இவ்வுலகில் வாழும் வரை, பரிசுத்தமாக ஜீவித்த ஆத்து மத்தின் மரணம் எவ்வளவு இனிமையானதாயிருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்! அது தேவ கற்பனைகளை அனுசரித்து வந்தது; தேவத்திரவிய அனுமானங்களைத் தகுதியோடும், அடிக்கடியும் பயன்படுத்தியது; விழிப்பாயிருந்து ஜெபித்தது; அடிக்கடி தேவகாரியங்களை தியானித்தது; எப்போதும் தேவ, பிறர் சிநேகங்களாலும், அவற்றிற்குரிய செயல்களாலும் நிறைந் திருந்தது; தேவ அன்னையின் அடைக்கலத்தில் தன்னை முழுவதும் ஒப்புக்கொடுத்து, அவர்களது பாதுகாவலிலிருந்து வெளி வராதபடி கவனமாயிருந்தது; சம்மனசுக்கள், புனிதர்களின் தோழமையையும், கடவுள் தனக்கு அளித்த சகல வரப்பிரசாதங்களையும் தனக்காகவும், பிறருக்காகவும் பயன்படுத்தி வந்தது; அது இப்போது நித்திய வெகுமதிக்குத் தகுதியுள்ளதாக இருக்கிறது.
ஆத்துமம் ஆண்டவரின் திவ்ய தரிசனத்தின் பேரின்பத்திற்குள் பிரவேசித்தவுடன் இனி அதற்குத் துன்பம் எதுவுமிராது. கர்த்தர் அவர்கள் கண்ணில் நின்று சகல கண்ணீரையும் துடைத்துவிடுவார்; இனி மரணமென்பதை அறிய மாட்டார்கள். புலம்புவதும், அழுவதும், துக்கதுயரமென்பதும் அங்கே இல்லை. பழையவை கடந்து போய் விட்டன! இனி பள்ளிக்கூடமில்லை பரீட்சைகளும், மதிப் பெண்களும் இல்லை! பள்ளிக் கட்டணமில்லை, எதிரிகள் இல்லை, விபத்துக்களும், நோய்களும், மருத்துவமனைகளும் இல்லை! அரசியல் இல்லை! முதுமையும், பென்ஷனுக்காகக் காத்திருப்பது மில்லை! காலையில் நெருக்கம் மிகுந்த பேருந்துப் பயணமும், காமுகர்களும் இல்லை. வட்டிக்குப் பணம் கொடுப்பவர்களும், அவர்களுக்குப் பயந்து ஒளிந்து திரிய வேண்டிய அவசியமும் இல்லை. வருடம் ஒரு டிகிரி என்று கூடும் வெப்பமில்லை, சுனாமி இல்லை, நிலநடுக்கமில்லை, தரித்திர மில்லை, பெண் கொள்வதும் கொடுப்பதுமில்லை, வரதட்சணை இல்லை, கஷ்ட நஷ்டமில்லை, பகலிரவு என்னும் நாள் பேதமில்லை,
குளிரும் உஷ்ணமுமில்லை. உலகம் , பசாசு, கெட்டுப்போன சரீரம் ஆகிய ஆன்ம ஆபத்துக்கள் இல்லை. நித்தியப் பேரின்பம், நித்திய சமாதானம். இடைவிடாத வசந்த காலம், எல்லா வித சந்தோஷமும் அங்கே நிறைந்திருக்கும். அங்கே பொறாமையோ, எவ்வித கலக உபத்திரவங்களோ காணக் கிடையாது. அந்த அன்பு நிறைந்த இராச்சியத்தில் எல்லோரும் ஒவ்வொருவரையும் உருக்கமாய் நேசிப்பார்கள். ஒவ்வொருவரும் மற்றவர்களின் ஆனந்த பாக்கியத் தைக் கண்டு அது தங்களுடைய சொந்த காரியம் போல் எண்ணி அகமகிழ்வார்கள். அங்கே வியாகுலம், அச்சம் என்பது கிடையாது. ஏனென்றால், தேவ இஷ்டப் பிரசாதத்தில் உறுதிப்பட்ட ஆத்துமமானது இனி பாவத்தைக் கட்டிக் கொள்ளவும், கடவுளை இழந்து போகவும் இயலாது.
ஆ பரகதி முழுவதிலும் அனைவரிலும் சிறந்தவர்களும், மோட்ச இராக்கினியுமாகிய மரியாயின் தரிசனமும், திவ்விய செம்மறிப்புருவை யாகிய சேசுவின் தரிசனமும் எப்பேர்ப்பட்டதாயிருக்கும்! அர்ச். தெரேசம் மாள் ஒரு தடவை சேசுநாதரின் கரத்தின் பிரகாசம் ஒரு கணம் மட்டும் மின்னி, மறைவதைக் கண்டாள். அதன் அழகு எவ்வளவுக்கு மனதைக் கொள்ளை கொள்வதாய் இருந்ததென்றால் அவள் அதனால் மயங்கிப் போனாள். பரலோக நறுமணம், வாசமும் மனதை முற்றும் கவர்ந்து கொள்ளும். வானவர்களின் சங்கீதங்களும், இனிய பாடல்களும், காதுக்கினிய சுகமான இன்பத்தைக் கொடுக்கும். அர்ச். பிரான்சிஸ் அசிசியாருக்கு ஒரு தடவை வானதூதர் ஒருவர் தோன்றி தன் கையிலிருந்த வயலினை ஒரே ஒரு முறை மீட்டியவுடன் தமக்கு உண்டான பேரானந்தத்தை சடத்தன்மையுள்ள இந்த உடலில் தாங்க முடியாதவராய் மயங்கி விழுந்து செத்தவர் போலானார் என்றால் மோட்சவாசிகளாகிய சகல அர்ச்சியசிஷ்டவர்களும், சகல சம்மனசுக்களும் ஒன்றாய்க் கூடி கர்த்தரின் மகிமையைக் கூடிப் பாடுவது எப்படியிருக்கும்? மோட்ச இராக்கினியாகிய தேவமாதாவே கடவுளைத் துதிப்பது எப்படியிருக்கும்! ஒரு குளிர்ச்சியுள்ள தோட்டத்தின் மத்தியில் அமர்ந்து நடு இரவில் பாடும் வானம்பாடியின் இனிய தொனி மற்ற எல்லாப் பறவைகளின் சப்தங்களைவிட மேலானதாயிருப்பது போல் மரியாயின் இனிய குரலும் தொனியுமிருக்கும் என்று அர்ச். பிரான்சிஸ் சலேசியார் கூறுகிறார். ஒரே வார்த்தையில் சொல்வதானால், பரலோகத்தில் நாம் விரும்பவும், ஆசிக்கவும் கூடிய சகலவித இன்ப சந்தோஷங்களும் இருக்கும். பரலோகம் நம் ஆசைகளின் முழு நிறைவேற்றமாக இருக்கும்!
ஆயினும். மோட்ச பேரின்பம் முற்றும் அடங்கியிருப்பது சர்வேசுரனிடத்தில்தான்! கடவுள் நமக்கு சம்பாவனையைத் தருவதாக வாக்களித்திருப்பதெல்லாம் அவரது மோட்சவீட்டின் அழகிலும் சிறப்பிலும், அதிசய பேரின்ப அமைப்பிலும், அதன் பலவிதமான இன்ப சந்தோஷங்களிலும் மட்டும் மல்ல, அனைத்திலும் முக்கியமாக அது அவரிலேயே அடங்கியிருக்கிறது! அதாவது: கடவுளை முகமுகமாய்த் தரிசிப்பதும், நேசிப்பதுமே பரலோகப் பேரின்பமாக இருக்கும். இப்போது நமது கண் ஒரு திரைச்சீலையால் மறைக்கப்பட்டிருக்கிறது. கடவுளை விசுவாசக் கண் கொண்டு மட்டுமே பார்க்கிறோம். அவர் தம்மை முழுதும் நன்றாய்க் காண்பிப்பதில்லை. ஆனால் அந்தக் கட்டு நம் கண்களிலிருந்து அவிழ்க்கப்பட்டு திரைச்சீலையும் உயர்த்தப்பட்டு, ஆண்டவரை முகமுகமாய்த் தரிசிக்கும் போது ஆண்டவரின் அழகு எப்படிப்பட்டது என்றும், அவர் எவ்வளவோ நீதியும், உத்தமத்தனமும் உள்ளவர், நமது அன்பிற்கு முற்றும் உரியவர் என்றும், நம்மை நேசிக்கிறவர் என்றும் அறிவோம். பரலோகத்தில் ஆத்துமத்தின் நித்திய ஆனந்த சந்தோஷம்!
இந்த வாழ்விலும் கூட ஆண்டவர் ஓர் ஆத்துமத்தைத் தமது தெய்வீக நேசத்தினுள் ஈர்த்துக் கொள்ளும் போது அது சந்தோஷத்தில் அமிழ்ந்தி பூலோக காரியங்களின் மேல் உள்ள சகல பற்றுதல் களையும் இழந்து போகிறது. மேலும், அவருடைய இராச்சியத்தையும், நீதியையும் முந்தந்தத் தேடுபவர்களுக்கு, உலக நன்மைகளும் கூட சேர்த்துக் கொடுக்கப்படும் என்றும் அவரே வாக்களித் திருக்கிறார். அப்படியிருக்க, பரலோகத்தில் பிரவேசிக்கையில் ஆத்துமமானது சர்வ நன்மைச் சுரூபி யானவரைக் கண்டு அரவணைக்கும் பாக்கியம் எப்பேர்ப்பட்டதாக இருக்கும்! அது உள்ளம் பூரித்து அகமகிழ்ச்சி கொண்டு உடனே அந்த நேச பேரின்பத்தில் மூழ்கி சர்வேசுரனிடமே தன்னை முழுவதும் இழந்து போகும்; அது முதல் தான் அடைந்த அந்த அளவிறந்த நன்மையைத் தோத்தரிப்பதையும் துதிப்பதையும் நேசிப்பதையுமே தவிர வேறு எதையும் அது நினைக்காது. ஆதலால் இப்பூலோகத்தில் துன்ப துரிதங்கள், சிலுவைகளால் உபத்திரவப்படும் போது மோட்சபரகதியை அடைவோமென்னும் நம்பிக்கையோடு அவைகளைப் பொறுமையோடு சகிக்க நம்மைத் திடப்படுத்திக் கொள்வோமாக.
ஆன்ம இரட்சணியத்தில் சேசுவோடு ஒத்துழைக்க முன்வாருங்கள்!
"நீங்கள் பூமியின் உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப் போனால் எதனால் சாரமாக்கப்படும்? இனி அது வெளியே கொட்டப்படுவதற்கும், மனிதரால்மிதிக்கப்படுவதற்குமன்றி, வேறொன்றுக்கும் உதவாது.
நீங்கள் உலகத்தின் ஒளியாயிருக்கிறீர்கள். பர்வதத்தின் மேலிருக்கிற பட்டணம் மறைவாயிருக்க மாட்டாது. தீபத்தைக் கொளுத்தி மரக்காலின் கீழ் வைக்காமல் வீட்டிலுள்ள யாவருக்கும் பிரகாசிக்கும்படி அதை விளக்குத் தண்டின் மேல் வைப்பார்கள். அவ்வண்ணமே மனிதர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரமண்டலங்களிலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப் படுத்தும் பொருட்டு, உங்கள் ஒளி அவர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கக்கடவது (மத். 5:13-16).