மீட்புச் செயலின் முதல் கனி அன்னை மரியாள்

"இது முதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர் " [ லூக்கா 1 : 48 ].

"மனிதராய் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை " { மத்தேயு 11 : 11 }. என்று இயேசுவாலேயே புகழப்படும் பேறுபெற்றவர் திருமுழுக்கு யோவான். இத்தகைய பேறு அவர் பெறக் காரணம் என்ன? இயேசுவோடு அவர் கொண்ட நெருங்கிய உறவும், ஒன்றிப்பும் அன்றோ! தாயின் வயிற்றில் இருக்கும் போதே மரியாளின் திருவயிற்றின் கனியான இயேசுவை சந்திக்கின்றார் யோவான். அந்த சந்திப்பினால் மீட்படைந்து பெரும் மகிழ்ச்சி கொண்டு துள்ளுகின்றார். " என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று.( லூக்கா நற்செய்தி 1: 43 - 44 ).

பிற்காலத்தில் இந்த யோவான் இயேசுவுக்கே திருமுழுக்கு அளிக்கின்றார். " இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தை போக்குபவர் " { யோவான் 1 : 23 }. என்று இயேசுவைச் சுட்டிக்காட்டி அவரை உலகின் மீட்பராக உலகுக்கு அறிமுகப்படுத்துகின்றார். இதனாலன்றோ, இவர் பேறுபெற்றவராகின்றார்.

இயேசுவை சந்தித்து, அவருக்கு திருமுழுக்கு அளித்து, அவரை மீட்பராக உலகுக்கு அறிவிக்கும் வாய்ப்பைப் பெற்ற காரணத்தினால், மனிதராய் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. என்று இயேசுவே புகழ்ந்து கூறும் அளவுக்கு திருமுழுக்கு யோவான் பேறுபெற்றவரென்றால், அந்த இயேசுவை தன் திருவயிற்றின் கனியாக ஏற்று ஒன்பது மாதங்கள் சுமந்து, பெற்றெடுத்து, பாலூட்டி சீராட்டி வளர்த்து, முப்பத்துமூன்று ஆண்டுகள் அவரோடு ஒன்றித்து வாழ்ந்து, இறுதியில் இறைத் தந்தையின் விருப்பப்படி அவரை சிலுவையில் பலியாக அளித்த அன்னை மரியாள் எத்தகைய பேறுபெற்றவளாக இருக்க வேண்டும். 

அந்த இயேசுவினுடைய மீட்புச் செயலின் முதல் கனியான மரியாள், அமல உற்பவியான மரியாள். முப்பொழுதும் கன்னியான மரியாள், அருளால் நிறைந்தவளான மரியாள், கடவுளின் தாயான கன்னி மரியாள் எத்துனை பேறுபெற்றவளாக இருக்க வேண்டும். ஆம், எக்காலமும், எல்லாத் தலைமுறைகளும் பேறுடையாள் என்று போற்றும் தகுதி அன்னை மரியாளுக்கு மட்டுமே உண்டு. இதனை மரியாளே இறைவாக்காக கூறுகின்றாள் : " இது முதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர் " ( லூக்கா 1 : 48 ).

இதையே மனுக்குலத்தின் சார்பாக பெண்ணொருத்தி ஆமோதித்து அறிக்கையிடுகின்றாள் : " உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர் " { 11 : 27 }.  இந்த மரியாள் தான் விண்ணகச் செல்வங்கள் அனைத்தையும் முழுமையாகப் பெற்றவள் என்பதை திருவெளிப்பாடு காட்சியும் சாட்சியமளிக்கின்றது : " வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது ; பெண் ஒருவர் காணப்பட்டார் ; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார் ; நிலா அவருடைய காலடியில் இருந்தது ; அவர் பன்னிரு விண்மீன்களைத் தலை மீது சூடியிருந்தார் " { திரு. வெளி 12 : 1 ). மெய்யாகவே மரியாள் பேறுடையாள்! ஆம், மனிதருள் மாபெரும் பேறு பெற்றவள். தன்னிகரில்லாத் தனிப் பெரும் பேறு பெற்றவள் அன்னை மரியாள் மட்டுமே.

அன்னை மரியாள் இத்தகைய பெரும் பேற்றினை அடைய அவள் அமைத்துக் கொண்ட அடித்தளம்  ' விசுவாசம் ' " ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர் " { லூக்கா 1 : 45 }. அதோடு அவள் தன் அனுதின வாழ்வில் கையாண்ட நெறிகள் எட்டு. இந்த எட்டு நெறிகளின் நிறைவுதான் இயேசு நமக்கு வழங்கிய எட்டு பேறுகள் :

ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.
 
துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர்.

கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.

நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவுபெறுவர்.

இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.

தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.

அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.

நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது. ( மத்தேயு நற்செய்தி 5: 3 - 10 ).

இந்த எட்டு பேறுகளுமே அன்னை மரியாளின் வாழ்வில் முழுமையாக நிறைவு பெறுகின்றன. இது எவ்வாறு என்பதை இனி ஒவ்வொன்றாக அலசி ஆராய்ந்து பார்ப்போம். அன்னை மரியாளைப் போல் வாழ்ந்து நாமும் இப்பேறுகளை அடைய முயற்சி எடுப்போம்.