புனித பாசி மரிய மதலேனாள் வாழ்க்கை வரலாற்றிலிருந்து 14 :

“நேசி துன்புறு, துன்புறு நேசி.” இவ்விரண்டும் ஒன்றிணைந்தே காணப்ப்டுகின்றன. ஏனெனில், நேசம் நம்மை துன்புற அழைக்கின்றது. துன்பம் நம்மை நேசிக்க அழைக்கின்றது. புனிதையின் உள்ளத்தில் நேசிப்பது, துன்புறுவது இரண்டும் ஒன்றொடொன்று இணைந்தே தோன்றின, வளர்ந்தன. சேசுவின்மீது கொண்ட அன்பினால் குழந்தை பருவத்திலிருந்தே புனிதை “ துன்புற “ விரும்பினாள். எல்லாரும் ஜெபிக்கிறார்கள். ஆனால், புனிதை சேசு கொண்ட அன்பை வளர்க்கவும், தனது துன்பத்தை அதிகரிக்கவும் ஜெபித்தாள்.

புனிதைக்கு நெருக்கமாக இருந்த சகோ. மரிய சொம்மை கூறுகிறார்: “ துன்புறுவதற்கு சகோ. மரிய மதலேனாள் கொண்டிருந்த ஆவல், அவர் ஆண்டவர்மீது கொண்ட தணியாத அன்பினாலேயே எழுந்தது. உள்ளரங்க அல்லது வெளியரங்க துயரங்கள் அவரை வாட்டியபோதும் ஆச்சரியத்திற்குரிய நம்பமுடியாத அளவுக்கு பொறுமையுடனும் மிக மகிழ்ச்சியுடனும் அத்துயரங்களை வரவேற்பார். ஒரு முறை அவர் துயரம் தாங்கமுடியாமல் கண்ணீர்விட்டழுதார். ஆனால் அதே நேரம் அவர் மகிழ்ச்சியுடனும், பிறருடன் பேசும்போது நட்புறவுடன் பேசிக் கொண்டும் இருந்தார்.” அப்படியானால் துயர்ங்களை புனிதை உணரவில்லை என்று எடுத்துக் கொள்ளலாமா, இல்லவேயில்லை. துயரங்களை அவள் உணர்ந்தாள். ஆனால் ஆண்டவர் மீது கொண்ட அன்பின் காரணமாக நம்மை கசப்பில் ஆழ்த்துகிற நிகழ்ச்சிகள் புனிதைக்கு இனிமை ஆயின.

ஒருமுறை சகோ. மரிய கிறிஸ்டினா, புனிதையின் கண்களும், முகமும் அவள் ஒரு அசாதாரண வலியினால் அவதியுறுவதை வெளிப்படுத்துவதைக் கண்டு புனிதையிடம், “ வலியினால் அவதிப்படுவதை நீங்கள் மறுக்க முடியாது “ என்றார். புனிதை அவரிடம் “ இல்லை “ என்று பதில் கூறினாள். சகோ. கிறிஸ்டினா புனிதையிடம், “ வலி உங்களை வாட்டுவதை மறைக்கிறீர்கள் “ என்று கூறினார். அதற்குப் புனிதை, “ வலி இருப்பது உண்மைதான். ஆனால் வலி எனக்குத் துயரத்தை உண்டு பண்ணவில்லை” என்று கூறினாள். ஆனால், முள் முடியினால் அவளது தலை வலித்தது உண்மைதான். ஒரு துன்பம் முடிந்ததும் புனிதை அடுத்த துன்பத்தை ஆவலுடன் வரவேற்பாள்.

ஒருநாள் சகோ. மரிய சொம்மை புனிதையிடம், “ தாயாரே, ஆண்டவர் உங்களுக்கு துன்பப்படுவதற்கான புதுப்புதுச் சந்தர்ப்பங்களை அனுப்பிக்கொண்டே இருக்கிறார்” என்றார். அதற்குப் புனிதை “ சகோதரி உண்மையில் நான் என்ன துன்பத்தை அனுபவிக்கிறேன்? என் வாழ்நாளில் இச்சந்தர்ப்பத்தை நான் பெறவேயில்லை. உண்மையில் நான் இவ்வுலக வாழ்வைவிட்டுச் செல்லும்முன் துன்புறுவதற்கான சந்தர்ப்பத்தை ஆண்டவர் எனக்குத் தருவார் என நம்பியிருக்கிறேன்” என்றார்.

சிங்கக்குகை ( சாத்தானின் சோதனைகாலம்) நாட்கள் முடிந்தவுடன் ஆண்டவர் அவளுக்கு அவரது வரப்பிரசாதத்தை உணர்கிற வாய்ப்பை அளித்தார். ஆனால் புனிதையோ, “ எதிர்காலத்தில் தனக்கு ஒருபோதும் ஞான ஆறுதலைத் தரவேண்டாம் என்றும், ஆண்டவர் மீது தான் கொண்ட அன்பின் காரணமாக, தான் எதுவுமில்லாமல் எப்போதும் வெறுமையாக இருக்க வேண்டும் என்றும் ஆண்டவரிடம் ஒப்பந்தம் செய்து கொண்டாள்.

பல ஆன்மாக்கள் ஆண்டவர் மீது கொண்ட அன்பின் காரணமாக தங்களது கிளர்ச்சி செய்யும் உடலை அடக்கி ஒறுத்து, பரிசுத்தத்தனத்தை  நோக்கி செல்வதை நாம் வாசிக்கிறோம். ஆனால் ஆண்டவரைப் பற்றி சிந்திக்கின்றபோது கிடைக்கிற மகிழ்ச்சியைக்கூட ஆண்டவருக்காக தியாகம் செய்ய முன்வருவோர் மிகச் சிலரே. நம் புனிதைக்கு ஆண்டவரே ஒளி; அவரே வாழ்வு, ஆனாலும்கூட இவ்வுலகிலேயே மறுவுலக பாக்கியத்தை, மகிழ்ச்சியை சுவைக்க புனிதை விரும்பவில்லை. எனவேதான் அவள் உள்ளத்தில் இருந்து “ சாவை அல்ல, துன்புறுவதையே விரும்புகிறேன் “ என்று சொல்ல முடிந்தது..

நன்றி : மாதா அப்போஸ்தலர்கள் சபை, தூத்துக்குடி “ மாதா பரிகார மலர், சிறந்த கத்தோலிக்க புத்தகங்களுக்கு தொடர்பு கொள்க. சகோ. பால்ராஜ் Ph. 9487609983, சகோ. கபரியேல் Ph.no. 9487257479.

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !