தேவமாதா யார்? பகுதி-1 : தேவ மாதாவின் கடிதம்!

மாதாவின் உதவி அவசியம் தேவை என்பதை கண்டுபிடித்தவர்களில் புனித சின்னப்பரும் (பவுல்) ஒருவர்..  மேலும் தேவமாதாவை திருச்சபையின் வளர்ச்சிக்காக எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் அறிந்தவர்.

ஒரு நாட்டு(இடத்து) மக்களை யாரிடம் ஒப்படைத்தால் அங்கு தன்னுடைய நற்செய்திப்பணி மிகப்பெரிய வெற்றி அடையும் என்பதை அறிந்து விவேகத்தோடு செயல்பட்ட ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்போம்..

புனித சின்னப்பருக்கு மாதா எழுதிய கடிதம்..

புனித சின்னப்பர் ஆண்டவர் இயேசுவின் மீதும், பரிசுத்த தேவ மாதாவின் மீதும் மிகுந்த அன்பும்,பக்தியும் வைத்திருந்தார்..

(இந்த நிகழ்வும் தேவ மாதா உயிரோடு வாழ்ந்துகொண்டிருந்த போது நடந்தது..)

கி.பி 42 – ஆண்டில் புனித சின்னப்பர் ( புனித பவுல்) பாலஸ்தீனா நகரிலிருந்து மெசினா என்ற நகருக்கு பயணமாகிறார். அங்கு கிறிஸ்துவை அறிவிக்கிறார்.. அங்குள்ள அனேக மக்களை கிறிஸ்துவுக்குள் கொண்டு வர ஆசைப்படுகின்றார்.. அந்த மெசினா மக்களை மாதாவுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும் என்று திட்டமிடுகின்றார்.. எனவே மெசினி என்ற ஒருவரை மாதா வாழ்ந்து வந்த இடத்திற்கு அனுப்பி வைக்கின்றார். மாதா அவரை வரவேற்று எபிரேய மொழியில் புனித சின்னப்பருக்கு கடிதம் எழுதி கொடுத்து அனுப்புகிறார்கள். அந்த கடிதத்தை அதே ஆண்டு (கி.பி42-ம் ஆண்டு) செப்டம்பர் மாதம் 8-ம் தேதி மாதாவின் பிறந்த நாளில் அந்த கடிதத்தைப் பெற்றுக்கொள்கிறார்.. ( இந்த ஆண்டுதான் தேவமாதா ஸ்பெயின் தேசத்தில் புனித சந்தியாகப்பருக்கு கொடுத்ததும்)

அந்த கடிதத்தில் மாதா இப்படி எழுதுகிறார்,

“ மிகவும் தாழ்ச்சியுள்ள அடியவளும், கடவுளின் ஊழியனும் இன்னும் சிலுவை இயேசுவின் தாயுமான நான் புனித பவுலுக்கும், மெசினா மக்களுக்கும் எழுதுகின்ற மடல்..

பிதாவின் ஆசீர் உங்கள் அனைவரோடும் என்றும் தங்குவதாக.. என் அன்பு மகன் பவுலினுடைய கடினமான உழைப்பாலும், நீங்கள் இயேசுவின் மேல் கொண்டுள்ள ஆழமான அன்பினாலும் நம்பிக்கையாலும் நீங்கள் எல்லோருமே ஒரே ஆண்டவருக்கும், ஒரே திருச்சபைக்கும் நீங்கள் பிரமாணிக்கம் உள்ளவர்களாக வாழ வேண்டும். எனவே நீங்கள் என் மகன் இயேசு தேர்ந்தெடுத்த புனித பவுலை நீங்கள் பின்பற்ற வேண்டும் அவர் வார்த்தைகளுக்கு செவி சாய்க்க வேண்டும். உங்களையும், இந்த மெசினா நகரத்தையும் ஆசீர்வதிக்கின்றேன். எந்நாளும் இந்த நகரத்தை நான் பாதுகாப்பேன்”

இதைப் படித்தவுடன் புனித பவுல் மென்மேலும் தன் விசுவாசத்தில் உறுதி கொண்டவராக வீறு நடை போடுகின்றார்..

ஆண்டவர் இயேசுவுக்காக எதையும் செய்யவும் ஏன், தன் உயிரையும் கொடுக்க தயாராகின்றார்..

தேவமாதா தன் ஆன்மாவோடும், உடலோடும் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டபின்பு எபேசு நகரில் புனித சின்னப்பருக்கு ஆற்புத காட்சி கொடுக்கின்றார்.. அந்த காட்சியில் மகிழ்ந்து எழுதியதுதான் புனித சின்னப்பர் அன்பின் சிறப்பைக் குறித்து எழுதிய 1 கொரிந்தியர் 13- ம் அதிகாரம்..

நன்றி : அருட்தந்தை, புனித வேளாங்கண்ணி பசிலிக்கா.

மாதாவின் கடிதத்தில் மாதாவின் வார்த்தைகளைக் கொஞ்சம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.. மாதா தன்னை கடவுளின் ஊழியன் என்று குறிப்பிடுகின்றார்.. இது தேவமாதா கடவுளின் திட்டத்திற்கு தன்னைக் கையளித்தது மட்டுமல்ல..ஆண்டவரின் உயிர்ப்பிற்குப் பின் திருச்சபைக்கு அவர்  உழைத்த உழைப்பையும் காட்டுகிறது. அப்போஸ்தலர்களை உற்சாகப்படுத்தி அவர்களைத் திடப்படுத்தி அவர்கள் நற்செய்திப்பணியை சிறப்பாக செய்ய உறுதுணையாக இருக்கிறார்.. திருச்சபையை பாதுகாக்கின்றார்.. அதை அவர் வளர்க்கின்றார்..

அனைத்து அப்போஸ்தலர்களும் மாதா உயிரோடு இருக்கும்போதே அவர் மீது பக்தி வைத்து அவரிடம் ஜெபித்ததையும்.. அவர் உதவியை நாடியதையும் பார்க்க முடிகிறது.. 

ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பிற்கு பின் மேலும் ஆண்டவரின் இந்த உலக வயதான கிட்டத்தட்ட 33 ஆண்டுகள் மாதா உயிரோடு இருந்து திருச்சபையை வளர்த்திருக்கிறார்..

மாதாவின் உடனிருப்புதான் அப்போஸ்தலர்களை உலகெங்கும் சென்று நற்செய்தி அறிவிக்கத் தூண்டியது.. இயேசுவுக்காய் வேதசாட்சியாக மரிக்கத் தூண்டியது..

மாதா அந்த கடிதத்தில் குறிப்பிட்ட இந்த வரிகள் மெசினா மக்களுக்கு மட்டுமல்ல.. நமக்கும்தான்,

“நீங்கள் எல்லோருமே ஒரே ஆண்டவருக்கும், ஒரே திருச்சபைக்கும் நீங்கள் பிரமாணிக்கம் உள்ளவர்களாக வாழ வேண்டும்”.

மாதா சொல்லியபடி வாழ்வோமா?

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !