சேசுவின் திருஇருதய அரசாட்சி பாகம் - 17

பெற்றோர் தங்கள் பிள்ளைகள் சொந்த செலவுக்காக சொற்ப பணத்தை அவர்கள் கையில் கொடுத்து, அவர்கள் அச்சிறு தொகையிலிருந்து தங்களுக்கு அவசியமான சில்லரைப் பொருட்களை வாங்கிக் கொள்வதுடன், மீதமுள்ள பணத்தை திருவிழா நாட்களில் பங்குக் கோவிலுக்கு வரி கொடுக்கவும் பாலர் சபை, மாதா சபை, வின்சென்ட் தெ பவுல் சபை, இவை முதலிய தர்ம காரியங்களுக்குப் பெரியவர்களை அடிக்கடி தொந்தரவு செய்யாமல் தாங்களே இஷ்டப்பட்டு உதவி செய்யவோ, அல்லது வீட்டிற்கு வரும் பிச்சைக்காரர்களுக்குப் பிச்சை கொடுக்கவோ, இவ்விதமான ஆத்தும சரீர சம்பந்தமான சிறு செயல்களைச் சிறுவர் செய்யும்படியாக அவர்களுக்கு உற்சாகமளிப்பதைக் குடும்ப இராஜாவானவர் கண்டு மனம் மகிழ்வார் 

கத்தோலிக்கர் குடும்பத்தில் கல்வியே சிறந்த ஆபரணமாய்த் துலங்க வேண்டும். அவரவர் தமது அந்தஸ்துக்குத் தக்கபடி தங்கள் பிள்ளைகளுக்கு எவ்வளவு உயர்தரக் கல்வி கொடுக்கக் கூடுமோ, அவ்வளவு கொடுப்பது தாய் தந்தையர் கடமை. உயர்தரக் கல்வி கற்க வேண்டிய சாமர்த்தியம் பெண்களுக்கு இயற்கையிலேயே உண்டோ , அக்கல்வி அவர்களுக்குப் பிற்காலத்தில் எவ்வாறு உதவும், அதில் தேர்ச்சி அடையத் தக்க உழைப்பும், மனத்திடமும், சரீர சௌக்கியமும் உடையவர்களோ என்பதை ஆராய்ந்து, தக்க அனுபவமுள்ளவருடன் ஆலோசனை கேட்டு, அதன்படி பிள்ளைகளுக்குக் கல்விச் செல்வத்தைக் கொடுப்பது பெற்றோருக்கு பெருமையை வருவிக்கும், பிள்ளைகளுக்கும் பேருதவியாயிருக்கும். 

பிள்ளைகள் படிப்பு முடிந்து தங்கள் ஜீவிய அந்தஸ்தின் நிலைமையைத் தெரிந்துகொள்வதில் கத்தோலிக்கப் பெற்றோர் எவ்வளவு கவனம் எடுத்துக் கொண்டாலும் மிகையாகாது. ஒரு உத்தியோகத்தினால் எவ்வளவு செல்வமும், செல்வாக்கும் கிட்டுமென்பதை மாத்திரம் கருதாமல், அதை நிறைவேற்றத் தகுந்த தகுதியும் திறமையும் உண்டென்றும் ஆத்தும ஈடேற்றத்துக்கு சற்றேனும் இடைஞ்சல் அளிக்காத தொழில் என்றும் ஆராய்ந்து பார்த்துத் தெரிந்து கொள்வதில் பெற்றோர் பிள்ளைகளுக்குத் தக்க உதவியும் ஆலோசனையும் கொடுப்பது அவசியம். 

இவ்வாறு தக்கதோர் உத்தியோகத்தில் அமர்ந்தபின், தங்கள் பிள்ளைகளால் இனி உண்டாகப்போகும் கத்தோலிக்க இல்லம் இருதய ராஜாவுக்குப் பிரிய

மானதாகவும், மற்றவர்களுக்கு நன்மாதிரிகையானதாகவும் கணவன், மனைவிக்குப் பாக்கிய மானதாகவும் அமைய வேண்டுமென்கிற ஆவலுடன் சகலமும் சீர்தூக்கிப் பார்த்து மக்களின் மனதைச் சீராய்ச் சிறப்பித்தால், குடும்ப இராஜாவின் ஆசி பெற்று, சமாதானம் நிறைந்து, அப்புதிய குடும்பங்களும் இருதய இராஜாவுக்கு இன்ப சேவை புரியும் இல்லங்களாய் விளங்க வழியாகும் 

கடவுள் ஊழியத்துக்குத் தங்களைத் தத்தம் செய்யப் பிரியமுள்ள பிள்ளைகள் ஒரு கத்தோலிக்கக் குடும்பத்தில் இருப்பார்களாகில், பெற்றோர் அவர்களுக்குத் தம்மாலியன்ற உற்சாகமும் உதவியும் கொடுப்பதால், குடும்ப இராஜாவின் 

சேவையைச் செவ்வையாய் நடத்துகிறார்கள் என்று கூறலாம் 

தங்கள் பிள்ளைகளுக்குக் கிடைக்கவிருக்கும் பாக்கியத்திற்காக மனதாரக் கடவுளுக்கு நன்றி செலுத்தி, பிள்ளைகள் தெரிந்து கொண்ட அந்தஸ்தில் நிலையாயிருக்கும்படி அப்போஸ்தலர் இராஜாவை அனுதினமும் பிரார்த்திப்பதே தாய் தந்தையரின் கடமை. ஏனெனில், “இஸ்ராயேலின் தேவனானவர் உங்கள் முழுச் சபையிலிருந்து பிரித்தெடுத்து, தம்முடைய வாசஸ்தலத்தில் பணிவிடைகளைச் செய்யவும், சபையாரின் முன் நிற்கும் அவர்கள் கர்த்தருக்குச் செய்ய வேண்டிய வேலைகளை நீங்கள் செய்யவும், உங்களைத் தம் அண்டையிலே சேர்த்து வைத்தது சொற்பமாயிற்றோ” (எண்.16:9) என்று மோயீசன் கூறியதை அவர்கள் ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும்

தொடரும்...