நாசரேத்தூரின் சிறு திருக்குடும்பத்தை நடத்தத் தகுதியுள்ள ஒருவரைக் கடவுள் தெரிந்தெடுத்தபோது, நீதிமானான அர்ச்.சூசையே அவருக்குப் பிரியமானவராயிருந்தார். ஒவ்வொரு கத்தோலிக்கக் குடும்பத் தலைவனும் இந்த நீதிமானுடைய பிரமாணிக்கம், தேவ சித்தத்துக்கு அமைதல், சரீர உழைப்பு, குடும்பப் பராமரிப்பில் உண்டாகும் கஷ்டங்களை சகித்தல் பரிசுத்ததனம் முதலிய புண்ணியங்களில் அவரைக் கண்டு பாவித்துத் தனது குடும்பத்தை நடத்தினால், குடும்ப இராஜாவின் மனம் களிகூர்ந்து, அவர் அவனையும், அவன் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார், அவனுக்கும் மகிமையுண்டாகும்
நீதிமானின் தலைமேல் ஆண்டவருடைய ஆசீர்வாதம் (பழ.10:6).
மேற்கூறிய நல்ல தாயும், நீதிமானான தகப்பனும் சேர்ந்து நடத்தும் இல்லறம் நாசரேத்தூரின் இல்லத்தில் விளங்கிய சமாதானத்தோடிருக்கும். ஏழைக் குடும்பமாயிருப்பினும் சரி, கணவன் மனைவி இருவரிடத்திலும் தெய்வ பயம் பிறர்சிநேகம், அந்நியோன்னிய அன்பு நிறைந்திருந்தால், அவர்களால் உற்பத்தியாகும் கத்தோலிக்கக் குடும்பம் மிகவும் ஒழுங்குள்ளதாகவே இருக்கும்
அப்படிப்பட்ட குடும்பத்தில் தாய் தந்தையர் தம் மக்களுக்கு இடறல் வருத்துவிக்காமலிருப்பதுமன்றி, எவ்விதத்திலும் நல்வழி காட்டி விசேஷமாய் தாயானவள் தானே தன் பிள்ளைகளுக்குச் சிறு ஜெபங்களும், சுவிசேஷ சரித்திரமும் ஞானோபதேசமும், தனது இனிய மொழிகளால் சிறுகச் சிறுகச் சொல்லி சிறுவர் ஆனந்தமடையச் செய்வாள்
கிறீஸ்துவானவர் குடும்ப இராஜாவாக வீற்றிருக்கும் கத்தோலிக்கர் இல்லங்களில் வாசக முறை மிகவும் விசேஷமான விஷயமாகக் கருதப்படும். நல்ல புத்தகங்களையும், பத்திரிகை களையும் வாசிப்பதால் உண்டாகும் பலனும், பயிற்சியும் கெட்ட புத்தகங்களாலும், பத்திரிகைகளாலும் விளையும் வினையும் இங்கு எடுத்துக் கூறவேண்டிய அவசியமில்லை
சுவிசேஷத்தையும், அர்ச்சியசிஷ்டவர்கள் சரித்திரங்களையும் அடிக்கடி கவனித்து வாசித்ததால் எத்தனையோ பேர் நல்வழியில் திரும்பி உயர் பதவிகளை அடைந்திருக்கிறார்கள்
விஷத்துக்கொப்பான வேறு புத்தகங்களைக் கையாண்டவர்கள் கரையேறினதைக் கண்டவரில்லை. ஆகையால் கெட்ட புத்தகங்கள், பத்திரிகைகள், கத்தோலிக்கர் இல்லங்களில் நுழையாதபடி பார்த்துக்கொள்வது நமது முக்கிய கடமை
நல்ல புத்தகங்களையும், கத்தோலிக்கப் பத்திரிகைகளையும் உங்களால் கூடியமட்டும் வாங்கி வாசிப்பதும், மற்றவர்களுக்கு வாசிக்கக் கொடுப்பதும் குடும்ப இராஜாவாய் வீற்றிருக்கும் கிறீஸ்து இராஜாவின் இருதயத்துக்குப் பிரியமானதோர் அப்போஸ்தலத்துவமென்று சொல்லாமலே விளங்கும்
தொடரும்...