கிறீஸ்து இராஜா கெம்பீரமாய் குடும்ப இராஜாவாக வீற்றிருக்கும் நல்ல கத்தோலிக்க குடும்பங்களிலும் வியாதி வராமல் போகாது. குடும்பத்தார் சாவுக்குத் தப்பித்துக்கொள்ள மாட்டார்கள். கஷ்ட நஷ்டங்களும், குற்றம் குறைகளும், பல வித தொந்தரவுகளும் அறவே ஒழிந்து எப்போதும் இன்பமும் சுகமுமே மலிந்திருக்குமென்று எண்ணுவதும் மூடத்தனம்
அதற்கு விரோதமாக, தாறுமாறாய் ஜீவிக்கும் குடும்பத்தைவிட தெய்வ பயத்துடன் காலங்கழிக்கும் குடும்பத்தில் அதிகத் தொல்லைகள் ஏற்படும்படியாக கடவுள் அனுமதிக் கிறார். கடவுள் தம்மை நேசிப்பவர்களுக்குச் சகலமும் நன்மையாகவே அருள்கிறார் என்று நம்பிக்கை கொண்டு, ஆண்டவ ருடைய சித்தத்தக்கு அமைந்து நடப்பதிலும் அரிய புண்ணியம் வேறொன்றுமில்லை என்று உணர்ந்து, அன்றன்று நாம் சுமக்க நேரிடும் சிலுவை சிறிதோ, பெரிதோ, வியாதியோ, மரணமோ எதுவானாலும் அவற்றைப் பொறுமையுடன் சகித்து “ஆண்டவர் செய்த நாள் இதுவே, இதிலே நாம் களிகூர்ந்து அகமகிழ்வோமாக” (சங். 117:24) என்று அடிக்கடி நமக்குள் சொல்லி, இன்பத்திலும், துன்பத்திலும் ஒரே சீராய் மனச் சமாதானம் உடையவராய் இருப்பின், சிலுவை இராஜாவான கிறீஸ்து நம்மை அளவற்ற விதமாய் நேசித்து ஆசீர்வதிப்பார் என்பதற்கும் சந்தேகமுண்டோ ?
இவ்வாறாக சொர்ண இராஜாவானவர் ஜோதியுடன் எழுந்தருளியிருக்கும் குடும்பத்தில் மற்றெந்த கத்தோலிக்கர் இல்லத்தில் இருப்பதைவிட கிறீஸ்து இராஜாவுக்கு இராஜ கரமும், சேவையும் விசேஷமாயிருக்கும் என்று எளிதில் புலப் படுகிறதல்லவா? சுந்தர இராஜாவான கிறீஸ்து வீற்றிருக்கும் சிம்மாசனமாகிய சிறுபீடத்துக்குமுன் போக வர இருக்கும் போது, பெற்றோர் தங்கள் மனநிலைக்கும், அவசரத்துக்கும் சமயத்துக்கும், அந்தஸ்துக்கும் தக்கவாறு பின்வரும் விண்ணப்பங்களின் பொருள் அடங்கிய சிறு மனவல்யச் செபங்களைச் சொல்லிக்கொள்வதால் பெரிதும் ஆறுதல் அடைவார்கள்
"ஆண்டவரே, எங்கள் குடும்பத்தின் ஆனந்த இராஜாவே, நீர் எப்போதும் எங்களுடன் தங்கியிரும். காலை யிலும், மாலையிலும் எங்களை ஆசீர்வதியும். எங்கள் சொந்தத் தந்தையாகவும், சகோதரராகவும், ஒப்பற்ற ஆலோசனைக்காரராகவும், எங்கள் தரும இராஜாவாகவும் எங்கள் மத்தியிலிரும் எங்கள் சகல குடும்பக் காரியங்களிலும் நீரே தலைமை வகித்து எல்லாவற்றையும் விமரிசையாக நடத்தும்.
உம்மையன்றி எங்கள் குடும்பத்தில் ஒன்றும் நடக்க விடாதேயும். எங்கள் பிள்ளைகளை நல்வழியில் நடத்தி, அவர்களுக்கு நாங்கள் மேல்வரிச் சட்டமாயிருக்க, கிருபை இராஜாவே, உமது கிருபையைப் பொழியும். அவர்களுக்கு நல்ல குணமும் படிப்பும், சீவிய அந்தஸ்தைத் தெரிந்துகொள்வதில் விவேகமும் அளித்தருளும்.
உம்முடைய திராட்சைத் தோட்டத்தில் திடமான பணிவிடைகள் செய்ய இந்த ஏழைக் குடும்பத்திலிருந்து உமது மனதின் பிரகாரம் குமாரரையோ குமாரத்திகளையோ பிரித்தெடுத்துக்கொள்ள, காருண்ய இராஜாவே கருணை புரியும்.
கிறீஸ்தவக் குடும்பங்களிலிருந்து உமது அறுப்புக்கு வேலையாட்கள் அதிகமதிகமாய் அனுப்பியருளும்படி அறுப்புக்கு எஜமானராகிய உம்மைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம். இன்ப காலத்தில் எங்கள் மத்தியிலிரும். துன்ப காலத்தில் துணையாயிரும், சோதனை காலத்தில் ஆதரவாயிரும். எங்கள் மனம், வாக்கு, செயல்கள் யாவும் உம்முடைய தோத்திரத்துக்காக மட்டுமே இருக்கும்படி செய்யும்.
உம்மோடு நாங்கள் ஒவ்வொருவரும் உமது பிதாவின் சமுகத்தில் வந்து பாக்கிய இராஜாவாகிய உம்முடன் களிகூருமட்டும், மழை போல் அருள் பெய்யும் சேசு என்னும் அரசே, நீர் எங்களுடன் இரும். எங்களுடன் என்றென்றைக்கும் இரும் கிறீஸ்துவைத் தங்கள் குடும்ப இராஜாவாக ஸ்தாபித்து இவ்வாறு மகிமைப்படுத்துகிறவர்கள் ஒருநாளில் ஒருமுறையோ பலமுறையோ தங்கள் நினைவு, வாக்கு, செயல்களையெல்லாம்
அத்தினத்தில் உலகம் முழுவதும் நடக்கும் திவ்விய பலிபூசைகளோடு ஒன்றித்துக் கடவுள் சமுகத்தில் ஒப்புக்கொடுக்கும் வழக்கத்தையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
அவ்வாறு செய்தால், அவை சாதாரண மனிதருடைய நினைவு, வாக்கு செயல்களைப் போலில்லாமல் ஞான இரசவாசத்தால் முற்றிலும் மாற்றமடைந்து, கிறீஸ்து இராஜா திருச்சிலுவையில் தம்மைப் பிதாவுக்கு ஒப்புக்கொடுத்த ஒப்பற்ற திரு இரத்தப் பலியின் மகிமையுடன் விளங்கி, அர்ச். தமதிரித்துவத்தால் அன்புடன் அங்கீகரிக்கப்படும். அவற்றால் பாவ மன்னிப்பும் அவர்கள் மன்றாட்டுக்கள் நிறைவேற்றமும் பெற வழி உண்டாகும். அவர்கள் இருதயம் பூரிக்கும். அவர்களுக்கு கிடைக்கவிருக்கும் மோட்சானந்தம் அளவற்ற விதமாய்ப் பெருகிக்கொண்டே போகும். குடும்ப இராஜாவாக வீற்றிருக்கும் கிறீஸ்துவின் இராச்சியமும் பரவி, அவருடைய மகிமையும் பெருகும்.
தொடரும்...