இரக்கத்தின் அரசி நம் அன்னை மாமரி

அரசர்களுக்கு அரசரின் தாய் என்ற பெருமைக்கு , புனிதமிக்க கன்னிமாமரி உயர்த்தப்பட்டிருப்பதால் , திருச்சபை அவர்களை , அரசி என்ற உன்னத பெயரால் மகிமைப் படுத்துவதற்கும், யாவரும் அவர்களை அவ்வாறு மகிமைப்படுத்த வேண்டுமென விரும்புவதற்கும் காரணமில்லாமலில்லை .

"மகன் ஒர் அரசன் என்றால் , அவரைப் பெற்றெடுத்த அன்னை , அரசி என்றும் ஆட்சிக்குரியவள் என்றும் நியாயப்படியும் உண்மையிலும் கருதப்படத்தக்கவரே " என்கிறார் புனித அத்தனாசியார் . சீயென்னாவின் பெர்னர்தீன் " நித்திய வார்த்தையின் தாயாயிருக்கச் சம்மதம் தெரிவித்த கணம் முதற்கொண்டு , மாமரி அச்சம்மதத்தினால் உலகினுடையவும் சகல படைப்புகளினுடையவும் அரசியாயிருக்கப்பேறுபெற்றார்கள்" என்றுரைக்கிறார். " மரியாயின் சரீரம் இயேசுவின் சரீரத்தினின்று வேறுபட்டதில்லை என்றிருக்கையில், எவ்வாறு மகனின் அரச மகிமைதாய்க்கு மறுக்கப்பட முடியும் ? " என்று கேட்கிறார் ஷார்த்து நகர் மடாதிபதி அர்னால்டு .

இயேசு எவ்வாறு இப்பிரபஞ்சம் முழுமைக்கும் அரசராயிருக்கிறாரோ அவ்வாறே மாமரி அதன் அரசியாவார் . "அரசி என்ற நிலையில் அவர்கள் , உரிமைப்படி , தம் திருக்குமரனின் அரசு முழுமையும் தமதாக்கிக் கொள்கிறார்கள் " என்றுரைக்கிறார் மடாதிபதி ரூபர்ட் . கடவுளுக்குப் பணி செய்ய எத்தனை படைப்புகள் உள்ளனவோ , அத்தனையும் மாமரிக்கும் பணி செய்கின்றன . விண்ணிலும் மண்ணிலும் இருப்பவை அனைத்தும் இறைவனின் ஆட்சிக்கு உட்பட்டிருப்பதுபோல் , அவையனைத்தும் மாமரியின் ஆட்சியுரிமைக்கும் உட்பட்டுள்ளன .

"அரசி இந்த சிறப்புப் பெயர் , பேரரசி என்ற பட்டப் பெயரினின்றும் மாறுபட்டது . பேரரசி என்பது கடுமையையும் கண்டிப்பையும் குறிக்கிறது . அரசி என்பதோ பரிவையும் எளியோர் மட்டில் அன்பையும் குறிக்கிறது " என்று புனித பெரிய ஆல்பர்ட் குறிப்பிடுகிறார் . அன்னை மரியாள் நம் அனைவருக்கும் அரசியாவாள் . அரசிதான் என்றாலும் தீயோரைத் தண்டிப்பதில் குறியாயுள்ள நீதியின் அரசியல்ல ; மாறாக, பரிவுடன் பாவிகளை மன்னிப்பதில் குறியாயுள்ள இரக்கத்தின் அரசியாவார் . இதன் காரணமாகவே , நாம் மரியாளை "இரக்கத்தின் அரசி" என்று சிறப்பாக அழைக்க வேண்டுமென்று திருச்சபை விரும்புகிறது .

பாரீஸ் பல்கலைக்கழகத் தலைவர் ஜான் ஜெர்சன் "நீதியும் இரக்கமும் ஒருங்கிணைந்த கடவுளின்அரசு , நம் ஆண்டவரால் பிரிக்கப்பட்டு , நீதியின் அரசைத் தமக்கென ஒதுக்கிக் கொண்டார் ; இரக்கத்தின் அரசைக் கன்னி மரியாயிக்கென ஒதுக்கினார் . அதேவேளையில் மானிடருக்கு அளிக்கப்படும் பரிவிரக்கம் அனைத்தும் மாமரியின் கரங்கள் வழியாகவே செல்லவேண்டும் என்றும் அவற்றை மரியாள் தம் விருப்பப்படி அளிக்கலாம் என்றும் நியமனம் செய்தார் . தம் உதிரத்தில் நித்திய வார்த்தையைக் கருத்தரித்துப் பெற்றெடுத்த போது , புனித கன்னிமாமரி , கடவுளின் அரசில் பாதியைப் பெற்றார்கள் . மரியாள் இரக்கத்தின் அரசியாகவும் , இயேசுக் கிறிஸ்து நீதியின் அரசராகவும் ஆனார்கள் . என்று எழுதியுள்ளார் .

திருச்சபை ஏன் மாமரியை இரக்கத்தின் அரசி என்று அழைக்கிறது?" என்று கேள்வி கேட்டு பதிலும் அளிக்கிறார் புனித பெர்நாத்து" ஏனெனில், மரியாள் இறைவனுடைய இரக்கத்தின் அதல பாதாளத்தினை அவர்கள் விரும்பும் நபருக்கு, விரும்பும் போது, விரும்புகிற அளவுக்குத் திறக்கிறார்கள். எனவே , அவர்கள் (மரியாள்) பாதுகாக்க விரும்பும் ஒருவர் எவ்வளவு பெரிய பாவியாயிருப்பினும் மீட்பின்றிச் சேதமுறுவதில்லை " . என்றார் .புனித போனவெந்தூரோ "ஓ மரியாயே! இரக்கத்தின் அரசியான தாங்கள் இரங்குதற்குறியவர்களுக்கு உதவி செய்ய எவ்வாறு மறுக்க முடியும்?" என்றும் "இரங்குதற்குரியோரல்லாது வேறு யார் இரக்கத்திற்குரியவர் ? தாங்கள் இரக்கத்தின் அரசி என்பதாலும், நான் பாவிகளில் மிகவும் நிர்பாக்கியன் என்பதாலும் தங்களின் இரக்கத்திற்கு உரியவர்களில் நான் முதன்மையானவன் என்பது தெளிவு ஓ மாதரசியே ! என்மீது தங்களின் பரிவிரக்கத்தை எவ்வாறு காட்டாதிருக்க முடியும் ? என்மீது இரங்கி , ஓ ! இரக்கத்தின் அரசியே , என் மீட்பின் பொறுப்பினை எடுத்துக்கொள்ளும்" என்று வேண்டுகிறார் .

தம்மிடம் பரிந்து பேசக் கேட்கும் மிகப் பெரிய மற்றும் பெரிதும் கைவிடப்பட்ட பாவிகளை இரட்சிப்பதற்காகவே புனித கன்னித்தாய் "இரக்கத்தின் அரசி" யாக நியமிக்கப்பட்டுள்ளார். புனித மரியாயெனும் அரசியே உங்கள் உதவியால் மீட்புபெற்ற பாவிகள்தான் தங்களுக்கு மோட்சத்தில் கிரீடமாவர்; அவர்களுடைய மீட்புதான் இரக்கத்தின் அரசியான தங்களுக்குப் பொருத்தமான மணிமுடியாம் என்று நம் தேவ அன்னையிடம் மன்றாடுவோம் .