சேசுவின் திருஇருதய அரசாட்சி பாகம் - 18

தங்கள் மக்கள் யாவருக்குமே தேவ அழைப்பு என்னும் அரிய வரம் ஆண்டவர் அருள வேண்டுமென்று நாடுகளில் எத்தனையோ கத்தோலிக்கக் குடும்பத்தார் மன்றாடி வந்திருக்கிறார்கள் என்றும், அவர்களுடைய தாழ்மையான பிரார்த்தனை எவ்வாறு பலித்திருக்கிறதென்றும் சரித்திரம் மூலமாய் நாமறிவோம். அவ்வாறே நமது நாட்டில் அநேக கத்தோலிக்கக் குடும்பங்களில் அவ்வரிய வரம் கடவுள் அருள வேண்டுமென்று நாமும் தாழ்மையாய் மன்றாடினால் கேளுங்கள், கொடுக்கப்படும்" என்றருளிச் செய்த அருள் இராஜா நமக்கு இரங்காமல் போவாரோ 

இவ்வாறு அநேக நல்ல குடும்பங்களில் இருந்து குருக்களும், கன்னியர்களும் உண்டாக வேண்டுமென்று விரத்தர்களின் இராஜாவான கிறீஸ்துவைக் கெஞ்சிக் கேட்பது சத்திய வேதம் பரவுவதற்கான நமக்குள்ள ஊக்கத்தையும், பிறர் ஈடேற்றத்தின் மேலுள்ள ஆவலையும், சுதேச அபிமானத்தின் அளவையும் காட்டும் அடையாளமாகும். 

ஆனால், “நீங்கள் என்னைத் தெரிந்து கொள்ளவில்லை, நானே உங்களைத் தெரிந்து கொண்டேன்” (அரு. 15:16) என்று சொல்லப்பட்டிருப்பது போல, ஒரு குடும்பத்தில் தேவ அழைத்தல் என்னும் வரம் ஒரு பிள்ளைக்கும் கிட்டாவிடினும், கிறீஸ்து இராஜ்யம் பரப்புதல் என்னும் முக்கிய அலுவலில் அக்குடும்பத்தார் கவலையின்றி இருக்க இயலாது. 

குருமடம் அல்லது கன்னியர் மடங்களில் இந்த அந்தஸ்துக்காக ஆயத்தம் செய்து கல்வி பயிலும் வாலிபருக்குப் பண உதவி செய்வதாலும், வேதப் பிரச்சார வேலையில் ஈடுபட்டு உழைக்கும் ஏழைப் பங்கு சுவாமிமாருக்கு பண உதவி செய்வதாலும், முக்கியமாய் அவர்களுக்காக இருதய இராஜாவிடம் தினமும் வேண்டி கொள்வதாலும் நல்ல கத்தோலிக்க குடும்பத்தின் முக்கியமானதோர் கடமை நிறைவேறி, இல்லத்தில் எழுந்தருளியிருக்கும் கிறீஸ்து இராஜாவின் மகிமை அதிகரிக்க வழியாகும் 

கிறீஸ்துவைக் குடும்ப இராஜாவாக இல்லங்களில் பகிரங்கமாக ஸ்தாபிப்பதன் முக்கிய நோக்கம் அவருடைய திரு இருதயத்துக்கு மனிதர் வருத்துவிக்கும் நிந்தைகளுக்குப் பரிகாரம் செய்வதே என்று கூறினோம். அந்த விசேஷ கருத்துக்காக மேற்படி இல்லங்களில் கூடுமான வரையில் இரவு ஜெபமாலையை பக்தியுடன் குடும்பத்தார் நடத்துவார்களேயானால் நமது குடும்ப இருதய அரசரின் மனங்குளிர்ந்து அவர் அக்குடும்பத்தாரை அன்புடன் ஆசீர்வதிப்பார்

தொடரும்...