சேசுவின் திருஇருதய அரசாட்சி பாகம் - 11

கிறீஸ்து இராஜாவின் பிரதிநிதியான பாப்பரசரின் கட்டளையும், ஆசீர்வாதமும் பெற்று, சங். மத்தேயு குருவானவர் தனது அரிய அப்போஸ்தலத்துவத்தை ஆரம்பித்தார் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து, பெல்ஜியம், சுவிட்ஸர்லாந்து, ஹாலந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து முதலிய தேசங்களைத் தாமே சந்தித்து, அந்நாடுகளில் இருதய இராஜாவைக் குடும்ப இராஜாவாக ஸ்தாபிக்கும் வழக்கத்தைப் பரவச் செய்தார். 

வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, மெக்ஸிகோ, போலந்து முதலிய தேசங்களிலும், ஆசியா கண்டத்தில் அநேக நாடுகளில், நம் தாய்நாடாகிய இந்தியாவிலும், பர்மா, இலங்கை, மடகாஸ்கர் முதலிய இடங்களிலும் சுருங்கச் சொன்னால் உலகில் கத்தோலிக்க வேதம் நிலை கொண்டிருக்கும் ஒவ்வொரு கிராமத்திலும், பல குடும்பங்களிலும், மடங்களிலும், கல்விக் கழகங்களிலும் இருதய இராஜா பகிரங்கமாய் இராஜாவாக ஸ்தாபிக்கப்பட்டு, கொலுவிருக்கும் பாக்கியமான வழக்கம் வெகு சீக்கிரத்தில் பரவி விட்டது 

குடும்பங்களிலும் மற்ற ஸ்தாபனங்களிலும் இவ்வழக் கத்தால் உண்டான நன்மைகளை நன்கு உணர்ந்து, 15-ம் ஆசீர்வாதப்பரும், அவருக்குப்பின் திருச்சபையைத் திறமை, மகிமையுடன் ஆண்டு வந்த 11-ம் பத்திநாதரும், சங். மத்தேயு குருவானவருக்கு அன்பு நிறைந்த நிருபங்கள் எழுதி, அவரது அப்போஸ்தலத்துவத்தில் அவருக்கு மிகவும் உற்சாகம் கொடுத்தார்கள் 

அன்பின் இராஜாவாகிய சேசுவின் திரு இருதய படத்தையோ, சுரூபத்தையோ, குடும்ப இராஜாவாக கிறிஸ்தவர்கள் வீடுகளில் ஸ்தாபிப்பதின் நோக்கமென்ன என்று சங். மத்தேயு சுவாமியார் சொல்வதைக் கேட்போம் 

“கிறிஸ்தவ குடும்பங்களின் மேல் கிறிஸ்து இராஜாவின் திரு இருதய அரசாட்சியைப் பகிரங்கமாகவும், உத்தியோகக் கிரம முறையாயும் அங்கீகரித்துக்கொண்டு, அதன் அடையாளமாக திரு இருதயப் படத்தையோ, சுரூபத்தையோ வீட்டின் முக்கியமான ஸ்தலத்தில் யாவரும் காணும்படி நிறுவி, குடும்பம் முழுமையும் அவருக்குப் பாதகாணிக்கையாக வைத்து, அன்பின் இராஜாவுக்கு நன்றி கெட்ட மானிடர் செய்யும் நிந்தைகளுக்கு பரிகாரம் பண்ணுவதே இச்சடங்கின் நோக்கமும், கருத்துமாம் 

சகல வரப்பிரசாதங்களுக்கும் ஊற்றாகிய தயாள இராஜா, அர்ச். மர்கரீத் மரியம்மாளுக்குத் தமது திரு இருதயத்தைப் பலமுறை திறந்து காட்டி, மனிதர் தமக்குச் செய்ய வேண்டுமென்று அப்புண்ணியவதி மூலமாய் ஆசித்துக் கற்பித்த சகல காரியங்களும் முற்றும் கைகூடி வருவதற்கு இதைவிட மேன்மையான செயல் எதுவும் கிடையாது 

தம்மை அறவே மறந்து ஜீவிக்கும் இரகசியங்களையும், நாடுகளையும், ஜன சமுதாயங்களையும் திரும்பவும் கிறீஸ்து இராஜாவின் ஆளுகைக்கு உட்படுத்த வேண்டும் என்றால், இவைகளுக்கு அஸ்திவாரமான கிறீஸ்தவக் குடும்பங்களை முதன்முதலாக அவருக்கு ஒப்புக்கொடுத்து, அவருடைய இராஜத்துவத்தைக் குடும்பங்களில் வெளியரங்கமாய் அங்கீகரித்து, அந்த இராஜாவின் விசுவாசம் நிறைந்த பிரஜைகளாய் கிறீஸ்தவக் குடும்பத்தார் நடந்து வருவதே சரியான முறையாகும்

தொடரும்...