சேசுவின் திருஇருதய அரசாட்சி பாகம் - 10

1907-ம் வருடத்தில் சங்.மத்தேயு குருவானவர் தமது தேக குணத்திற்காக அமெரிக்காவிலிருந்து  பாரேல மோனியாஸ் என்னும் திருத்தலத்திற்குத் தமது சிரேஷ்டரால் அனுப்பப்பட்டார். இருதய இராஜாவின் அன்பின் பெருக்கை அந்தக் குருவானவர் எப்போதும் தமது பிரசங்கங்களில் எடுத்துக் காட்டி, அத்திரு இருதயத்துக்கு மனிதர் செய்யும் நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரம் செய்ய தூண்டுவதே தமது முக்கிய அலுவலாய்க் கொண்டிருந்தார் 

அர்ச். மர்கரீத் மரியம்மாளுக்கு சிநேக அக்கினியால் நிறைந்த தமது இருதயத்தைப் பல தடவை காண்பித்து, மனிதருடைய நிந்தைப் பரிகாரத்தை ஆவலுடன் ஆசிப்பதாக ஆண்டவர் அருளிச் செய்த பாரேல மோனியால் ஆலயத்தை அடைந்த மத்தேயு குருவானவர் தமக்குப் பூரண சௌக்கியம் கிட்ட வேண்டுமென்று  கொஞ்சமும் பிரார்த்திக்கவில்லை. ஆனால் ஆண்டவருடைய திவ்விய இருதயத்தின் மட்டில் ஆழ்ந்த நேசம் தம்முள்ளத்தில் உண்டாகி நிரம்பவும், பரிசுத்த குருவாய் ஜீவித்து, பாக்கியமான மரணமடைய அனுக்கிரகம் பெறவும் உருக்கமாய் மன்றாடினார் 

இவ்வாறு அவ்வாலயத்தில் திரு இருதய இராஜாவிடம் அவர் இரந்து மன்றாடும்போது, கண்டுபிடிக்க இயலாத ஓர் மாற்றம் தம் சரீரத்தில் ஏற்பட்டதைத் திடீரென உணர்ந்தார் உடனே பூரண சுகமுமடைந்தார். அன்று மாலை திருமணி ஆராதனை நேரத்தில் அன்பின் இராஜாவின் பாதத்தில் கிறீஸ்தவக் குடும்பங்களை ஒவ்வொன்றாய்க் கொண்டுவந்து சேர்த்து, அவருக்கு அவைகளை ஒப்புக்கொடுத்து, உலக முழுமையுமே இவ்வாறு அவர் ஆட்கொண்டு அரசாட்சி புரிய வைக்கத் தகுந்த மகிமையான முறையொன்று அவருக்கு வெளியானது போல் தோன்றிற்று 

அதுமுதல் கிறீஸ்தவக் குடும்பங்களை இருதய இராஜா வுக்கு ஒப்புக்கொடுத்து, அவருக்கு நிந்தைப் பரிகாரஞ் செய்து ஒவ்வொரு வீட்டிலும் அவர் குடும்ப இராஜாவாகக் கொலுவிருந்து ஆளவைப்பதே தமது விசேஷ அப்போஸ்தலத்துவமாகக் கொண்டார் மத்தேயு குருவானவர் 

உடனே உரோமைக்குப் போய், கிறீஸ்து இராஜாவின் பிரதிநிதியாக திருச்சபையை அப்போது புகழுடன் ஆண்டு கொண்டிருந்த பரிசுத்த பிதா பத்தாம் பத்திநாதரிடம் தமது எண்ணத்தைத் தெரியப்படுத்தி, அவ்வித புதிய அப்போஸ்தலத்துவத் தொழிலைத் தாம் மேற்கொள்ள அவருடைய கருணையுள்ள அனுமதியை அளிக்க வேண்டுமென மன்றாடினார் 

சங். மத்தேயு குருவானவர் கூறியவற்றையெல்லாம் கவனத்துடன் கேட்ட அர்ச்.பத்திநாதர், “மகனே, நாம் அதற்கு உத்தரவளிப்பதில்லை” என்று கூற, “ஆனால் பரிசுத்த பிதாவே...'' என்று தமது மன்றாட்டைத் திரும்பவும் குருவானவர் இரட்டித்துச் சொல்லும்படி ஆரம்பிக்கவே, அன்பு நிறைந்த பரிசுத்த தந்தையானவர் அவரைத் தம்மிடம் அணுக தயவுடன் மொழிந்து, புன்னகை புரிந்து, “மகனே, நீர் கேட்ட காரியத்துக்கு நாம் உத்தரவளிப்பதில்லை. 

ஆனால் நீர் கூறும் இந்த அருமையான அப்போஸ்தலத்துவம் குடும்பங்களையும் சமுதாயங்களையும் சீர்ப்படுத்தக்கூடிய மிக மேன்மையான வழி என்று நாம் மனமகிழ்ந்து உணர்வதால், உமது மரணம் மட்டும் இந்த வேலையிலேயே நீர் ஈடுபட்டு, இருதய இராஜா சகல கிறீஸ்தவ இல்லங்களிலும் குடும்ப இராஜாவாக ஸ்தாபிக்கப்படும்படியாய் உழைக்க வேண்டுமென்று நாம் உமக்குக் கட்டளையிடுகிறோம்” என்று உற்சாகமூட்டி ஆசீர்வதித்து அனுப்பினார் 

தொடரும்...