"அந்த இராஜாங்கங்களின் நாட்களிலே பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஓர் இராச்சியத்தை எழும்பப் பண்ணுவார்” (தானி. 2.44)
கிறீஸ்து தேவ சுபாவத்திலும் மனித சுபாவத்திலும் தமது பிறப்பிலும் அந்தரங்க பகிரங்க ஜீவியத்திலும், திருப்பாடுகளிலும், மரணத்திலும், அற்புத உத்தானத்திலும், மகிமை ஆரோகணத்திலும், பரலோகம், பூலோகம், பாதாளங்களில் அடங்கிய சகல சிருஷ்டிகளுக்கும் இராஜாதிராஜனாய் இருக் கிறாரென்று பழைய, புதிய ஏற்பாடுகளில் இருந்து மேற்கோள் களையும் தாராளமாய் எடுத்துக்காட்டி நிலைநிறுத்தினோம்
இந்தக் கிறீஸ்து இராஜா எந்த வம்சத்தைச் சேர்ந்தவர், என்ன சுதந்திரத்துடன் தமது ஆளுகைக்கு வந்தார், இராஜாவினுடைய குணாதிசயங்கள் அவரிடம் எவ்வாறு விளங்கின என்பதையும் சுருக்கிக் கூறினோம்
இராஜாவினுடைய பிறப்பு, வளர்ப்பு, சுதந்திரம், பெயர் கீர்த்தி, நற்குணம் முதலியவற்றை அறிந்தபோதே அந்த இராஜாவின் இராச்சியம் எங்கே? அதன் விஸ்தீரணம் எவ்வளவு? அதன் செழுமை என்ன? அதன் துவக்கமும் முடிவும் எப்படி? என்னும் விசேஷங்களை அறிய எவர்க்கும் ஆவலுண்டாகுமல்லவா? ஆகையால் அந்த இராச்சியத்தின் வரலாற்றை இங்கு சற்று விவரிப்போம்.
தமது பகிரங்க சீவியத்தில் சேசுநாதர் செய்த பல அற்புதங்களை மனிதர் கண்டு, மெய்யாகவே உலகத்தில் வர வேண்டிய தீர்க்கதரிசி இவர்தான் என்றார்கள். ஆகையால் அவர்கள் தம்மை இராஜாவாக்கும்படி பலவந்தமாய் தம்மைப் பிடிக்க வரப்போகிறார்கள் என்று சேசுநாதர் அறிந்து மறுபடியும் தனியே மலையின் மேலேறி விலகிப் போனார் (அரு. 6:14,15). ஏனெனில் இவ்விதமாக பூலோக இராஜத்துவத்தை மேற்கொள்ள மனுமகன் இவ்வுலகில் வரவில்லை யென்று யாவரும் தெளிவாய் அறிந்துகொள்ளச் செய்தார்
மேலும் அவருடைய பாடுகளின் ஆரம்பத்தில், “நீ யூதருடைய இராஜாவோ” என்று பிலாத்து கேட்ட போது, “நான் இராஜா என்று நீரே சொல்லுகிறீர்” என்று மறுமொழி கூறி, தாம் மெய்யான இராஜா என்று அங்கீகரித்துக் கொண்டாலும், என் இராச்சியம் இவ்வுலகத்துக்கு அடுத்ததானால், நான் யூதர்களுக்குக் கையளிக்கப்படாதபடி என் சேவகர் மெய்யாகவே போராடியிருப்பார்கள். இப்படியிருக்க, என் இராச்சியம் இவ்வுலகத்துக்கு அடுத்ததல்ல” என்று (அரு. 18:36) திட்டமாய் தெளிவாய்த் திருவுளம்பற்றினார்.
ஆகவே, கிறீஸ்துவின் இராச்சியம் இவ்வுலகத்துக்கடுத்ததல்ல. இவ்வுலக இராஜாக்கள் முறையில் அவர் இராஜாங்கம் நடத்த வரவில்லை என்றும், ஆயினும் அவருடைய வார்த்தைகளாலும், கிரியைகளாலும், அவர் நிச்சயமாகவே இராஜா என்றும் வெளியானது. அப்படியானால் அவருடைய இராச்சியம் எங்கே?
ஆண்டவருடைய வழியை ஆயத்தம் செய்ய முன்னோடியாக வந்த அர்ச்.ஸ்நாபக அருளப்பர்:
“தவம் செய்யுங்கள், ஏனெனில் மோட்ச இராச்சியம் சமீபித்திருக்கிறது” என்றார் (மத். 3:2). ஆகையால் சேசுநாதர் இவ்வுலகில் வந்து ஸ்தாபித்து, நிலைநிறுத்தப் போகும் இராச்சியம் சாதாரண பூலோக இராச்சியமல்ல, ஆனால் மோட்ச இராச்சியமே ஆகிறது
நமதாண்டவருடைய சீவியத்தையும், அவருடைய போதனைகளையும், எச்சரிப்பையும், கண்டிப்பையும் சோதிக்கும்போது, ஸ்நாபக அருளப்பர் கூறியதுபோல் மோட்ச இராச்சியமே கிறீஸ்துவின் இராச்சியமென்றும், அந்த இராச்சியம் எவ்வளவு உந்நத மகிமை நிறைந்ததென்றும், அதில் உட்பட்டு அதன் நித்திய ஆனந்தத்தில் பங்கடைய ஆவலுள்ளவர்கள் என்ன விதிமுறைகளைப் பின்பற்றி ஒழுக வேண்டும் என்று, அந்த இராச்சியம் எவ்வாறு பரவி, சத்துருக்களை மேற்கொள்ளுமென்றும், அதைப் பரவச் செய்வோருக்கு என்ன சன்மானம் அளிக்கப்படுமென்றும், அந்த இராச்சியத்தில் உட்படாதவர்க்கு உண்டாகும் நஷ்டம் எத்தனை கனமானதென்றும் சேசுநாதர் தமது சீடர்களுக்கும், மற்ற ஜனங்களுக்கும் பல தடவையும் பலவிதமாகவும் தெரியப்படுத்தியிருக்கிறார் என்று தெளிவாகிறது
கிறீஸ்துவின் இராச்சியம் தொடரும்...