அன்னையின் திருப்பயணங்கள்

குழந்தை இயேசுவின் உயிரைப்பறிக்க தேடியவரான ஏரோது இறந்ததும் திருக்குடும்பம் மறுபடியும் இஸ்ரேயல் நாடு திரும்புகிறது. தாங்கள் புறப்பட்டுச் சென்ற பெத்லகேமிற்குத் திரும்பாமல் ஏன் கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்துக்கு செல்ல வேண்டும்? இதனை மத்தேயு நற்செய்தியாளர் இரண்டு இலக்குகளோடு விவரிக்கிறார். அதாவது இந்த நிகழ்வின் வாயிலாக எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன் ( ஓசேயா 11 : 1 ) என்ற இறைவாக்கினர் ஓசேயா சொன்னது நிறைவேறுகிறது. மேலும் இயேசு நாசரேத்தில் குடியிருந்ததால் " நசரேயன் " என அழைக்கப்படுகிறார்.

நாசரேத்தில் இருந்த மரியாள் மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்ற வேண்டிய நாள் வந்தபோது குழந்தை இயேசுவை அர்பணிக்க எருசலேமிற்கு கொண்டு செல்கின்றனர் ( லூக்கா 2 : 22). ஏற்கனவே மரியாள் பலவித துன்பங்களை அனுபவித்துள்ளார். இப்பொழுது மரியாளைக் கொல்லும் அடுத்த உணர்வு வறுமை. செல்வந்தர்கள் தங்கள் தலைப்பேறுகளை அர்பணிக்க இளங்காளைகளையும், செம்மரியாடுகளையும் அர்பணிக்கும் வேளையில், கடவுளின் திருமகனை அர்பணிக்க அவருக்கு வாங்க முடிந்ததெல்லாம் இரு மாடப்புறாக்கள். இதன் மூலம் முதல் கருத்தாக அன்னை மரியாள் நமக்குத் தருவது ' திருச்சட்டத்தை கடைபிடித்து கடவுளுக்குகந்த மக்களாக வாழ்வது. '

சீசருக்கு உரியதை சீசருக்கும் கடவுளுக்குரியதை கடவுளுக்கும் கொடுங்கள் ( மத் 22 : 21) என்ற இயேசுவின் வார்த்தையை வாழ்வாக்கியவர்தான் நம் அன்னை மரியாள். ஒன்றுமில்லா நிலையில் இரு மாடப்புறாக்களோடு கடவுளின் திருமகனை அர்பணிக்க வந்த மரியாளுக்கு ஆண்டவரால் கொடுக்கப்பட்ட வியப்புதான் இரு பெரியவர்களின் ஆசீர்வாதம். அவர்களே அன்னா மற்றும் சிமியோன் போன்றோர் ஆவர். இவர்கள் வெறுமனே ஆசீர்வதிக்கவில்லை. மாறாக வியப்பானவற்றையும் கூறுகின்றனர். இதன் மூலம் அன்னை மரியாள் நமக்கு கூறும் இரண்டாவது கருத்து ' வியப்பு. '

நம் வாழ்வில் கடவுளுக்கு உகந்தவராக வாழும் போது அல்லது ஏற்புடையதைச் செய்யும் போது, நடக்க வேண்டியது மட்டுமல்ல வியப்புகளும் வந்து சேர்கின்றன. இத்தகைய வியத்தகு செயல்கள் நம் வாழ்விலும் நடந்திருக்கும் என்பதில் எந்தவொரு ஐயமும் இல்லை. அதை நாம் ஏதவதொரு வழியில் உணர்ந்திருப்போம். நாம் ஒன்று நினைக்க தெய்வம் நமக்கு இன்னும் அதிக வியப்புகளை நினைக்கும். என்பதுதான் இன்றைய வாழ்வின் எதார்த்தம். இப்படியாக நாம் ஏற்கனவே பார்த்தது போல இரு மாடப்புறாக்களோடு சென்றவர்களுக்கு இரண்டு பெரியவர்களுடைய ஆசீர்வாதம் கிடைத்தது. காரணம் அவர்கள் கொண்டிருந்த திறந்த மனமாகும்.

ஆண்டவரின் வியத்தகு செயல்கள் நம்மில் செயலாற்ற அல்லது நாம் உணர்வதற்கு தேவை திறந்த மனமே என்றால் அது மிகையாகாது. வறுமையிலும், எளிமையிலும் ஆண்டவரின் வியத்தகு செயங்களை அனுபவித்தவர்தான் அன்னை மரியாள். காரணம் திறந்த மனதும் நேர்மையும் கீழ்படிதலான பண்புமாகும். எனவே நாமும் வறுமையிலும் எளிமையிலும் வாழும் போது ஆண்டவரின் வியத்தகு செயல்களை உணர திறந்த மனதோடும் நேர்மையோடும் கீழ்படிதலோடும் வாழ அன்னை மரியாள் இப்பயணத்தின் மூலம் ஆழைக்கிறார்.

நேர்மையில் பிறந்து கீழ்படிதலில் வளர்ந்து திறந்த மனதோடு வாழ்ந்து இறையருளை உணர்வோம்!!!