தேவமாதா யார்? பகுதி-2 : மாதா எப்போதிருந்து இருக்கிறார்கள்..?

“உன்னத கடவுள் வாயினின்று நான் புறப்பட்டேன். நானே படைப்புகளுக்கெல்லாம் முன்பே படைக்கப்பட்டேன்.” – சீராக் 24 : 5

“பூலோகம் தோன்றுமுன்னே.. ஓ பூரண தாயே !.. 

மேலோனின் உள்ளம்தன்னில் நீ வீற்றிருந்தாயே “

பைபிள் படிக்காமலே நம் முன்னோர்கள் எவ்வளவு பெரிய மறை உண்மையை எளிய அழகான பாடலாக பாடியிருக்கிறார்கள்..

மாதா எப்போது படைக்கப்பட்டார்கள் ?

அப்போது மாதா என்ன வேலை செய்துகொண்டிருந்தார்கள்?

“தொடக்கத்திலும் உலகத்திற்கு முன்னும் நான் படைக்கப்பட்டேன்; எக்காலமும் இருப்பேன்; புனித உறைவிடத்தில் அவர்முன் பணி செய்தேன்.- சீராக் 24 : 14

மாதா யார் என்பதை ஒருவர் கண்டுபிடித்தால் இயேசு நாதர் சுவாமி யார் என்பதையும் அவர் கண்டு பிடித்துவிடுவார்..

அகில உலகத்தையும் படைத்தவர் திருத்தாயின் வயிற்றில் 10 மாதங்கள் குழந்தையாக தங்கினார்.. 

அவரைத் தன் திருவயிற்றில்.. அதாவது உலகமே கொள்ளாதவரை தன் வயிற்றில் தாங்கியவர் எவ்வளவு அதி உன்னத.. பரிசுத்தராக இருக்க வேண்டும்..

கடவுள் தனக்காக உருவாக்கிய ஒரு தாயை இந்த உலகின் தலை சிறந்த படைப்பாகத்தானே படைத்திருக்க வேண்டும்.. அதுவும் எவ்வளவு அழகாக படைத்திருக்க வேண்டும்..

படைத்தவர் ஒரு படைப்பை உருவாக்கி அந்த படைப்பு இன்னொரு படைப்பாக கடவுளையே உருவாக்க வேண்டும் என்றால் கடவுளால் படைக்கப்பட்ட அந்த படைப்பு எத்துனை மாட்சிமையை தாங்கி அது படைக்கப்பட்டிருக்க வேண்டும்..

"என்னைப் படைத்தவர் என் கூடாரத்தில் இளைப்பாறினார்” சீராக் 24 : 12

ஞானம் நிறை கன்னிகையே  நாதனைத் தாங்கிய ஆலயமே..

இதை விட மாதாவுக்கு பெரிய சிறப்பு இல்லை..

கடவுளின் ஆலயமே.. தேவ தாயே ! மரியாயே நீர் வாழ்க !

அவ்வளவு பெரிய அந்தஸ்தில் இருக்கும் ஒரு கடவுளின் தாயை உன்னத பரிசுத்த தாயை நம் தாயாக நாம் கொண்டிருக்கிறோம் என்றால்.. உண்மையாக… நிச்சயமாக.. நாமும் பாக்கிய சாலிகளே.. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே..

அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நமக்கு பொறுப்பு இல்லாமல் இல்லை… வேலை இல்லாமல் இல்லை..

நாமும் தேவதாயை புகழ வேண்டும்… மற்றவரையும் அவரைப்புகழச் செய்ய வேண்டும்.. அப்போதுதான் தமத்திருத்துவம் மகிழும்..

எப்படி புகழ்வது?

மங்கள வார்த்தையை விட நம் மாதாவிற்கு பிடித்த வேறு மொழி உண்டோ? வேறு ஜெபம் உண்டோ? அல்லது வேறு வாழ்த்து உண்டோ..

ஆகையினால் கடவுளின் தாயை நம் தாயாக கொண்டிருக்கும் கத்தோலிக்கர்களாகிய நாம் தினமும் குறைந்தது 53 மணிகளாவது சொல்ல வேண்டாமா? குடும்பத்தில் உள்ளவர்கள் மாலை நேரத்தில் குடும்பமாக அமர்ந்து குடும்ம ஜெபமாலை ஜெபிக்க வேண்டாமா?

“ சூரியன் சாய… காரிருள் மெல்ல.. சூழ்ந்திட யாவும் சோர்ந்திடும் வேளை..

பாருலகெங்கும் நின்றெழுந்தோங்கும் பண்புயர் கீதம் வாழ்க மரியே “

அருள் நிறைந்த மரியாயே வாழ்க !

நம் நேசப் பிதா வாழ்த்தப்பெறுவாராக !

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !