சேசுவின் திருஇருதய அரசாட்சி பாகம் - 16

கிறீஸ்து குடும்ப இராஜாவாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் இல்லத்தில் சேசுவின் திரு இருதய திருச்சுரூபத்திற்கு முன் காலை மாலை குடும்பம் முழுவதும் கூடி ஜெபிப்பது திரு இருதயத்தின் வரங்களை ஏராளமாய் அடையும் எளிதான வழியாகும். காலையில் பல அசந்தர்ப்பங்களாலும், தந்தையோ, பெரிய பிள்ளைகளோ அலுவலுக்காக சீக்கிரம் வெளியே செல்ல வேண்டியிருப்பதாலும், பொது ஜெபம் குடும்பத்தில் செய்யக் கூடாமற் போனாலும் போகும். ஆனால் குருவானவர் உள்ள ஊர்களில் வசிக்கும் குடும்பங்களில் குடும்பத்துக்கு ஒருவராகிலும் தினம் திவ்விய பலிபூசை காணப் போகும் அருமையான வழக்கம் ஏற்படுத்திக் கொண்டால், குடும்ப இராஜாவின் ஆசீர்வாதம் தவறாமல் அக்குடும்பத்தாருக்குக் கிட்டும் 

ஆனால் தத்தம் வேலை முடிந்து சாயங்காலம் எல்லோரும் வீடு வந்து சேர்ந்தபின் மாலை ஜெபம் பொதுவில் ஜெபிக்க வசதியில்லை, நேரமில்லை என்று சாக்குப்போக்குச் சொல்ல சற்றும் இடமில்லை. எந்தக் கிறீஸ்தவக் குடும்பத்திலும் நித்திரைக்குப் போகுமுன் மாலை பொது ஜெபமாலை சற்று நேரம் செய்ய அவகாசம் ஏற்படாமல் போகாது. 

நீண்ட நெடுஞ் செபமாலை அவசியமில்லை. பசியோடிருக்கும் பிள்ளைகளைப் பட்டினியாய்த் தூங்க விட்டு, பல ஜெபமாலைகளைப் படபடப்புடன் ஒருவன் உளற, மற்றவர்கள் தூங்கி விழுந்து, கால் மறத்துப் போக உட்கார்ந்திருந்து, நாமும் ஜெபமாலை செய்து  விட்டோமென்று ஏமாந்து போவது சரியல்ல. 

ஒரு ஜெபமாலை மேலும் தக்க முன் ஆயத்தத்தோடும், தகுந்த பக்தி வணக்கத் தோடும், தந்தையோ, தாயோ தெளிவாய், திருத்தமாய்ச் சொல்ல, பிள்ளைகளும் பராக்கில்லாமல் தங்கள் முறையான பதிலுரைக்க, அந்த நாளுக்குக் குறிக்கப்பட்ட அர்ச்சியசிஷ்டவரின் சுருக்கமான சரித்திரமோ அல்லது சுவிசேஷம், கிறிஸ்துநாதர் அநுசாரத்திலிருந்து சில வசனங்களையோ திருத்தமாக வாசித்து, இருதய இராஜாவுக்குத் தோத்திரமாக இன்பமான பாட்டொன்றும் பாடி, ஏறக்குறைய ஒரு மணி நேரத்தில் மாலை ஜெபமாலையை வெகு மங்களமாக முடிப்பது குடும்பத்துக்கு அழகு மனதுக்கு அமைதியுமளிக்கும். 

பொது ஜெபமாலை முடிந்த பின் பிள்ளைகள் தங்கள் பெற்றோரை அணுகி, “சர்வேசுரனுக்கு தோத்திரம்” அல்லது “சேசு ராஜாவுக்குத் தோத்திரம்” என்னும் மங்களம் கூறி, அவர்களது ஆசீர் பெற்று, உறங்கப் போவர். பெரியவர்களோ தங்கள் வேலைக்கும் சமயத்துக்கும் தக்கபடி தங்கள் தனி ஜெபமாலை ஜெபித்து, ஆத்தும சோதனையும் தினம் தவறாமல் செய்து கொள்வதே முறையானது

உணவுக்கு முன்னும் பின்னும் முறையே கடவுளின் ஆசீர் கேட்பதும் நன்றி செலுத்துவதுமான நற்பழக்கம் கிறீஸ்து இராஜா வீற்றிருக்கும் வீட்டில் ஒருவரும் மறந்து போவது தகாது. தங்கள் நிலைமைக்குத் தக்கபடி ஏழைகளுக்கு உணவளித்தபின் தங்கள் பகல் போசனம் அருந்தும் அருமையான வழக்கம் சில கத்தோலிக்கக் குடும்பங்களில் அனுசரிக்கப்பட்டு வருவது தரித்திர இராஜாவான சேசுவின் திரு இருதயத்திற்கு எவ்வளவு சந்தோஷம் அளிக்குமென்று நாம் சொல்லவும் வேண்டுமோ ?

தொடரும்...