புனித பாசி மரிய மதலேனாள் வாழ்க்கை வரலாற்றிலிருந்து 15 :

“பரிசுத்ததனம் “

“சுபாவத்துக்கு மேற்பட்ட வரப்பிரசாதங்களின் நோக்கம் நம்மை நமது தொடக்கமும், முடிவுமான ஆண்டவரிடம் ஐக்கியப்படுத்துவது மட்டுமே ஆகும். ஆகவே, ஆண்டவரிடம் ஐக்கியமாகவேண்டுமென்று விரும்புகிற ஆன்மா, முதலில் தன்னை படைப்புயிர்கள்மீது தான் கொண்டுள்ள நேசம் என்ற கறையிலிருந்து தூய்மைப்படுத்த வேண்டும். அதன் பின்புதான் தெய்வீக உத்தமதனத்திற்குத் தன்னை அந்த ஆன்மாவால் தயாரிக்க முடியும் “ என்று அர்ச்.தியானிசியுஸ் தனது காட்சி தியானம் என்ற நூலில் குறிப்பிடுகிறார். இதனை புனிதை நன்கு புரிந்து கொண்டாள். ஆண்டவரோடு ஐக்கியமாக வேண்டும் என்ற அழைப்பை தனது சிறு வயதிலேயே பெற்றுக்கொண்ட புனிதைக்கு நாட்கள் செல்லச் செல்ல ஆண்டவரின் அழைப்பின் அவசரம் புரிந்தது. ஆண்டவரே அவள் நடக்க வேண்டிய பாதையை அவளுக்குக் காட்ட ஆரம்பித்தார்.

நாமும் அவளை அச்சமின்றி பின் தொடரலாம். ஞான வாழ்வில் முன்னேறியவர்களும், மிகவும் பின்தங்கியவர்களும், ஞான வாழ்வை துவக்குபவர்களும், பலவீனர்களும், ஞான வாழ்வைக் கண்டு அஞ்சுபவர்களும், ஞான வாழ்வில் வெதுவெதுப்பாக இருப்போரும் அவளைப் பின் தொடரலாம். அவளது சில அறிவுரைகள் இதோ :

“ ஆண்டவர் நமக்கு மறுவுலகில் அளிக்கும் பரிசு இவ்வுலகில் நாம் கொண்டுள்ள பரிசுத்ததனத்திற்கு ஏற்றபடியே அமையும் “

“ ஆண்டவர் முழுமையும் தூய்மையானவர். அவர் தம்மைப் பின்பற்றுவோர் தூய்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். அவருக்குப் பணி செய்ய விரும்புவோர் அனைத்து காரியங்களிலும் தன்னை மையப்படுத்தாமல் ஆண்டவர் ஒருவரையே மையப்படுத்தி பணியாற்ற வேண்டும்.”

அவள் பரவசமானபோது, அவளது வாய்மொழியாக ஆண்டவர் கூறிய வார்த்தைகள் :

“ ஆன்மா தனது எண்ணம், பாசம், ஆசை அனைத்தையும் ஆன்மாவைப் படைத்தவரும், அதன் ஆண்டவருமான நம்மையே நோக்கியதாக வைத்திருக்க வேண்டும். இதனை மாசு படுத்தும் எந்தவொரு நிழலையும், நினைவையும் கற்பனையையும் தனது இதயத்திலோ, மனதிலோ நுழைய அனுமதிக்கக் கூடாது. எந்த ஒரு ஆன்மா நம்மோடு உத்தம விதமாக இணைய விரும்புகிறதோ, அந்த ஆன்மாவில் நாம் எதிர்பார்க்கும் தூய்மை மிகப்பெரியது. மிகச் சிறிதொரு குறைபாடு கூட அந்த ஆன்மா நம்முடன் இணைவதை பாழ்படுத்திவிடும். ஆகவே, நம்மை நெருங்க விரும்பும் ஆன்மா ஒரு சிறு தவறு, ஒரு சிறு வீண் வார்த்தை முதலிய குப்பைகள் தன்னை நெருங்காதவாறு காத்துக் கொள்ள வேண்டும். “

1585-ம் ஆண்டு அர்ச். ஆகத்தம்மாளின் திருநாளுக்கு முன்தினம் புனிதை பரவசத்தின்போது பின்வருமாறு கூறினாள் :

“ ஆண்டவருடைய பரிசுத்ததனம் மிகப் பெரியது. நமது ஆன்மாவில் பாவத்தின் ஒரு சிறு நிழல் படிவதைக் கூட ஆண்டவரால் தாங்கிக் கொள்ள இயலாது. பாவம் என்று ஏன் சொன்னேன்? நான் சொல்வது ஒரு சிறு குறைபாடு. நாம் பேசும்போது பயன்படுத்தும் ஒரு சிறு வீண் வார்த்தைகூட ஆண்டவருடன் நாம் இணைவதைத் தடுத்துவிடும். நாம் மிக மிகச் சிறியது என நினைத்து செய்யும் ஒரு குறைபாடு கூட ஆண்டவரின் பரிசுத்ததனத்திற்கு முன்பு பெரிதாகத் தோன்றும். ஆகவே நாம் கவனமாக ஒவ்வொரு சிறு குற்றத்தையும் தவிர்க்க வேண்டும். அப்போதுதான் நாம் ஆண்டவருடன் இணைய முடியும். எந்த அளவுக்கு ஆண்டவரோடு இணைகிறோமா, அந்த அளவு நாம் பரிசுத்தமாவோம். எந்த அளவுக்கு பரிசுத்தமாவோமோ, அந்த அளவு ஆண்டவரது மகிழ்ச்சிக்கு ஆளாவோம்.”

மேலும் புனிதை கூறுகிறாள்,

“ நேசர் என்னிடம், எனக்காகவோ அல்லது அவருக்காகவோ அவரை நேசிப்பதை அவர் விரும்பவில்லை…. மேலும் நான் அவரில், அவருக்குள் வாழ வேண்டும். திருப்தியோ, அதிருப்தியோ, விருப்போ, வெறுப்போ, துயரமோ, மகிழ்ச்சியோ, வேறெதுவும் இல்லாமல் வாழ வேண்டும் என்று விரும்பினார் “ என்று புனிதை கூறினாள்.

நன்றி : மாதா அப்போஸ்தலர்கள் சபை, தூத்துக்குடி “ மாதா பரிகார மலர், சிறந்த கத்தோலிக்க புத்தகங்களுக்கு தொடர்பு கொள்க. சகோ. பால்ராஜ் Ph. 9487609983, சகோ. கபரியேல் Ph.no. 9487257479.

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !