சேசுவின் திருஇருதய அரசாட்சி பாகம் - 14

திரு இருதய இராஜாவை நம் இல்லங்களில் பகிரங்கமாக ஸ்தாபித்து இவரே எங்கள் குடும்ப இராஜா என்று சொல்வது மாத்திரம் போதாது. அப்படி வெறும் வார்த்தைகளால் நாம் அன்பின் இராஜாவைப் புகழ்ந்தோமென்றால், “இந்த ஜனங்கள் தங்கள் உதடுகளால் என்னை சங்கிக்கிறார்கள். அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாயிருக்கிறது” (மாற். 7:6) என்று நமதாண்டவர் முறையிடுவார். சிவப்புப் போர்வை உடுத்தி முள்முடி சூட்டி, மூங்கில் தடியைக் கையில் கொடுத்து, “யூதர்களின் இராஜாவே, வாழ்க” என்று பரிகாசமாக முன்னாளில் யூதர் கூறியதிலும் இது அவசங்கையாக முடியுமென்று அஞ்ச வேண்டும் 

கிறீஸ்துவைக் குடும்ப இராஜாவாக ஸ்தாபித்துக் கொண்ட கத்தோலிக்கக் குடும்பத்தில் முறையான ஜீவியம் மற்ற குடும்பங்களின் ஜீவியத்துக்கு முற்றும் மேற்பட்டதாயிருப்பது அவசியம். கிறீஸ்து குடும்ப இராஜாவாகக் கொலுவிருந்து விளங்கும் இல்லத்தில் நடுநாயகமாயிருப்பவள் நல்ல தாயானவளே. தாயின்றி வீடேது? வீட்டில் திரவியமேது ? இல்லத்தில் இன்பமேது? ஒழுங்கேது 

தாயின் இருதயம் சிநேகமும், இரக்கமும், உருக்கமும் நிறைந்தது. அவள் அலுவலோ தன் குடும்பத்தின் நன்மைக்காகத் தைரியத்துடன் தன்னைப் பரித்தியாகம் செய்து, சகலமும் பொறுமையுடன் சகித்துக் கொள்வதே. அவள் மிதமாய்ச் செலவு செய்து சேமித்து வைப்பாள். பிள்ளைகளைப் போற்றி நல்வழியில் வளர்ப்பாள், விருந்தினரை உபசரிப்பாள், ஊழியக்காரரை சாந்தமாய் நடத்தி, ஏழைகளுக்கு அன்னமிடும் சமயோசிதமாய்ப் பேசி கணவனுக்குப் பிரியப்பட நடந்து கொள்வாள். 

சுருங்கச் சொன்னால், குடும்ப இராஜாவாக வீற்றிருக்கும் கிறீஸ்து இராஜாவுக்கு சகல விதத்திலும் பிரியமானவளாய் நடந்து, தனது இல்லம் மனிதர் முன்னும் விசேஷமாய்க் கடவுள் முன்னும் கீர்த்தி பெறச் செய்வாள். இப்பேர்ப் பட்ட தாயே "வல்லமையுள்ள ஸ்திரீ(தேவமாதா) என்று பழமொழி ஆகமத்தில் கூறிப் புகழப்பட்டிருக்கிறார்கள் 

தமது இன்பத்திலும், துன்பத்திலும், தமது மகனுக்கு காட்டிய அன்பிலும், பராமரிப்பிலும், தமது விரத்த பத்தாவான அர்ச்.சூசையப்பருக்குச் செய்த பணிவிடையிலும், காட்டிய கீழ்ப்படிதலிலும், செலுத்திய வணக்கத்திலும், மாமரியே சகல தாய்மார்களுக்கும் மாதிரியானவர்கள். குடும்ப இராஜாவாக கிறீஸ்து எழுந்தருளியிருக்கும் கத்தோலிக்க இல்லங்களின் தாய்மாருக்கு இவர்களே சகலத்திலும் மேல்வரிச்சட்டமா இருக்கிறார்கள்.

இந்தக் கன்னித் தாயாரைப் பின்சென்று தங்கள் குடும்பத்தைச் சீருடன் நடத்தும் தாயை அவள் கணவனும் புகழ்ந்து கொள்வான். அவளுடைய புத்திரரும் அவளை மகா பாக்கியவதி என்று வாழ்த்துவார்கள்.

தாய் உத்தமியாயிருப்பது போல குடும்ப இராஜாவாக கிறீஸ்து எழுந்தருளியிருக்கும் இல்லத்தைச் சீர்பெறச் செய்ய வேண்டிய கடமையுள்ள தகப்பனும் அதற்குத் தகுந்தவன் என விளங்க வேண்டும். மனிதனுக்குள்ள பற்பல மகிமைப் பட்டங்கள் எல்லாவற்றிலும் நீதியுள்ள தகப்பன் என்னும் பெயரே வெகு விசேஷமானது.

தொடரும்...