முற்காலத்தில் ஜான் செனிஸ்டஸ் கூட்டத்தார் திவ்விய நற்கருணை அடிக்கடி உட்கொள்வதற்கு மனிதன் எவனும் தகுதியற்றவனாகையால், அடிக்கடி திவ்விய நன்மை உட்கொள்வது தேவதுரோகமாகுமென்று குருட்டு நியாயங்களைக் கூறித் திரிந்தனர். அவ்வாறே இக்காலத்திலும் சிலர் திரு இருதயப் படத்தைப் பலரும் வரப்போக இருக்கும் பகிரங்கமான இடத்தில் வைப்பது அநாச்சாரமும், அவசங்கையுமாகும்
ஆகையால் அப்படி செய்வது தகாது, வேண்டுமென்றால் உள்ளறைகள் ஒன்றில் வைத்துக்கொள்ளலாமே என்று இருதய இராஜாவின் மகத்துவ மகிமையைக் காப்பாற்ற மனுப் பேசுறவர்கள் போல் நடித்து, அவரைக் குடும்ப இராஜாவாக பகிரங்கமாய் ஸ்தாபித்துக் கொண்டாடும் நல்ல வழக்கம் பரவாமல் தடை செய்யவும் பார்க்கிறார்கள். அன்பிற்கு அன்பு காட்ட பிரியமற்ற கசடர் மாத்திரமே இவ்வாறு செய்யத் துணிவாரேயொழிய வேறல்ல
பாலகரைப் அன்புடன் அணைத்து, ஆசீர்வதித்த அன்பின் இராஜா கிறீஸ்துவல்லவோ! பரிசேயருடனும், ஆயக்காரருடனும், பாவிகளுடனும் பந்தியமர்ந்து போசன பானம் பண்ணுகிறவராய் வந்த மனுமகன் கிறீஸ்து இராஜா அல்லவோ நமது இரட்சணியத்துக்காகத் தமது மகிமை சிம்மாசனமாகிய திருச்சிலுவையில் சகலரும் காணப் பகிரங்கமாய்க் கல்வாரி மலைமீது கருணையுடன் வீற்றிருந்து தமது திருக்கரங்களை விரித்து, நம்மை விளித்த விமலன் கிறீஸ்து இராஜாவன்றோ இப்போது நாம் பகிரங்கமாய் நமது இல்லங்களில் ஸ்தாபித்து வணக்கம் செய்வது தகாதென்று எந்த மனிதனும் சொல்லத் துணிவானோ
மேலும் கிறீஸ்து இராஜா குடும்பங்கள் தமக்குள்ள அக்கறையை அறியாதாருண்டோ தமது ஏக அலுவலான மோட்ச இராச்சியத்தை ஸ்தாபிக்கும் வேலையை நாசரேத் ஊரில் தாம் குடியிருந்த சிறு வீட்டில், பரிசுத்த குடும்பத்தில் ஆரம்பித்தார். கன்னித் தாயாருக்கு உதவி செய்தார், கைத் தாதை சூசையப்பருடன் தச்சுப் பட்டறையில் உழைத்தார்
தமது பிதா, மாதா, இருவருக்கும் கீழ்ப்படிந்து நடந்தார், குடும்ப விஷயங்களில் அவருக்குள்ள கவனத்தைக் காட்ட கானாவூர் கலியாணத்துக்குச் சென்று, தமது முதல் அற்புதத்தைச் செய்தார். குடும்பத்தில் இன்ப துன்பங்களைத் தாம் தமது முழு இருதயத்தோடு உணர்வதை வெளிப்படுத்தவே பெத்தானியாவில் இருந்த மரியம்மாள்(அர்ச். மரிய மகதலேனாள்) மார்த்தாள், லாசர் ஆகியோரின் வீட்டுக்குப்போய், அவர்களுடன் அநேக முறை அளவளாவி இருந்து, உணவு உண்டு, அவர்களுடைய வேலையை ஆசீர்வதித்து, புத்தி புகட்டி, பாவியான மரியம்மாளுக்கு மன்னிப்பு கொடுத்தார். மரித்த லாசரை அடக்கம் செய்து அவன் சகோதரிகள் அழுவதைக் கண்டு அவரும் கண்ணீர் விட்டழுதார். ஆகையால் யூதர்கள், “இதோ இவர் அவனை எவ்வளவாய் நேசித்திருந்தார்! என்றார்கள்” (அரு. 11:36)
தாம் சிநேகித்தவர்களுக்கு ஆறுதல் தரும்படியாக, மரித்து நான்கு நாட்களாக அடக்கம் பண்ணப்பட்டிருந்த லாசருக்கு அற்புதமாய் உயிரளித்தார். இவ்வாறு இருதய இராஜா குடும்பங்களின் நன்மை, தின்மைகளில் தாமும் கூடிக் களித்து விசனித்துத் தமது கரிசனத்தை வெளிப்படையாகக் காட்டினார் அல்லவா.....
தொடரும்...