மனஸ்தாபப்படும் பாவியைக் கடவுள் மன்னிக்கிறார்.

"நீ அவரிடம் திரும்பி வருகையில் அவர் தமது முகத்தைத் திருப்பிக் கொள்ள மாட்டார்'' என்கிறது வேதாகமம் (நாளாகமம் 30). "என்னருகில் திரும்பி வா, நான் உன்னை ஏற்றுக்கொள்வேன்'' (எரேமி. 3); என் பக்கமாய் நீ திரும்பினால், நானும் உன் பக்கமாய்த் திரும்புவேன் (சக்கரி. 1:3) என்கிறார் ஆண்டவர்.

''அவர் உங்களைக் காப்பாற்றுவதாலேயே மகிமையடைவார்'' (இசை.30). மன்னிப்பளிக்க எவ்வளவு காலம் தாமதிப்பார்? ஒரு நிமிடம் கூட அல்ல! "நீ அழும்போது அழுது கொண்டிருக்க விட மாட்டார். தடையின்றி உனக்கு இரக்கம் காண்பிப்பார்" (இசை. 30). பாவியே, நீ அதிக நேரம் கண்ணீர் சிந்த விட மாட்டார். நீ சிந்தும் முதலாவது கண்ணீர்த் துளியைக் கண்டவுடன் கர்த்தர் உன்மேல் இரக்கமா யிருப்பார். "உன் அழுகைச் சத்தம் அவர் காதில் விழுந்தவுடனே அவர் உனக்குப் பதில் உரைப்பார்" (இசை. 30).

ஆயினும் "சகலத்தையும் அளவோடும், எண்ணத்தோடும், நிறையோடும் குறிப்பிட்டிருக்கிறீர் (ஞான. 11:21) என்ற வேதாகம வாக்கியத்தின்படி, கடவுள் ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் பூமியில் ஜீவிக்கும் நாட்கள் இத்தனை , அனுபவிக்கும் சுகம் இவ்வளவு, அவனுக்குத் தாம் அளிக்க நிச்சயிக்கும் சத்துவங்கள், நன்மைகள் இத்தனை என ஏற்கெனவே நியமித்திருப்பது போலவே, அவர் ஒவ்வொரு வருக்கும், மன்னிக்கும் பாவங்கள் இத்தனையென்றும் நியமித்திருக்கிறார்.

அந்தக் குறிக்கப்பட்ட தொகை நிரம்பியபின் அவர் மன்னிப்பதில்லை. அர்ச். அகுஸ்தீன் உரைப்பதாவது: ஒரு குறிக்கப்பட்ட காலம் வரை ஆண்டவர் அவனவன் மட்டில் இரக்கத்தோடு காத்திருப்பார். அந்தக் காலம் நிறைவேறின் பின்பு அவனுக்கு வேறு மன்னிப்புக் கொடுக்கப்பட இடமிராது என்பதை நாம் மறந்து போகலாகாது என்கிறார். செசரேயாவின் யுசேபியுஸ் என்பவரும் இவ்வாறே கூறுகிறார். "குறிக்கப்பட்ட ஓர் தொகை வரைக்கும் ஆண்டவர்காத்துக் கொண்டிருப்பார். அதற்குப் பின்கைநெகிழ்ந்து விடுவார்.''

எனவே மனந்திரும்புவதற்குக் காலம் தாழ்த்தாதீர்கள். பலர் ஏதாவது பொய்க் காரணங்கள் சொல்லிக்கொண்டு வருடக்கணக்கில் பாவசங்கீர்த்தனம் செய்யாமல் இருக்கிறார்கள். தங்கள் பங்குக்குரு நல்லவர் அல்ல என்பதால் பாவசங்கீர்த்தனம் செய்வதில்லை என்கிறார்கள். இவர்கள் வேறு நல்ல பாரம்பரியக் குருக்களிடம் பாவசங்கீர்த்தனம் செய்யலாமே! பலர் ''நான் கடவுளிடமே நேரடியாகப் பாவங்களைச் சொல்லிக் கொள்வேன்'' என்கிறார்கள்.

ஆனால் கிறிஸ்து நாதர் பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தைத் தம் குருக்களிடமே ஒப்படைத்திருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியாதா (அரு. 22:23)? உங்கள் வழக்கைக் குடியரசுத் தலைவர்தான் விசாரிக்க வேண்டும் என்று வற்புறுத்துவீர்களா? வேலைக்காகப் பிரதமரிடம் விண்ணப்பிப்பீர்களா? இவற்றிற்குரிய அதிகாரிகளிடம் நீங்கள் செல்வதுதானே முறை? மேலும், கடவுளிடம் நேரடியாகப் பாவசங்கீர்த்தனம் செய்வதால் உங்கள் பாவங்கள் உறுதியாக மன்னிக்கப்பட்டன என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? பாவமன்னிப்பை முத்திரையிட்டு உறுதிப்படுத்துவது பாவசங்கீர்த்தனகுருவின் வேலை என்பது உங்களுக்குத் தெரியாதா?

எனவே கால தாமதத்தையும், பொய்க் காரணங்களையும் விலக்குங்கள். உங்கள் நாளும் நேரமும் உங்களுக்குத் தெரியாது என்பதால் உடனே பாவசங்கீர்த்தனத் தொட்டிக்கு விரைந்து செல்லுங்கள்! சாவான பாவத்தில் மரிப்பவர்களுக்கென நரக பயங்கரம் காத்துக் கொண் டிருக்கிறது. விழிப்பாயிருங்கள்! விரைவாக உங்கள் ஆத்துமத்தைக் காத்துக் கொள்ளுங்கள்.