பாத்திமா காட்சிகள் பகுதி- 12

வானவனின் முதல் வருகை..

1916-ம் ஆண்டு ஏப்ரல் மாதம். முதல் உலக மகா யுத்தம் (1914-1918) கடுமையாக நடந்து கொண்டிருந்தது. போர்த்துக்கல் நாடு யுத்தத்தில் இறங்க வேகமாக ஆயத்தம் செய்து கொண்டிருந்தது. சில தினங்களுக்கு முன்புதான் பாப்பரசர் 15-ம் ஆசீர்வாதப்பர் சமாதானம் கோரி உருக்கமான வேண்டுகோள் ஒன்று விடுத்துள்ளார். பாப்பரசரின் குரல் கேட்கப்படவில்லை. போர்த்துக்கல் போரில் இறங்கியது.

அரசியல் நிலை இவ்வளவு கடுமையாயிருந்தாலும், அல்யுஸ்திரல் கிராமம் அமைதியாகவே காணப்பட்டது. விதை விதைக்கும் காலம் அது. வயல்களில் விதைகள் முளைத்து நிலத்தின் நிறத்தைப் பசுமையாக்கின. லூசியா, பிரான்சிஸ், ஜஸிந்தா மூவரும் மலைப்பாங்கான அப்பகுதியில் தங்கள் வழக்கப்படி ஆடுகளை மேய்த்தும், ஆடிப்பாடியும் மகிழ்ந்திருந்தனர். லூசியா வயது 9, பிரான்சிஸ் வயது 8, ஜஸிந்தா வயது 6.

ஒரு நாள் அல்யுஸ்திரலுக்குச் சற்று மேற்கே கபேசாவுக்கு அருகில் கௌஸா வெல்லா என்ற ஓரிடத்திற்கு ஆடுகளை ஓட்டிச் சென்றனர். ஆடுகள் புதிதாகத் துளிர்த்த புல்நுனிகளை மேய்ந்தன. குழந்தைகள் மூவரும் பற்பல விளையாட்டுக்களை விளையாடினர்.

திடீரென வானம் கறுத்து, கனத்த மழைக்கு ஆயத்தமாயிற்று. அதிலிருந்து பாதுகாப்புக்காக சிறுவர் மூவரும் கபேசா நோக்கி ஆடுகளை ஓட்டிச் சென்றனர். சில மரங்களுக்கடியில் அவற்றை நிறுத்தி விட்டு, வடக்கிலிருந்து தெற்கே தாழ்வாக உள்ள மலைச் சரிவில் சிறு குகை போலிருந்த இடத்தில் ஒதுங்கி நின்றார்கள் குழந்தைகள். சுமாரான மழை, பலத்த காற்று இவைகளுக்கு அந்தக் குகை போதிய பாதுகாப்பளிப்பக் கூடியது. அங்கு வந்து சேர்ந்த சற்று நேரத்தில் பகல் உணவை அருந்தினார்கள். வழக்கப்படி முழங்காலில் இருந்து ஜெபமாலை ஜெபித்தார்கள். பரலோக, அருள்நிறை மந்திரங்களை முழுவதும் சொன்னார்களா, அல்லது குறுகிய மந்திரங்களை என்பது லூசியாவுக்கு ஞாபகம் இல்லை. ஜெபமாலை முடியவும் மழைத் தூறல் நின்றது. சூரியன் ஒளியுடன் காணப்பட்டது. சிறுவர்கள் அங்கு நின்றபடியே கீழேயுள்ள பள்ளத்தாக்கில் கற்களை எறிந்து விளையாடத் தொடங்கினர்.

ஒரு சில நிமிடங்களுக்குள் திடீரென ஒரு பலத்த காற்று வீசியது. கீழ்த்திசையில் நின்ற பைன் மரங்களின் உச்சியில் காற்று மோதி வீசியது. அம்மரங்களின் உச்சிக் கிளைகள் இங்குமங்கும் ஆடின. கிளைகள் அசைந்த இரைச்சல் அதிகமாயிற்று. சிறுவர்கள் மூவரும் தங்கள் விளையாட்டை நிறுத்திவிட்டு என்னவென்று பார்த்தனர். அம்மரங்களுக்கு மேலே உயரமாய் ஒரு ஒளியைக் கண்டார்கள் அவர்கள் ! அந்த ஒளித்திரள் கிழக்கிலிருந்து மேற்கு முகமாய் அவர்களை நோக்கி வந்தது? அந்த ஒளி அவர்கள் பார்த்த வேறு எந்த வெளிச்சம் போலவும் இல்லை. அதை உற்றுப் பார்த்த லூசியாவுக்கு, கடந்த ஆண்டில் அவள் கண்ட “ போர்வை போர்த்திய ஆள் “ உருவம் நினைவிற்கு வந்தது.

அவ்வுருவம் வெண்பனியிலும் அதிக வெண்மையாய் இருந்தது. மிக அருகில் வந்துவிட்டது. அந்தக் குகையின் பக்கத்தில் வந்து நின்றது. “ ஒளி ஊடுருவிப்பாயும் படிகம் போல் ஓர் இளைஞர் தோன்றியது போலிருந்தது “ என லூசியா கூறுகிறாள். அந்த இளைஞருக்கு 14 முதல் 16 வயதுக்குள் இருக்கும். மனித உருவம் தெளிவாகத் தெறிந்தது. விவரிக்க முடியா அழகுடன் அவ்விளைஞர் காணப்பட்டார். அவரைப் பார்த்து அப்படியே சிலை போல் நின்றனர் அம்மூவரும்.

இளைஞார் பேசினார். “ அஞ்சாதீர்கள். நான் சமாதானத் தூதன். என்னுடன் ஜெபியுங்கள் “ என்றார். இவற்றைச் சொன்னதும் அவ்வானவர் முழந்தாழிட்டு நெற்றி தரையில் பட பணிந்து:

“ என் தேவனே! உம்மை விசுவசிக்கிறேன், உம்மை ஆராதிக்கிறேன், உம்மை நம்புகிறேன், உம்மை நேசிக்கிறேன். உம்மை விசுவசியாதவர்க்காகவும், உம்மை ஆராதிக்காதவர்களுக்காகவும், உம்மை நம்பாதவர்களுக்காகவும், உம்மை நேசியாதவர்களுக்காகவும் மன்னிப்பு கேட்கிறேன் “ என்று கூறி ஜெபித்தார்.

பின் எழுந்து,

“ இவ்வாறு ஜெபியுங்கள். நீங்கள் மன்றாடும் குரலை சேசு மரியாயின் இருதயங்கள் செவியுற்று கேட்கின்றார்கள் “ என்று சொல்லி மறைந்து விட்டார். சூரிய ஒளியில் அவர் கரைந்து விட்டது போலிருந்தது.

சிறுவர் மூவரும் வெகு நேரம் வரையிலும் முழங்காலிலேயே நின்றனர். ஒரு தெய்வீக பரவசம் அவர்களை ஆட்கொண்டிருந்தது. “ அந்த உணர்வு எவ்வளவு ஆழ்ந்திருந்தது என்றால் நாங்கள் இருக்கிறோமா இல்லையா என்று கூட வெகு நேரம் வரையிலும் தெறியாதது போலாயிற்று “ என்று லூசியா உரைக்கிறாள்.

சம்மனசு சொல்லிய அந்த ஜெபத்தையே அவர்கள் திரும்ப திரும்ப ஜெபித்தார்கள். அதை மறந்து விடக் கூடாதென்பதற்காக அப்படி செய்யவில்லை. அவர்கள் மறக்க முடியாதபடி அவ்வார்த்தைகள் அவர்கள் மனதில் ஆழமாய்ப் பந்திந்துவிட்டன. அப்படி ஜெபிப்பதை விட வேறு என்னதான் செய்வது, என்ற நிலை.

நீண்ட நேரம் முகம் தரையில்பட செபித்துக் கொண்டிருந்த பிரான்சிஸ் :

“ இப்படி உங்களைப் போலிருக்க என்னால் முடியவில்லை. என் முதுகு வலிக்கிறது” என்று கூறி உட்கார்ந்து விட்டான். மூவருமே மலைப்படைந்து சோர்ந்திருந்தனர்.

பொழுதும் சாய்ந்து விட்டது. மெதுவாக மூவரும் எழுந்தனர். சிதறி நின்ற ஆடுகளைச் சேகரித்துக் கொண்டு அல்யுஸ்திரல் நோக்கி சென்றனர்.

வழியில் அவர்கள் பேசவில்லை. ஒரு வித மவுனம் அவர்களை ஆட்கொண்டிருந்தது. இதுபற்றி வீட்டிலும் அவர்கள் எதுவும் கூறவில்லை. 

“ பேசாமலிருப்பதே சரியானது. இந்நிகழ்ச்சியில் ஒருவித ஐக்கிய அந்நியோந்நியம் இருந்தது. அது பேசப்படக் கூடிய ஒன்றல்ல “ என்று கூறியுள்ளாள் லூசியா.

சமாதானத்தின் தூதன்! யார் இவர்? அதிதூதரான அர்ச். மிக்கேல் சம்மனசானவரை “ சமாதானத்தின் தூதன் “ என்று திருச்சபை அழைக்கின்றது. அவரே ஆதியில் பரலோகத்தில் ஆங்காரங்கொண்ட லூசிபரை வெளியேற்றி அமைதியை நிலை நாட்டியவர். உலக முடிவில் சாத்தானை நித்தியமாய் நரகில் தள்ளுபவரும் அவரே என திருவெளிப்பாட்டில் காண்கிறோம்..

இந்தத் தூதர் இந்த முறை மட்டுமல்ல, மீண்டும் இரண்டு முறைகள் இக்குழந்தைகளுக்கு காட்சி தந்தார்.

நன்றி : பாத்திமா காட்சிகள் நூல்.

சிந்தனை :  நமக்கெல்லாம் புனித மிக்கேல் சம்மனசானவரை அதிரடி ஆளாகத்தானே தெறியும்.. பேயுடன் சண்டை போடும், அதை காலில் போட்டு மிதித்துக்கொண்டு வாளோடு கம்பீரமாக காட்சிதரும் அதி தூதராகத்தானே தெறியும்.. இங்கே பாருங்கள் அமைதியோடும், சாந்தத்தோடும், மகிழ்ச்சியோடும் நம் பாத்திமா பிள்ளைகளுக்குக் காட்சி தருகிறார்.. இதிலிருந்து என்ன தெறிகிறது புனித மிக்கேல் தூதரின் அவதாரம் எதிரே இருக்கும் நபர்களைப் பொறுத்து மாறுபடுகின்றது.. புனித மிக்கேல் அதி தூதர் தேவ மாதாவுக்கு பாதுகாப்பு கொடுப்பது.. அவருக்கு பல பணிகளைச் செய்து கொடுத்துள்ளார்.. மேலும் புனித மகதலேன் மரியாள் ஆண்டவர் உயிர்ப்பிற்கு பின் நற்செய்தி அறிவிக்கும் பணிக்குப்பின் புனிதை தனியாக குகையில் ஜெப தவ பரிகார வாழ்க்கை வாழும் போதும் அவருக்கும் பாதுகாவலராக இருந்திருக்கிறார்..

நாமும் நம்முடை அவசர காலங்களில் ஆபத்து நேரங்களில் அவரை அழைத்தால் அதிவிரைவாக வந்து நம்மை ஆபத்துக்களில் இருந்து பாதுகாப்பார்…

நாம் தினமும் அவர் ஜெபத்தை மறவாது ஜெபிப்போம்.. “ அதி தூதரான அர்ச். மிக்கேலே எங்கள் போராட்டதில்…

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !