தப்பறையைப் போதித்து வரும் நவீனர்கள் , நாம் மாமரியை , எம் நம்பிக்கையே வாழ்க என்று வாழ்த்தி வணங்குவதைச் சகித்துக் கொள்ள மாட்டார்கள் . கடவுள் மட்டுமே நம் நம்பிக்கை என்பர் . மேலும் எரெமியாஸ் தீர்க்கத்தரிசியின் சொற்களில் , சிருஷ்டிகளில் தம் நம்பிக்கையை வைப்போரைக் கடவுள் சபிப்பர் என்பர் . " மனிதனை நம்புகிறவன் சபிக்கப்பட்டவன்" ( எரேமி 17 : 5 ) . மாமரி ஒரு சிருஷ்டி என்றும் , எவ்வாறு ஒரு சிருஷ்டி நம் நம்பிக்கையாக இருக்க முடியும் என்றும் தப்பறையைபோதிப்போர் கொக்கரிக்கின்றனர் . இருப்பினும் பரிசுத்த திருச்சபையானது , குருக்கள் மற்றும் துறவியரைத் தம் குரலெழுப்பி , மாமரியை விசுவசிகள் பெயரால் எங்கள் நம்பிக்கையே , அனைவரின் நம்பிக்கையே என்று வேண்டும்படி வற்புறுத்துகிறது .
எனவே பரிசுத்த திருச்சபை மாமரியை , சீராக் ஆகம சொற்களில் " புனித தெய்வ நம்பிக்கையினுடையவும்தாய் " ( சீராக் 24 : 24 ) என்றழைப்பதற்குக் காரணமில்லாமலில்லை , நம்முடைய இதயங்களில் புனித தெய்வ நம்பிக்கையைப் பிறப்பிக்கும் தாய் மாமரிதான் ; மறைந்து போகும் மற்றும் விரையமாகும் இவ்வுலக வாழ்வின் நன்மைகள் பற்றிய நம்பிக்கையல்ல, மாறாக நிலைத்திருக்கும் நித்திய மோட்சத்துக்குரிய நன்மைகள் மட்டிலான நம்பிக்கையைத் தோற்றுவிக்கிறார்கள் " நம் அன்னை மாமரி .
இத்தெய்வீக அன்னையை நோக்கி , புனித எஃபிரேம் ; " ஓ எம்ஆன்மாவின் நம்பிக்கையே வாழ்க ! ஓ கிறிஸ்தவர்களுடைய நிச்சயமான மீட்பே வாழ்க ! ஓ பாவிகளின் சகாயமே வாழ்க, விசுவாசிகளின் அரணே , உலகின் மீட்பே வாழ்க ! " என்று வாழ்த்தி வேண்டுகிறார் .பிற புனிதர்களும் கடவுளுக்குப் பின் நம் ஏக நம்பிக்கை மாமரி தான் என்று ஞாபகப்படுத்துகிறார்கள். எனவே அவர்கள் மாதாவை , " கடவுளுக்கடுத்தபடி எம் ஏக நம்பிக்கையே " என்றழைக்கின்றனர் .
முன்னர் தற்பெருமை கொண்ட எத்தனை பேர் , மாதா மட்டிலுள்ள பக்தி காரணமாகப் பணிவுள்ளவர்களாகமாறியுள்ளனர் ! எளிதிற் கோபங் கொள்ளும் எத்தனை பேர் சாந்தமுள்ளவர்களாகி யிருக்கிறார்கள் ! இருளின் மத்தியில் , எத்தனை பேர் ஒளியைப் பெற்றுள்ளனர் . அவநம்பிக்கையிலிருந்த எத்தனை பேர் நம்பிக்கை பெற்றுள்ளனர் ! இதே வல்லபம் மிக்க வழியால் , தீர்ப்பிடப்பட்ட எத்தனை பேர் மீட்பு பெற்றுள்ளனர் . இதனை மாதாவே எலிசபெத்தின் வீட்டில் அவர்களுடைய மாண்பு நிறை பாடலில் தெளிவாக முன்னுரைத்தார்கள் ; " இதோ இந்நாள் முதல் எல்லாத் தலைம்றைகளும் என்னைப் பேறுடையாள் எனப் போற்றுமே ! " ( லூக்கா 1 : 48 ) .
ஓ மனிதனே இறைவனின் திட்டங்களைப் பார் ! அத்திட்டங்கள் வழியேதான் இறைவன் தம் இரக்கத்தை நம் மீது ஏராளமாக பொழியக் கூடும் . ஏனெனில் , மனித இனம் முழுவதையும் மீட்க விரும்பிய கடவுள் , தேவதாய் தம் விருப்பப்படி பகிர்ந்தளிப்பதற்காக, மீட்பின் கிரையம் முழுவதையும் அன்னையின் கையில் ஒப்படைத்துள்ளார் .
எம் மீது கண்ணோக்கும் , மிகவும் இரக்கமுள்ள தாயே எம் மீது உம் கருணைக் கண்களைத் திருப்பியருளும். நாங்கள் உம்முடைய ஊழியர்கள் . உம் மீதே எம் நம்பிக்கையெல்லாம் வைத்துள்ளோம் .