மரியன்னையின் "ஆகட்டும்" என்ற சொல்

ஆகட்டும் என்ற சொல்லால் தன்னுடைய இளம் வயதிலேயே மிகுந்த துன்பங்களை ஏற்றுக்கொண்டவள் நம் அன்னை மரியாள். தகாத உறவு கொண்ட பெண்களை கல்லால் அடித்துக்கொல்வதே யூதர்கள் அளிக்கும் தண்டனை. இதுதான் வானதூதரிடம் அன்னை மரியாள் சொல்லும் ' ஆம் ' என்ற வார்த்தையின் சோகம். திருமணமாகும் முன்பே மரியாள் கருவுற்றிருப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?.

தகாத உறவு கொண்ட பெண்ணுக்கு யூத சமுதாயம் காட்டும் கொடுரத்தை தெரிந்திருந்தும் மரியாள் " ஆகட்டும் " என்று சொன்ன வார்த்தைதான் அன்பு என்பதற்கும், விசுவாசம், நம்பிக்கை என்பதற்கும் உண்மையான விளக்கம். இந்த இளம் வயதிலும் மரியாள் தான் வாழும் சமுதாயத்தின் சட்டதிட்டங்களை மீறி, கடவுள் மீது கொண்ட அன்பு, அவர் தன்னைக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை இவையெல்லாம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.

இறைவனுக்காக.  மரியாள் வரவழைத்துக்கொண்ட தைரியத்தை நாமும் வரவழைத்துக்கொண்டு இறைவனுக்கு சாட்சி பகர்ந்து மரியாளோடு பயணிக்க வேண்டும். மரியாள் சொன்ன இந்த " ஆகட்டும் " என்ற வார்த்தை மனிதர்களுக்குமுன் உயிரை பறிக்கும் வார்த்தை. இறைவனுக்கு முன் ஊழிக்காலமும் வாழவைக்கும் வார்த்தை என்பதை நாம் உணரவேண்டும்.

மிகக் கடினமான, துன்பம் நிறைந்த வேளைகளிலும், இறைவனின் இரக்கமும், நன்மைத்தனமும் மற்றனைத்தையும் விட மிகப் பெரியது.

ஆகவே அன்பிக்குரியவர்களே! இயேசுவுக்கு, உங்களை  முழு இதயத்தோடு, ஆம் எனச் சொல்லவும். அவரின் அழைப்புக்கு தாராளமனத்துடன் பதில் கூறவும், அவரை பின்பற்றவும் அஞ்ச வேண்டாம். நமது அவலம், பலவீனம் இவற்றின் மிகத் தாழ்ந்த நிலையை நாம் அடைந்துவிடும் வேளையில், நாம் மீண்டும் எழுந்துவர, உயிர்த்த இயேசு சக்தியைத்  தருகிறார். இயேசு உயிர்த்துவிட்டதால், நம் வாழ்வில் நிகழும் மிக எதிர்மறையான நிகழ்வுகளையும், புதிய இதயத்துடன், புதிய கண்களுடன் நம்மால் காண முடியும்.

 "அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார் "(யோவான் 1:12).