆராய்ந்து பார்க்கினும், அதன் ஆழத்தை அறியக்கூடாதென உணரும் கூரறிவாளனிடம் தாழ்ச்சி உண்டு. 

தான் எவ்வளவுதான் ஆராய்ந்தாலும், அதனால் பயன் ஏதுமில்லை என்று உணரும் பாமரனிடமும் தாழ்ச்சி உண்டு. ஆனால் தன்னறிவையே நம்பி விடை தேடுபவன், அரைகுறை படிப்பால் இறுமாந்த பேதை மனத்தினன், தன் சுய அறிவை நம்பிய வித்தகன் தேவ ஞானத்தில் ஆழ்ந்து செல்வதில்லை. ஏனெனில் தனது அறிவைவிட மிக்க ஆழம் பொருந்தியது வேறெதுவுமில்லை என்பது அவன் எண்ணம்

தொடரும்...