தீமைக்கெதிராக போராடி வெற்றி கண்டவர் நம் புனிதர் மிக்கேல் அதிதூதர் .
கடவுளுக்கு நிகர் யார் ? ' என்னும் பெயருடைய புனித மிக்கேல் பற்றி நான்கு முறை விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது . யூதர்கள் எருசலேம் திரும்பிடத் தயை செய்யுமாறு தானியல் மன்றாடியபோது , கபிரியேல் தானியேலைப் பார்த்து , " பாரசீக நாட்டின் காவலனாகிய தூதன் இருபத்தொரு நாள் என்னை எதிர்த்து நின்றான் . அங்கே பாரசீகஅரசர்களோடு நான் தனித்து விடப்பட்டதால் தலைமைக்காவலர்களுள் ஒருவராகிய மிக்கேல் எனக்குத் துணை செய்ய வந்தார் " ( தானி 10 : 13 ) .
உலகம் முடிவு பற்றி தூதர் குறிப்பிடும் போது , " அக்காலத்தில் உன் இனத்தாருக்குத் தலைமைக் காவலரான மிக்கேல் எழும்புவார் . மக்களினம் தோன்றியது முதல் அக்காலம் வரை இருந்திராத துன்ப காலம் வரும் . அக்காலத்தில் உன் இனத்தார் விடுவிக்கப்படுவார் . நூலில் யார் யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ அவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள் " ( தானி 12 : 1 ) என்கிறார்.
மோவாபு நாட்டில் இறந்த மோசே அந்த நாட்டில் பெத்பகோருக்கு எதிரே உள்ள பள்ளத்தாக்கில் புதைக்கப்பட்டார். ஆனால் இன்று வரை கல்லறை எந்த இடத்தில் இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது ( இணை சட் 34 : 5 ) .
மோசேயின் உடலைக் கவர்ந்து சென்று யூத மக்களிடம் காட்டினால் , கடவுளைப் புறக்கணித்து விட்டு மோசேயை வணங்குமாறு தூண்ட முடியும் என்று அலகை திட்டமிட்டது .
அதை முறியடிக்கும் விதமாக மிக்கேல் கல்லறையைக் காவல் காத்தார் . மேலும் அலகையுடன் வாதிட்டார் . இத்தகவல் திருச்சபை ஏற்றுக்கொள்ளாத “மோசேயின் வெளிப்பாடு“ என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது . இதனை யூதா குறிப்பிட்டுள்ளார் ( யூதா 1 : 9 ) ."
விண்ணகத்தில் போர் மூண்டது . மிக்கேலும் , அவருடைய தூதர்களும் அரக்கப் பாம்போடு போர் தொடுத்தார்கள் ; அரக்கப் பாம்பும் , அதன் தூதர்களும் அவர்களை எதிர்த்துப் போரிட்டார்கள் . அரக்கப் பாம்பு தோல்வியுற்றது . விண்ணகத்தில் அதற்கும் , அதன் தூதர்களுக்கும் இடமே இல்லாது போயிற்று " ( திவெ 12 : 7,8 ) என்ற குறிப்பு இருக்கிறது .
இவை நான்கையும் வைத்து புனித மிக்கேலின் நான்கு பணியைக் கிறிஸ்தவ பாரம்பரியம் குறிப்பிடுகிறது.
01 . அலகைக்கு எதிராகப் போராடுகிறார் .
02 . விசுவாசிகளின் ஆன்மாவைத் தீயசக்திகளிடம் இருந்து , குறிப்பாக இறக்கும் நேரத்தில் பாதுகாக்கிறார் .
03 . பழைய ஏற்பாட்டில் யூதர்களுக்கும் , புதிய ஏற்பாட்டில் கிறிஸ்தவர்களுக்கும் பாதுகாவலராக இருந்த மிக்கேல் இன்று திருச்சபையின் காவலராக இருக்கிறார் .
04 .இறந்த மனிதர்களின் ஆன்மாவை இறுதித் தீர்வைக்கு உட்படுத்துகிறார் .
கி.பி. 404ஆம் ஆண்டு சிபான்றோ மக்கள் மீது பக்கத்தில் உள்ள நாட்டினர் போர் தொடுக்க முடிவெடுத்து எக்காளம் முழங்கினார்கள் . ஆணவத்தில் ஆர்பரித்தார்கள். கையறு நிலையில் இருந்த சிபான்றோ மக்கள் பக்தியுள்ள தங்கள் ஆயரை அணுகினார்கள் . தங்களுக்காக புனித மிக்கேலிடம் மன்றாடும்படி கேட்டார்கள் . அதன்படி எல்லோருமே இணைந்து செபிக்க ஆரம்பித்தார்கள்.இரவில் புனித மிக்கேல் ஆயரின் கனவில் தோன்றி மறுநாள் பகைவர் ஓடிவிடுவர் என்று கூறினார் .
மறுநாள் யுத்தம் ஆரம்பமானது . பெரும் புயல் வீசியது . பயங்கர இடியும் , மின்னலும் தாக்கியது எதிர்த்து நிற்க இயலாது எதிரிகள் ஓட்டம் எடுத்தார்கள் . தூதர் சொன்னபடியே நடந்ததால் மக்கள்ஆலயம் எழுப்பி தூதர் வழியாக பல புதுமைகளைப் பெற்று வருகிறார்கள் .புனித மிக்கேல் அனைத்து மலைப் பகுதிகளுக்கும் பாதுகாவலராக இருக்கிறார் . திருத்தந்தையர்களின் காவல் தூதராக இருக்கிறார் . மேலும் புனித மிக்கேல் " நற்கருணையின் காவலர் " என்று புனித யுற்றோபியஸ் குறிப்பிடுகிறார் .